Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல்.
64 தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன்.
என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
2 என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
3 அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள்.
அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை.
அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
4 அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான,
சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள்.
5 அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி, “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
6 அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் பலியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
7 ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்!
தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
8 தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள்.
ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும்.
அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும்.
அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
9 தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள்.
அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள்.
அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள்.
தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
10 நல்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள்.
நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
யோபு பதில் கூறுகிறான்
19 அப்போது யோபு பதிலாக:
2 “எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி,
உங்கள் வார்த்தைகளால் என்னை உடைப்பீர்கள்?
3 நீங்கள் இப்போது என்னைப் பத்துமுறை இழிவுப்படுத்தியிருக்கிறீர்கள்.
நீங்கள் என்னைத் தாக்கும்போது வெட்கமடையவில்லை.
4 நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும்.
அது உங்களைத் துன்புறுத்தாது.
5 என்னைக் காட்டிலும் உங்களைச் சிறந்தவர்களாகக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்கள்.
என் தொல்லைகள் என் சொந்தத் தவறுகளால் நேர்ந்தவை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
6 ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார்.
என்னைப் பிடிப்பதற்கு அவர் ஒரு கண்ணியை வைத்தார்.
7 ‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை.
நான் உரக்க உதவிக்காகக் கூப்பிட்டாலும், நியாயத்திற்காக வேண்டும் என் குரலை ஒருவரும் கேட்கவில்லை.
8 தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை.
அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார்.
9 தேவன் என் பெருமையை எடுத்துப்போட்டார்.
அவர் என் தலையின் கிரீடத்தை (முடியை) எடுத்தார்.
10 தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார்.
வேரோடு வீழ்ந்த மரத்தைப்போன்று அவர் என் நம்பிக்கையை அகற்றினார்.
11 தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது.
அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார்.
12 தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார்.
என்னைத் தாக்குவதற்கு என்னைச் சுற்றிலும் கோபுரங்களை எழுப்புகிறார்கள்.
என் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
13 “என் சகோதரர்கள் என்னை வெறுக்கும்படி தேவன் செய்தார்.
என் நண்பர்களுக்கு நான் ஒரு அந்நியனானேன்.
14 என் உறவினர்கள் என்னை விட்டு சென்றார்கள்.
என் நண்பர்கள் என்னை மறந்துப்போனார்கள்.
15 என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும்
என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள்.
16 நான் என் பணியாளைக் கூப்பிடும்போது, அவன் பதில் தருவதில்லை.
நான் உதவிக்காகக் கெஞ்சும்போதும் என் பணியாள் பதில் தரமாட்டான்.
17 என் மனைவி என் மூச்சின் வாசனையை வெறுக்கிறாள்.
என் சொந்த சகோதரர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
18 சிறு குழந்தைகளும் என்னைக் கேலிச்செய்கிறார்கள்.
நான் அவர்கள் அருகே வரும்போது அவர்கள் கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
19 என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
நான் நேசிக்கும் ஜனங்கள் கூட எனக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
20 “நான் மிகவும் மெலிந்துபோனேன்.
என் தோல் எலும்போடு ஒட்டித் தொங்குகிறது.
எனக்குச் சற்றே உயிர் மீந்திருக்கிறது.
21 “என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்!
எனக்கு இரங்குங்கள்!
ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
22 தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்?
என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா?
கிறிஸ்துவில் ஒன்றாகுதல்
11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். 12 கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. 13 ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.
14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். 15 யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார். 16 இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார். 17 தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார். 18 ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.
19 ஆகவே யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள். 20 விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரக்கல்[a] போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாவார். 21 அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார். 22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
2008 by World Bible Translation Center