Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல்.
64 தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன்.
என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும்.
2 என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும்.
3 அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள்.
அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை.
அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை.
4 அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான,
சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள்.
5 அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர்.
அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி, “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
6 அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் பலியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
7 ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்!
தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள்.
8 தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள்.
ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும்.
அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும்.
அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
9 தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள்.
அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள்.
அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள்.
தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
10 நல்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள்.
நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
பில்தாத் யோபுவுக்குப் பதில் கூறுகிறான்
18 சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:
2 “யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்?
அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்).
3 நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்?
4 யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது.
உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா?
உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா?
5 “ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும்.
அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும்.
6 வீட்டின் ஒளி இருளாகும்.
அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும்.
7 அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது.
ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான்.
அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும்.
8 அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும்.
அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான்.
9 அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும்.
ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும்.
10 தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும்.
அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும்.
11 சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்.
அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும்.
12 கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும்.
அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும்.
13 கொடிய நோய் அவனது தோலை அரிக்கும்.
அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும்.
14 தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான்.
பயங்கரங்களின் ராஜாவைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான்.
15 அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது.
ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும்.
16 கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும்,
மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும்.
17 பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள்.
ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.
18 ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள்.
அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள்.
19 அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது.
அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள்.
20 மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள்.
கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள்.
21 தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும்.
தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான்.
கிறிஸ்துவில் காணப்படும் ஞானம்
18 கெட்டுப்போகிற மக்களுக்குச் சிலுவை பற்றிய போதனை முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ, அது தேவனுடைய வல்லமையாகும்.
19 “நான் ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்.
நான் மேதைகளின் அறிவைப் பயனற்றதாக்குவேன்.”(A)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.
20 தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். 21 தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.
22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 24 ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். 25 தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது.
26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 27 ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். 28 உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். 29 எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். 30 உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார். 31 எனவே எழுதப்பட்டுள்ளபடி “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்.”(B)
2008 by World Bible Translation Center