Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 65:1-9

தேவனைப்பற்றி அனைவரும் கற்றுக்கொள்வார்கள்

65 கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் ஆலோசனை கேட்க வராதவர்களுக்கும் நான் உதவினேன். ஜனங்கள் என்னைத் தேடாமல் இருந்தும் கண்டுகொண்டார்கள். எனது பெயரால் அழைக்கப்பட தகுதியற்ற ஜனங்களிடமும் நான் பேசினேன். ‘இதோ நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொன்னேன்”

“எனக்கு எதிராகத் திரும்பிய ஜனங்களை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற ஜனங்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து நன்மையற்ற வழியில் வாழ்ந்துகொண்டிருந்தனர். அவர்களின் இதயங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர். அந்த ஜனங்கள் எப்பொழுதும் என் முன்னால் இருந்து என்னைக் கோபமூட்டுகின்றனர். அந்த ஜனங்கள் சிறப்பான தோட்டங்களில் பலி கொடுக்கிறார்கள். நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். அந்த ஜனங்கள் கல்லறைகளுக்கு இடையில் அமர்கிறார்கள். மரித்த ஜனங்களிடமிருந்து செய்தி வரும் என்று காத்திருக்கின்றனர். அவர்கள் மரித்த உடல்களுக்கு இடையில் வாழ்கிறார்கள். அவர்கள் பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள். அவர்களின் கத்திகளும் கரண்டிகளும் அழுகிய இறைச்சியால் அசுத்தமாயின. ஆனால் அந்த ஜனங்கள் மற்றவர்களிடம், ‘என்னருகில் வராதீர்கள். நான் உன்னைச் சுத்தம் செய்யும்வரை என்னைத் தொடாதீர்கள்,’ என்கின்றனர். அந்த ஜனங்கள் என் கண்களில் படியும் புகையைப்போன்றவர்கள். அவர்களின் நெருப்பு எப்பொழுதும் எரிகிறது.”

இஸ்ரவேல் தண்டிக்கப்படவேண்டும்

“பார்! இங்கே, செலுத்தப்பட வேண்டியவற்றுக்கான பத்திரம் உள்ளது. உங்கள் பாவங்களுக்கு நீர் குற்ற உணர்வுகொள்வதாக இந்தப் பத்திரம் காட்டுகிறது. நான், இந்தப் பத்திரத்திற்குரியதைச் செலுத்தும்வரை அமைதியாக இருக்கமாட்டேன். உன்னைத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பத்திரத்தைச் செலுத்துவேன். உனது பாவங்களும், உனது முன்னோர்களின் பாவங்களும் ஒன்றுபோல்தான் உள்ளன. உங்கள் முற்பிதாக்கள் மலைகளில் நறுமணப் பொருட்களை எரித்தபோது இந்தப் பாவங்களைச் செய்தனர். அம்மலைகளில் அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் அவர்களை முதலில் தண்டித்தேன். அவர்களுக்கு ஏற்ற தண்டனையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.”

கர்த்தர் கூறுகிறார், “ஒரு திராட்சைக் குலையில் இரசம் காணப்படும்போது, ஜனங்கள் இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்கின்றனர். ஏனென்றால், அந்தத் திராட்சைகள் மேலும் பயன்படுத்தப்படும். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் அவர்களை முழுமையாக அழிக்கமாட்டேன். யாக்கோபின் (இஸ்ரவேல்) ஜனங்களில் சிலரைப் பாதுகாப்பேன். யூதாவிலுள்ள சில ஜனங்கள் எனது மலையைப் பெறுவார்கள். அங்கே என் ஊழியர்கள் வாழ்வார்கள். அங்கே வாழும் ஜனங்களை நான் தேர்ந்தெடுப்பேன்.

சங்கீதம் 22:19-28

19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
    நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
20 கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.
    அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும்.
21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.
    காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.

22 கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.
    பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
    அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
    இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
    கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.

25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
    உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
    கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
    உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
    எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28 ஏனெனில் கர்த்தரே ராஜா.
    அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.

கலாத்தியர் 3:23-29

23 இந்த விசுவாசம் வருவதற்கு முன்னால் நாம் எல்லாரும் சட்டத்தால் சிறைப்படுத்தப்பட்டிருந்தோம். தேவன் நமக்கு விசுவாசத்திற்குரிய வழியை வெளிப்படுத்தும்வரை நமக்கு விடுதலை இல்லாதிருந்தது. 24 எனவே, கிறிஸ்து வரும் வரை சட்டம் நமது எஜமானனாக இருந்தது. இயேசு வந்த பிறகு நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கு வேண்டியவர்களாக ஆனோம். 25 இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.

26-27 நீங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள். எனவே நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விசுவாசத்தின் வழியில் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டீர்கள் என்பதை இது காட்டும். 28 இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான். 29 நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் ஆபிரகாமின் பரம்பரையினர். ஆகவே தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்கிறீர்கள்.

லூக்கா 8:26-39

பிசாசு பிடித்த மனிதன்

(மத்தேயு 8:28-34; மாற்கு 5:1-20)

26 இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். 27 இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான்.

28-29 பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான்.

30 இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) 31 நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. 32 அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். 33 பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன.

34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். 35 நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள்.

36 நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். 37 இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். 38 இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான்.

ஆனால் இயேசு அந்த மனிதனிடம், 39 “வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.

ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center