Revised Common Lectionary (Complementary)
19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
20 கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.
அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும்.
21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.
காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.
22 கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.
பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.
25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28 ஏனெனில் கர்த்தரே ராஜா.
அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
இஸ்ரவேலர்கள் தேவனைப் பின்பற்றவில்லை
57 நீதிமான்கள் அழிந்துவிட்டனர்.
எவரும் கவனிக்கவில்லை.
நல்லவர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர்.
ஆனால் ஏனென்று புரிந்துகொள்வதில்லை.
கஷ்டங்கள் வருகிறதென்றும்,
அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்களென்பதையும் அறிந்துகொள்ளவில்லை.
2 ஆனால் சமாதானம் வரும்.
ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள்.
தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள்.
3 “சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்!
உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான்.
உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்!
4 நீங்கள் கெட்டவர்கள்.
பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.
நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள்.
நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள்.
5 ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.
ஒவ்வொரு ஓடை அருகிலும் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள்.
அவர்களைப் பாறைகளில் பலி கொடுக்கிறீர்கள்.
6 ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.
அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள்.
அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள்.
ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும்.
இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா?
இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது.
7 ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய்.
அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய்.
8 பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய்.
அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய்.
அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய்.
என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய்.
கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய்.
பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய்.
9 நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய்.
தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய்.
உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும்.
10 இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும்.
ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை.
நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய்.
ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய்.
11 என்னை நீ நினைக்கவில்லை.
என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை.
எனவே யாரைப்பற்றி நீ கவலைப்பட்டாய்?
நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்?
நீ ஏன் பொய் சொன்னாய்?
கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன்.
நீ என்னை மகிமைப்படுத்தவில்லை.
12 உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது.
நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது.
ஆனால், அவை பயனற்றவை.
13 உனக்கு உதவி தேவைப்படும்போது,
அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன.
அவை உனக்கு உதவட்டும்.
ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப்போகும்.
உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும்.
ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன்
நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான்.
அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.”
சட்டமும் வாக்குறுதியும்
15 சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். மனிதர்களுக்குரிய உடன்படிக்கையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இவ்வாறு மனிதர்களுக்குள் அதிகாரப்பூர்வமாக உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, யாரும் அதில் உள்ளவற்றைத் தள்ளுவதும் இல்லை. புதிதாகச் சேர்த்துக்கொள்ளுவதும் இல்லை, எவரொருவரும் அவற்றை ஒதுக்குவதும் இல்லை. 16 ஆபிரகாமுக்கும் அவனது சந்ததிக்கும் தேவன் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருந்தார். அவர் “உன் சந்ததிகளுக்கு” என்று பன்மையில் சொல்லாமல் “உன் சந்ததிக்கு” என்று ஒருமையில் சொல்லி இருக்கிறார். எனவே இது கிறிஸ்துவையே குறிக்கும். 17 எனவே நான் சொல்வது என்னவென்றால் சட்டங்கள் வருவதற்கு முன்பே ஆபிரகாமிடம் தேவன் ஓர் உடன்படிக்கையை அதிகாரப் பூர்வமாகச் செய்திருக்கிறார். சட்டங்களோ 430 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. எனவே அது அந்த உடன்படிக்கையை எவ்வகையிலும் பாதிக்காது. தேவன் ஆபிரகாமுக்குச் செய்துகொடுத்த வாக்குத்தத்தமும் தவறாதது.
18 தேவனுடைய வாக்குறுதியை நாம் சட்டங்களைப் பின்பற்றி வருவதன் மூலம் அடைய முடியுமா? முடியாது. அப்படியானால் தேவன் கொடுத்தது வாக்குறுதி ஆகாது. ஆனால் தேவனோ தன் ஆசீர்வாதங்களைத் தன் வாக்குத்தத்ததின் மூலம் இலவசமாய் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்.
19 அப்படியென்றால் சட்டங்களின் நோக்கம் என்ன? அவை மனிதர் செய்யும் தீமைகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டின. ஆபிரகாமின் சிறப்பான வாரிசு வரும்வரை இச்சட்டம் தொடர்ந்து பயன்பட்டது. தேவன் இந்த வாரிசைப் பற்றியே வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இச்சட்டங்கள் தேவ தூதர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டது. தேவ தூதர்கள் மோசேயை மத்தியஸ்தராகப் பயன்படுத்தி சட்டங்களை மனிதர்களுக்கு வழங்கினர். 20 மத்தியஸ்தன் ஒருவன் மட்டுமல்ல, ஆனால் தேவன் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.
மோசேயின் சட்டங்களுடைய நோக்கம்
21 இதனால் சட்டம் தேவனுடைய வாக்குறுதிக்கு எதிரானவை என்று பொருள் கொள்ள முடியுமா? முடியாது. மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு சட்டம் இருந்தால் பிறகு நாம் அதனைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலமே தேவனுக்கு வேண்டியவராக முடியும். 22 ஆனால் இதுவும் உண்மை கிடையாது. ஏனென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தால் கட்டப்பட்டுள்ளதாக வேதவாக்கியங்கள் கூறுகிறது. எனவே தேவனுடைய வாக்குறுதி, விசுவாசத்தின் மூலமே கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கே வாக்குறுதி வந்து சேரும்.
2008 by World Bible Translation Center