Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல்.
64 தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன்.
என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
2 என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
3 அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள்.
அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை.
அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
4 அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான,
சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள்.
5 அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி, “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
6 அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் பலியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
7 ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்!
தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
8 தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள்.
ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும்.
அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும்.
அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
9 தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள்.
அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள்.
அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள்.
தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
10 நல்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள்.
நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
பார்வோன்: ஒரு சிங்கமா அல்லது முதலையா?
32 சிறைபிடிக்கப்பட்ட பன்னிரெண்டாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் (மார்ச்) முதலாம் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் கூறினார்: 2 “மனுபுத்திரனே, எகிப்து ராஜாவாகிய பார்வோனைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு:
“‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய்.
ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன்.
நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய்.
நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய்.
நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’”
3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன்.
இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன்.
அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள்.
4 பிறகு நான் உன்னை வெறுந்தரையில் விடுவேன்.
நான் உன்னை வயலில் எறிவேன்.
எல்லாப் பறவைகளும் வந்து உன்னைத் உண்ணும்படிச் செய்வேன்.
காட்டு மிருகங்கள் எல்லா இடங்களிலுமிருந்து வந்து வயிறு நிறையும்வரை உன்னை உண்ணும்.
5 நான் உனது உடலை மலைகளில் சிதற வைப்பேன்.
நான் பள்ளத்தாக்குகளை உனது மரித்த உடலால் நிரப்புவேன்.
6 நான் உனது இரத்தத்தை மலைகளில் சிதறுவேன்.
அது தரைக்குள் ஊறிச்செல்லும்.
நதிகள் உன்னால் நிறையும்.
7 நான் உன்னை மறையும்படி செய்வேன்.
நான் வானத்தை மூடி நட்சத்திரங்களை இருளச் செய்வேன்.
நான் சூரியனை மேகத்தால் மூடுவேன், நிலவு ஒளிவிடாது.
8 நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன்.
நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன்.
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
9 “நான் உன்னை அழிக்கப் பகைவரைக் கொண்டுவரும்போது பல ஜனங்கள் வருந்தி கலக்கமடையும்படிச் செய்வேன். உனக்குத் தெரியாத நாடுகள் கூடத் துக்கப்படும். 10 உன்னைப்பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் ராஜாக்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் ராஜாக்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு ராஜாவும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”
சிறுவன் குணமாக்கப்படுதல்
(மத்தேயு 17:14-18; மாற்கு 9:14-27)
37 மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர். 38 ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே குமாரன். 39 பிசாசிடம் இருந்து ஓர் அசுத்த ஆவி என் மகனைப் பற்றிக்கொள்ளும்போது அவன் கத்துகிறான். அவன் தனது நிலையை இழக்கும்போது வாயிலிருந்து நுரைதள்ளுகிறது. அசுத்த ஆவி அவனைக் காயப்படுத்தி, அவனை எப்போதும் விடாமல் துன்புறுத்துகிறது. 40 உங்கள் சீஷர்களிடம் என் மகனை விட்டு அந்த அசுத்த ஆவி நீங்குமாறு செய்யக் கெஞ்சினேன். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை” என்று உரக்கக் கூறினான்.
41 இயேசு, “இப்போது வாழும் மக்களாகிய உங்களுக்கு விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை தவறானதாகக் காணப்படுகிறது. எத்தனை காலம் நான் உங்களோடு தங்கியும், உங்களைப் பொறுத்துக்கொண்டும் இருக்கட்டும்?” என்று பதிலளித்தார். பின்பு அம்மனிதனை நோக்கி, “உனது மகனை இங்கே கொண்டு வா” என்றார்.
42 அந்தப் பையன் வந்துகொண்டிருக்கும் போது அசுத்த ஆவி அவனைக் கீழே தள்ளிற்று. அந்தப் பையன் தனது நிலையையிழந்து நடுங்கிக்கொண்டிருந்தான். ஆனால் இயேசு அந்த அசுத்த ஆவி அவனைவிட்டு வெளியேறக் கண்டிப்புடன் கட்டளையிட்டார். அப்பையன் நலம் பெற்றான். இயேசு பையனைத் தந்தையிடம் ஒப்படைத்தார். 43 தேவனின் மகத்துவத்தையும் பெருமையையும் கண்டு எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்
(மத்தேயு 17:22-23; மாற்கு 9:30-32)
இயேசு செய்த எல்லா செயல்களையும் கண்டு இன்னும் மக்கள் மிகுந்த ஆச்சரியமுற்றனர். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை நோக்கி,
2008 by World Bible Translation Center