Revised Common Lectionary (Complementary)
கிமெல்
17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
மோசேக்கு அடையாளம்
4 அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்பார்கள்” என்றான்.
2 தேவன் மோசேயை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.
மோசே, “இது எனது கைத்தடி” என்றான்.
3 அப்போது தேவன், “உனது கைத்தடியை தரையில் போடு” என்றார்.
மோசே, தனது கைத்தடியை நிலத்தின் மேல் போட்டான். அது பாம்பாக மாறிற்று. மோசே அதற்குப் பயந்து அங்கிருந்து ஓடினான். 4 கர்த்தர் மோசேயை நோக்கி, “கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி” என்றார்.
எனவே மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தான். மோசே அவ்வாறு செய்தபோது, பாம்பு மீண்டும் கைத்தடியாயிற்று. 5 அப்போது, தேவன், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ உனது முற்பிதாக்களின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரைக் கண்டாய் என்பதை ஜனங்கள் நம்புவார்கள்” என்றார்.
6 பின் கர்த்தர், “உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை அங்கிக்குள் நுழை” என்றார்.
எனவே மோசே தன் அங்கிக்குள் கையை நுழைத்தான். மோசே அங்கியிலிருந்து கையை எடுத்தபோது, அது மாறிப்போயிருந்தது. கை முழுவதும் உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் நிரம்பியிருந்தது.
7 அப்போது தேவன், “உனது கையை அங்கிக்குள் மீண்டும் நுழை” என்றார். மோசே அவ்வாறே அங்கிக்குள் கையை நுழைத்தான். பின் மோசே கையை வெளியே எடுத்தபோது அவனது கை முன்பிருந்ததைப்போலவே நன்றாக இருந்தது.
8 அப்போது தேவன், “நீ உனது கைத்தடியைப் பயன்படுத்தும்போது ஒருவேளை ஜனங்கள் உன்னை நம்பாவிட்டாலும், இந்த அடையாளத்தைக் காட்டும்போது, அவர்கள் உன்னை நம்புவார்கள் 9 இந்த இரண்டு காரியங்களைக் காண்பித்து, அவர்கள் உன்னை நம்ப மறுத்தால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.
10 ஆனால் மோசே கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாத திக்குவாய் உடையவன் என்பதும் உமக்கு தெரியும்” என்று கூறினான்.
11 அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா. 12 எனவே நீ போ! நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்லவேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்” என்றார்.
13 ஆனால் மோசே, “எனது கர்த்தாவே, வேறு யாரையாவது அனுப்புமாறு உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன், என்னை அனுப்பவேண்டாம்” என்றான்.
14 அப்போது மோசேயின்மேல் கர்த்தர் கோபம் கொண்டு, “நல்லது! உனக்கு உதவியாக நான் ஒருவனைத் தருவேன். லேவியனாகிய உனது சகோதரன் ஆரோனை நான் பயன்படுத்துவேன். அவன் தேர்ந்த பேச்சாளன். அவன் உன்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். அவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவான். 15 அவன் உன்னோடுகூட பார்வோனிடம் வருவான். நீ கூற வேண்டியதை உனக்குச் சொல்வேன். நீ அதை ஆரோனுக்குச் சொல். பார்வோனிடம் பேச வேண்டிய தகுந்த வார்த்தைகளை ஆரோன் தெரிந்துகொள்வான். 16 உனக்காக ஆரோன் ஜனங்களிடமும் பேசுவான். நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய், உனக்குரிய பேச்சாளனாக அவன் இருப்பான்.[a] 17 எனவே போ. உனது கைத்தடியையும் எடுத்துச்செல். நான் உன்னோடிருக்கிறேன் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவதற்கு உனது கைத்தடியையும், பிற அற்புதங்களையும் பயன்படுத்து” என்றார்.
ஜீவனுள்ள கல்லும் பரிசுத்தமான நாடும்
2 எனவே எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் விலகி இருங்கள். பொய் கூறாதீர்கள். போலியாக இருக்காதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். மக்களைக் குறித்துத் தீயன கூறாதீர்கள். இவற்றையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துங்கள். 2 புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல இருங்கள். உங்களை ஆவியில் வளர்க்கும் பரிசுத்த பாலைப் போன்ற வேதவசனங்கள் மேல் பசியுடையவர்களாக இருங்கள். அதைப் பருகுவதால் நீங்கள் வளர்ந்து காப்பாற்றப்படுவீர்கள். 3 கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள்.
4 கர்த்தர் இயேசு ஜீவனுள்ள “தலைக் கல்லாக” இருக்கிறார். உலக மக்களால் ஒதுக்கப்பட்ட கல்லாக அவர் இருந்தார். ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த கல் அவர் தான். தேவனிடம் அவர் விலை மதிப்புள்ளவராக இருக்கிறார். எனவே அவரிடம் வாருங்கள். 5 நீங்களும் ஜீவனுள்ள கற்களைப் போன்றிருக்கிறீர்கள். ஓர் ஆன்மீக ஆலயத்தைக் கட்ட உங்களை தேவன் பயன்படுத்துகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்து வழியாக தேவன் ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைக் கொடுக்கும் பரிசுத்த ஆசாரியராக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் அப்பலிகளைக் கொடுங்கள். 6 வேதவாக்கியம் சொல்கிறது,
“பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன்.
அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.”(A)
7 நம்புகிற மக்களுக்கு அவர் கௌரவத்துக்குரியதாகிறார். ஆனால் நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர் கட்டுபவர்கள்,
“வேண்டாமென்று தள்ளிய கல்லாகிறது.
ஆனால் அக்கல்லே மிக முக்கியமான கல்லாயிற்று”(B)
என்பதற்கேற்ப இருக்கிறார்.
8 நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர்,
“மக்களை இடறச் செய்யும் கல்லாவார்.
மக்களை விழவைக்கும் கல்லாவார்”(C)
என்பதற்கேற்ப இருக்கிறார். தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாததால் மக்கள் இடறுகிறார்கள். அம்மக்களுக்கு தேவன் திட்டமிட்டிருப்பது இதுவே.
9 ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் ராஜாவின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார்.
10 ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை.
ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை.
ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள்.
2008 by World Bible Translation Center