Revised Common Lectionary (Complementary)
19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
20 கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.
அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும்.
21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.
காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.
22 கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.
பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.
25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28 ஏனெனில் கர்த்தரே ராஜா.
அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
கெட்ட ஜனங்கள் தங்கள் வாழ்வை மாற்ற வேண்டும்
59 பார், உன்னைக் காப்பாற்ற கர்த்தருடைய வல்லமை போதுமானதாக உள்ளது. நீ அவரிடம் உதவி கேட்கும்போது அவர் உனக்குப் பதில் தருவார். 2 ஆனால் உனது பாவங்கள் உன்னை தேவனிடமிருந்து விலக்குகிறது. உனது பாவங்கள் கர்த்தருடைய முகத்தை உன்னிடமிருந்து மறையச் செய்கிறது. அப்போது அவர் உனக்குச் செவி கொடுக்கமாட்டார். 3 உனது கைகள் அழுக்காக உள்ளன. அவை இரத்தத்தால் மூடப்பட்டுள்ளன. உனது விரல்கள் குற்றங்களால் மூடப்பட்டுள்ளன. நீ உனது வாயால் பொய்களைச் சொல்லுகிறாய். உனது நாக்கு தீயவற்றைக் கூறுகிறது. 4 எவரும் மற்றவர்களைப் பற்றிய உண்மைகளைக் கூறுவதில்லை, ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் வழக்காடு மன்றத்தில் மோதுகிறார்கள். அவர்கள் தம் வழக்குகளில் வெல்வதற்கு பொய்யான வாக்குவாதங்களை நம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் பொய் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு முழுவதுமாகத் துன்பம் உள்ளது. அவர்கள் தீமையைப் பெற்றெடுக்கிறார்கள். 5 விஷப் பாம்புகளிலிருந்து முட்டைகள் வருவதுபோல இவர்களிடமிருந்து தீமைகள் வருகின்றன. நீ அவற்றில் ஒரு முட்டையைத் உண்டால் மரித்துப்போவாய். அவற்றில் ஒரு முட்டையை உடைத்தால், ஒரு விஷப்பாம்பு வெளியே வரும். ஜனங்கள் பொய் சொல்கிறார்கள். அந்தப் பொய்கள் சிலந்தி வலைபோன்றுள்ளன. 6 அந்த வலைகளை ஆடைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அந்த வலைகளால் நீ உன்னை மூடிக்கொள்ள முடியாது. சிலர் கெட்டச் செயல்களைச் செய்வார்கள். மற்றவர்களுக்குக் கொடுமை செய்யத் தம் கைகளைப் பயன்படுத்துவார்கள். 7 அந்த ஜனங்கள் தம் கால்களைத் தீமைசெய்ய ஓடுவதற்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் குற்றம் ஒன்றுமே செய்யாதவர்களைக் கொலை செய்ய விரைவார்கள். அவர்கள் தீய எண்ணங்களைச் சிந்திப்பார்கள். கலகமும் கொள்ளையும் அவர்களின் வாழ்க்கைமுறையாக உள்ளது. 8 அந்த ஜனங்கள் சமாதானத்தின் வழியை அறிவதில்லை. அவர்களின் வாழ்வில் நன்மை இல்லை. அவர்களின் வழிகள் நேர்மையானதாக இல்லை. அவர்கள் வாழ்வதுபோன்று வாழ்கிற எவரும் தம் வாழ்வில் சமாதானத்தை அடையமாட்டார்கள்.
இயேசு பலரைக் குணமாக்குதல்
27 இயேசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டதும் இரு குருடர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அக்குருடர்கள் உரத்த குரலில், “தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” என்று சொன்னார்கள்.
28 இயேசு வீட்டிற்குள் சென்றார். குருடர்கள் இருவரும் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்குக் குருடர்கள், “ஆம், போதகரே, நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்று பதிலளித்தனர்.
29 பிறகு இயேசு அவர்களது கண்களைத் தொட்டு, “நீங்கள் பார்வை பெறுமாறு செய்ய என்னால் முடியுமென்று நம்புகிறீர்கள். எனவே அது நடக்கும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர், “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார். 31 ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.
32 அவர்கள் இருவரும் புறப்பட்டுச்சென்ற பின், சிலர் வேறொரு மனிதனை இயேசுவிடம் அழைத்து வந்தார்கள். இம்மனிதனைப் பிசாசு பிடித்திருந்ததினால் அவனால் பேச இயலவில்லை. 33 இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.
34 ஆனால் பரிசேயர்கள், “பிசாசுகளை விரட்டுகிற வல்லமையை இயேசுவிற்குக் கொடுத்தது பிசாசுகளின் தலைவனே” என்று சொன்னார்கள்.
2008 by World Bible Translation Center