Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
செமாயாவுக்கு தேவனுடைய செய்தி
24 செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன். 25 சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “செமாயா, எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். மாசெயாவின் குமாரனான செப்பனியா ஆசாரியர்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். நீயும் அனைத்து ஆசாரியர்களுக்கும் கூட கடிதங்களை அனுப்பினாய். அக்கடிதங்களை நீ கர்த்தருடைய அதிகாரத்தால் அல்லாமல் உனது சொந்தப் பெயரில் அனுப்பினாய். 26 செமாயா, செப்பனியாவிற்கான கடிதத்தில் நீ சொன்னது இதுதான்: ‘செப்பனியா, கர்த்தர் உன்னை யோய்தாவின் இடத்தில் ஆசாரியனாக ஆக்கியிருக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளனாக நீ இருக்கிறாய். பைத்தியம் போலவும் தீர்க்கதரிசி போலவும் நடிக்கின்ற எவரையும் நீ கைது செய்யலாம். நீ அவர்களின் கால்களுக்கு இடையில் மரக் கட்டைகளையும் கழுத்தில் இரும்புச் சங்கிலிகளையும் மாட்டலாம். 27 இப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி போன்று நடிக்கிறான். எனவே, அவனை ஏன் கைது செய்யாமல் இருக்கிறாய்? 28 எரேமியா பாபிலோனிலுள்ள எங்களுக்கு அவனது செய்தியை அனுப்பியிருக்கிறான்: பாபிலோனில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் அங்கேயே நீண்டகாலம் இருப்பீர்கள். எனவே, வீடுகளைக்கட்டி அங்கேயே குடியிருங்கள். தோட்டங்களை ஏற்படுத்தி நீங்கள் வளர்த்தவற்றை உண்ணுங்கள்.’”
29 செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான். 30 பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: 31 “எரேமியா, இந்த வார்த்தையை பாபிலோனில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளுக்கும் அனுப்பு, ‘நெகெலாமியனாகிய செமாயாவைப்பற்றி கர்த்தர் கூறுவது இதுதான்: செமாயா உங்களிடம் பிரசங்கம் செய்திருக்கிறான். ஆனால் நான் அவனை அனுப்பவில்லை. செமாயா உங்களை ஒரு பொய்யை நம்பும்படி செய்திருந்தான். 32 ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.”
குருடன் குணமாக்கப்படுதல்
22 இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர். 23 ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார்.
24 அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.
25 மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. 26 இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார்.
2008 by World Bible Translation Center