Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
2 எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?
3 எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
இல்லையெனில் நான் மடிவேன்.
4 அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
5 கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
6 கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.
செம்மறியாட்டுக்கடா மற்றும் வெள்ளாடு பற்றிய தானியேலின் கனவு
8 பெல்ஷாத்சாரின் மூன்றாம் ஆட்சியாண்டில் நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இது முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்திற்குப் பிறகு உள்ளது. 2 இந்த தரிசனத்தில் நான் சூசான் என்ற நகரத்தில் இருந்தேன். சூசான் என்பது ஏலாம் என்னும் மாநிலத்தின் தலைநகரம். நான் ஊலாய் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். 3 நான் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன். ஒரு செம்மறியாட்டுக்கடா ஊலாய் ஆற்றின் கரையில் நிற்பதை நான் பார்த்தேன். அந்த ஆட்டுக்கடாவிற்கு இரண்டு நீண்ட கொம்புகள் இருந்தன. ஒன்று இன்னொன்றைவிட நீளமானது. ஒரு கொம்பு இன்னொன்றைவிட பின்னாலிருந்தது. 4 அந்த செம்மறியாட்டுக்கடா தனது கொம்புகளோடு பாய்ந்ததைப் பார்த்தேன். அந்த ஆட்டுக் கடா மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடியதை நான் கவனித்தேன். எந்த மிருகத்தினாலும் இதனைத் தடுக்க முடியவில்லை. மற்ற மிருகங்களை எவராலும் காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆட்டுக்கடாவால் தன் விருப்பம்போல் செய்ய முடிந்தது. எனவே ஆட்டுக்கடா வல்லமை பெற்றது.
5 நான் செம்மறியாட்டுக்கடாவைப்பற்றி நினைத்தேன். நான் நினைத்துகொண்டிருக்கும்போது மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வருவதைப் பார்த்தேன். வெள்ளாட்டுக்கடாவிற்கு எளிதில் பார்க்கும் வகையில் ஒரு பெரிய கொம்பு இருந்தது. அந்த வெள்ளாடு பூமி முழுவதும் ஓடியது. இந்த வெள்ளாட்டுக்கடாவின் கால்கள் தரையில்படவேயில்லை.
6 அந்த வெள்ளாட்டுக்கடா 2 கொம்புகளையுடைய செம்மறியாட்டுக்கடாவிடம் வந்தது. இந்த ஆட்டுகடாதான் நான் ஊலாய் ஆற்றின் கரையில் பார்த்தது. வெள்ளாட்டுக் கடா கோபமாக இருந்தது. இது செம்மறி ஆட்டுக்கடாவை நோக்கி ஓடியது. 7 வெள்ளாட்டுக்கடா கோபமாக இருந்தது. இது செம்மறியாட்டுக்கடாவின் இரண்டு கொம்புகளையும் ஒடித்தது. செம்மறியாட்டுக்கடாவால் வெள்ளாட்டுக் கடாவைத் தடுக்கமுடியவில்லை. வெள்ளாட்டுக்கடா, செம்மறியாட்டுக்கடாவைத் தரையில் வீழ்த்தியது. பிறகு வெள்ளாட்டுக்கடா செம்மறியாட்டுக்கடாவின்மேல் மிதித்தது. வெள்ளாட்டுக் கடாவிடமிருந்து செம்மறியாட்டுக்கடாவைக் காப்பாற்ற அங்கே யாருமில்லை.
8 எனவே வெள்ளாட்டுக்கடா மிகவும் வல்லமை பெற்றது. ஆனால் அது வல்லமை உடையதாக இருக்கும்போதே அதன் ஒரு பெரிய கொம்பு உடைந்தது. அந்த ஒரு கொம்பிருந்த இடத்தில் நான்கு கொம்புகள் வளர்ந்தன. அந்த நான்கு கொம்புகளும் எளிதில் பார்க்கும்படியாக இருந்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு வெவ்வேறு திசைகளையும் பார்ப்பதாக இருந்தன.
9 பிறகு நான்கு கொம்புகளில் ஒன்றிலிருந்து ஒரு சிறியக் கொம்பு முளைத்தது. அந்தச் சிறியக் கொம்பு வளர்ந்து பெரிய கொம்பாக மாறியது. இது தென் கிழக்கை நோக்கி வளர்ந்தது. இது அழகான தேசத்தை நோக்கி வளர்ந்தது. 10 அந்தச் சிறியக் கொம்பு மிகப் பெரியதாயிற்று. அது வானத்தை தொடும்வரை வளர்ந்தது. இந்த சிறியக் கொம்பு வானத்தின் நட்சத்திரங்கள் சிலவற்றையும் தரையிலே வீழ்த்தியது. இது அந்த நட்சத்திரங்கள் மீது மிதித்து நடந்தது. 11 அந்தச் சிறியக் கொம்பு மிகவும் வல்லமை உடையதாகியது. பிறகு இது நட்சத்திரங்களை ஆள்பவருக்கு (தேவன்) எதிராகத் திரும்பியது. இந்த சிறியக் கொம்பு ஆளுபவருக்கு (தேவன்) அளிக்கப்படும் தினப்பலியைத் தடுத்தது. ஆளுபவரை தொழுவதற்கு ஜனங்கள் கூடும் இடம் இடித்துத் தள்ளப்பட்டது. 12 சிறியக் கொம்பு பாவம் செய்து தினப்பலியை நிறுத்தியது. இது சத்தியத்தை தரையிலே வீசியது. சிறியக் கொம்பு இவற்றைச் செய்து வெற்றிகரமாக விளங்கியது.
13 பிறகு நான் பரிசுத்தமான ஒருவர் பேசுவதைக் கேட்டேன். பிறகு இன்னொரு பரிசுத்தமானவர் முதலாமவருக்குப் பதில் சொல்வதைக் கேட்டேன். முதலாம் பரிசுத்தமானவர்: “இந்தத் தரிசனமானது தினபலி எவ்வாறு ஆகும் என்பதைக் காட்டுகிறது. இது அழிவுக்குண்டான பயங்கரமான பாவத்தைப் பற்றியது. இது, ஆளுபவரை தொழுதுகொள்ளும் இடத்தை அழித்தால் என்ன ஏற்படும் என்பதையும் காட்டுகிறது. அந்த ஜனங்கள் அந்த இடம் முழுவதையும், அந்த நட்சத்திரங்களையும் மிதிக்கும்போது என்ன நிகழும் என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நடக்கும்?” என்றார்.
14 இன்னொரு பரிசுத்தமானவர்: “இது 2,300 நாட்களுக்கு நடக்கும் பிறகு பரிசுத்தமான இடமானது சுத்திகரிக்கப்படும்” என்றார்.
கிறிஸ்துவிடமிருந்து விலகாதீர்கள்
26 நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. 27 நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். 28 மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். 29 ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். 30 “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(A) என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்”(B) என்றும் சொன்னார். 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும்.
2008 by World Bible Translation Center