Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 76

இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்.

76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
    இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
தேவனுடைய ஆலயம் சாலேமில்[a] இருக்கிறது.
    தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
    மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.

தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
    மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
    அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
    இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
தேவனே, நீர் பயங்கரமானவர்!
    நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
    தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
    பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.

10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
    நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
    தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.

11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
    இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
    அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
    பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.

எசேக்கியேல் 29:1-12

எகிப்துக்கு விரோதமான செய்தி

29 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எகிப்து மன்னனான பார்வோனைப் பார். அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன்.
    நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு,
“இது என்னுடைய நதி!
    நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.

4-5 “‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன்.
    நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும்.
நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து,
    வறண்ட நிலத்தில் போடுவேன்.
நீ தரையில் விழுவாய்.
    உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள்.
நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன்.
    நீ அவற்றின் உணவு ஆவாய்.
பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும்
    நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!

“‘ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்?
இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
    ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!
இஸ்ரவேல் ஜனங்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
    ஆனால் எகிப்து அவர்களது கைகளையும் தோள்களையும் கிழித்தது.
அவர்கள் உதவிக்காக உன்மேல் சாய்ந்தார்கள்.
    ஆனால் நீ அவர்களின் இடுப்பை திருப்பி முறிந்துபோகப் பண்ணினாய்.’”

எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன்.
    நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.
எகிப்து வெறுமையாகி அழியும்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

தேவன் சொன்னார்: “ஏன் நான் இவற்றைச் செய்யப்போகிறேன்? நீ, ‘இது எனது நதி. நான் இந்த நதியை உண்டாக்கினேன்’ என்று கூறினாய். 10 எனவே, நான் (தேவன்) உனக்கு விரோதமாக இருக்கிறேன். உன் நைல் நதியின் பல கிளைகளுக்கும் நான் விரோதமானவன். நான் எகிப்தை முழுமையாக அழிப்பேன். நகரங்கள் மிக்தோலிலிருந்து செவெனேவரை, எத்தியோப்பியா எல்லைவரை வெறுமையாகும். 11 எந்த மனிதரும் மிருகமும் எகிப்து வழியாகப் போகமுடியாது. எதுவும் 40 ஆண்டுகளுக்கு எகிப்தில் வாழ முடியாது. 12 நான் எகிப்தை அழிப்பேன். நகரங்கள் 40 ஆண்டுகளுக்கு அழிந்த நிலையிலேயே இருக்கும். நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். நான் அவர்களை அயல்நாடுகளில் அந்நியர்களாக்குவேன்.”

வெளி 11:15-19

ஏழாவது எக்காளம்

15 ஏழாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது பரலோகத்தில் உரத்த சத்தங்கள் கேட்டன. அவை:

“உலகத்தின் இராஜ்யம் இப்போது கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமாயிற்று.
    அவர் எல்லாக் காலங்களிலும் ஆள்வார்”

என்றன.

16 பிறகு தம் சிம்மாசனங்களில் தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த 24 மூப்பர்களும் தரையில்படும்படி தலைகுனிந்து தேவனை வழிபட்டனர். 17 அந்த மூப்பர்கள்,

“சகல வல்லமையும் வாய்ந்த கர்த்தராகிய தேவனே, நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.
    நீரே இருக்கிறவரும் இருந்தவரும் ஆவீர்.
உம் மிகப் பெரிய வல்லமையைப் பயன்படுத்தி
    ஆளத் தொடங்கியதால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
18 உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர்.
    ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம்.
இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம்.
    உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம்.
சிறியோராயினும் பெரியோராயினும் சரி,
    உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம்.
உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.

19 பிறகு தேவனுடைய ஆலயம் பரலோகத்தில் திறக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. பின்னர் மின்னலும், இடி முழக்கங்களும், நிலநடுக்கங்களும், பெருங்கல்மழையும் உண்டாயிற்று.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center