Revised Common Lectionary (Complementary)
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.
16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
2 நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
3 பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.
4 பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.
5 என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
6 என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
நான் பெற்ற பங்கு மிக அழகானது.
7 எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
8 என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
9 என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.
அகசியாவிற்கு ஒரு செய்தி
1 ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது.
2 ஒரு நாள், அகசியா தன் வீட்டின் மேல்மாடியில் இருந்தான். அப்போது மரச் சட்டங்களாலான கிராதியின் வழியாகக் கீழே விழுந்துவிட்டான். அவனுக்கு பலமாக அடிபட்டுவிட்டது. அவன் தன் வேலையாட்களை அழைத்து அவர்களிடம், “எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய், அவர்கள் ஆசாரியர்களிடம், இந்த காயங்களில் இருந்து குணமடைவேனா” என்று விசாரித்து வரும்படி சொன்னான்.
3 ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம், “சமாரியாவில் இருந்து தூதுவர்களை ராஜா அகசியா அனுப்பி இருக்கிறான். நீ சென்று அவர்களைச் சந்திப்பாயாக. அவர்களிடம், ‘இஸ்ரவேலில் ஒரு தேவன் இருக்கிறார்! ஆனால் நீங்கள் அனைவரும் எதற்காக எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கச் செல்கிறீர்கள்? 4 ராஜா அகசியாவிடம் இவ்விஷயங்களைச் சொல்லுங்கள்: பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கத் தூதுவர்களை அனுப்பினாய். இக்காரியத்தை நீ செய்ததால், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே மரித்துப்போவாய் என கர்த்தர் சொல்கிறார்!’ என்று சொல்” என்றான். பிறகு அங்கிருந்து கிளம்பி எலியா இவ்விதமாகவே அகசியாவின் ஆட்களிடம் சொன்னான்.
5 தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
6 அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய ராஜாவிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க ராஜா தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’” என்றனர். 7 அகசியா அவர்களிடம், “உங்களைச் சந்தித்து இதைச் சொன்னவன் எப்படி இருந்தான்?” என்று கேட்டான்.
8 அவர்களோ, “அவன் ரோமத்தாலான மேலாடையை அணிந்திருந்தான். இடுப்பில் தோல் கச்சை இருந்தது” என்றனர்.
பின் அகசியா, “அவன் திஸ்பியனாகிய எலியா தான்!” என்றான்.
அகசியாவால் அனுப்பப்பட்ட தளபதிகளை அக்கினி அழித்தது
9 அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு ராஜா சொல்கிறார்” என்றான்.
10 எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான்.
அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது.
11 அகசியா இன்னொரு தளபதியையும் 50 பேரையும் அனுப்பிவைத்தான். அத்தளபதியும், “தேவமனிதனே! நீங்கள் விரைவாக கீழே இறங்கவேண்டும் என்று ராஜா சொல்கிறார்!” என்றான்.
12 அதற்கு எலியா, “நான் தேவ மனிதனானால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும், உன் 50 வீரர்களையும் அழிக்கட்டும்!” என்றான்.
பின் தேவனுடைய அக்கினி பரலோகத்திலிருந்து வந்து அந்த தளபதியையும் 50 வீரர்களையும் அழித்தது.
13 அகசியா மூன்றாவதாக ஒரு தளபதியை 50 ஆட்களுடன் அனுப்பிவைத்தான். அவர்களும் எலியாவிடம் வந்தனர். பின் தளபதி, “தேவமனிதனே, என்னுடைய உயிரையும், உங்கள் ஊழியர்களாகிய இந்த 50 பேருடைய உயிர்களையும் காப்பாற்றுங்கள். 14 பரலோகத்தில் இருந்து வந்த அக்கினி ஏற்கெனவே வந்த இரண்டு தளபதிகளையும் அவர்களுடன் வந்த 50 வீரர்களையும் அழித்துவிட்டது. இப்போது எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
15 கர்த்தருடைய தூதன் எலியாவிடம், “தளபதியோடு செல், அவனைக்கண்டு பயப்படவேண்டாம்” என்றான்.
எனவே எலியா ராஜாவாகிய அகசியாவைப் பார்க்கத் தளபதியோடு போனான்.
16 எலியா அகசியாவிடம், “தேவன் இப்படிக் கூறுகிறார். அதாவது: இஸ்ரவேலில் தேவன் இருக்கிறார். அவரிடம் கேட்காமல் ஏன் எக்ரோனின் தேவனான பாகால் சேபூபிடத்தில் தூதுவர்களை அனுப்புகிறாய். நீ இவ்வாறு செய்ததால் நோய் குணமாகாமல் படுத்தப்படுக்கையிலேயே மரித்துவிடுவாய்!” என்றான்.
கலாத்திய கிறிஸ்தவர்கள் மீது பவுலின் அன்பு
8 முன்பு நீங்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. மெய்யாகவே தேவன் அல்லாத கடவுள்களுக்கு நீங்கள் அடிமைகளாகி இருந்தீர்கள். 9 ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்துகொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்துகொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள். 10 நீங்கள் இப்போதும் சிறப்பான நாட்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் பற்றிச் சட்டங்கள் கூறுவதைப் பின்பற்ற விரும்புகிறீர்கள். 11 நான் உங்களை எண்ணி அஞ்சுகிறேன். நான் உங்களுக்காக உழைத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்றோ என்று அஞ்சுகிறேன்.
12 சகோதர சகோதரிகளே நானும் உங்களைப் போன்றவன். எனவே, நீங்கள் என்னைப்போல மாறுங்கள். நீங்கள் என் முன்பு நல்லவர்களாகவே இருக்கிறீர்கள். 13 உங்களிடம் நான் முதன்முதல் எதற்காக வந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். ஏனென்றால் அப்போது நான் நோயாளியாய் இருந்தேன். அப்போதுதான் நான் நற்செய்தியை உங்களுக்குப் போதித்தேன். 14 எனது நோய் உங்களுக்குப் பாரமாயிற்று. எனினும் நீங்கள் என்னை வெறுக்கவில்லை. என்னை விலக்கவில்லை. என்னை தேவதூதனைப் போல வரவேற்றீர்கள். என்னை இயேசு கிறிஸ்துவைப் போன்று ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள். 16 இப்பொழுது நான் உண்மையைச் சொல்வதால் உங்களுக்கு எதிரியாகிவிட்டேனா?
17 அவர்கள் உங்களைத் தேடி கடுமையாய் உழைக்கிறார்கள். ஆனால், இது உங்கள் நன்மைக்காக அல்ல. அது எங்களுக்கு எதிராயிற்று. என்னைப் பிரிந்து நீங்கள் அவர்களைப் பின்பற்றவேண்டும் என்றே விரும்புகிறார்கள். 18 நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் மக்கள் உங்களிடம் ஆர்வம் காட்டுவது நல்லது. இது எப்பொழுதும் உண்மை. உங்களோடு நான் இருக்கும்போது மட்டுமல்ல, உங்களை விட்டுவிலகிய பிறகும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் காட்ட வேண்டும். 19 என் சிறு பிள்ளைகளே, மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன். 20 நான் இப்போது உங்களுடன் இருப்பதை விரும்புகிறேன். பின்னர் வேண்டுமானால் உங்களோடு பேசின விதத்தை மாற்றிக்கொள்ள முடியும். உங்களைக் குறித்து என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.
2008 by World Bible Translation Center