Revised Common Lectionary (Complementary)
9 ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய்.
மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
10 தீயவை உனக்கு நிகழாது,
உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
11 தேவன் அவரது தூதர்களை உனக்காகக் கட்டளையிடுவார்.
நீ போகுமிடங்களிலெல்லாம் அவர்கள் உன்னைப் பாதுகாப்பார்கள்.
12 உன் கால் பாறையில் மோதாதபடிக்கு
அவர்கள் கைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
13 சிங்கங்களின் மேலும்
விஷம் நிரம்பிய பாம்புகளின் மேலும் நடக்கும் வல்லமை உனக்கு வாய்க்கும்.
14 கர்த்தர்: “ஒருவன் என்னை நம்பினால், நான் அவனை மீட்பேன்.
என் நாமத்தை தொழுது கொண்டு என்னைப் பின்பற்றுவோரை நான் கப்பாற்றுவேன்” என்கிறார்.
15 என்னைப் பின்பற்றுவோர் உதவிக்காக என்னை அழைப்பார்கள்.
நான் அவர்களுக்குப் பதில் கொடுப்பேன்.
அவர்களுக்குத் தொல்லை நேரும்போது நான் அவர்களோடு இருப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றிப் பெருமைப்படுத்துவேன்.
16 என்னைப் பின்பற்றுவோருக்கு நான் நீண்ட ஆயுளைக் கொடுப்பேன்.
நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
47 “மண்ணிலே இறங்கிவந்து அங்கே உட்காரு!
கல்தேயரின் கன்னியே தரையில் உட்காரு!
இப்போது நீ ஆள்பவள் இல்லை!
இனிமேல் நீ மென்மையானவள் என்று உன்னை ஜனங்கள் நினைக்கமாட்டார்கள்.
2 இப்போது நீ கடினமாக வேலை செய்ய வேண்டும்.
எந்திரத்தை நீ எடுக்க வேண்டும்.
தானியங்களை அரைத்து மாவாக்கு.
உனது முக்காட்டை நீக்கிவிடு. உனது ஆடம்பர ஆடைகளை நீக்கி விடு.
உனது நாட்டை விட்டுச் சென்று விடு!
ஆண்கள் பார்க்கும்படி உன் ஆடையைத் தொடைவரை தூக்கு, ஆறுகளைக் கடந்து போ,
3 ஆண்கள் உனது உடலைப் பார்க்கட்டும்.
உடல் ஆசைக்கு உன்னைப் பயன்படுத்தட்டும்.
நீ செய்கிற கெட்டவற்றுக்கு உன்னை விலை கொடுக்கும்படி செய்வேன்.
எந்த மனிதனும் உனக்கு உதவி செய்ய வரமாட்டான்.
4 “எனது ஜனங்கள் சொல்கிறார்கள், ‘தேவன் நம்மைக் காப்பார்.
அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர்’”
5 “எனவே, பாபிலோனே, அங்கே உட்காரு. அமைதலாக இரு.
கல்தேயரின் மகளே, இருளுக்குள் போ! ஏனென்றால், ‘இராஜ்யங்களின் இராணியாக இனி நீ இருக்கமாட்டாய்,’
6 “நான் எனது ஜனங்களின் மீது கோபத்தோடு இருக்கிறேன்.
அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்.
ஆனால் நான் கோபமாக இருந்தேன்.
எனவே அவர்களை முக்கியமற்றவர்களாக்கினேன்.
நான் அவர்களை உனக்குக் கொடுத்தேன்.
நீ அவர்களைத் தண்டித்துவிட்டாய்.
நீ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை.
வயதான ஜனங்களும் கடுமையாக வேலை செய்யும்படி நீ செய்தாய்.
7 ‘நான் என்றென்றும் வாழ்கிறேன்.
நான் எப்பொழுதும் இராணியாகவே இருப்பேன்’ என்று நீ சொன்னாய்.
அந்த ஜனங்களுக்குச் செய்த கெட்டவற்றைக்கூடக் கவனிக்கவில்லை.
என்ன நிகழும் என்று நீ நினைக்கவில்லை.
8 எனவே, மெல்லிய இயல்புடைய பெண்ணே!
இப்போது என்னைக் கவனி!
நீ பாதுகாப்பை உணருகிறாய், ‘நான் மட்டுமே முக்கியமானவள். என்னைப்போன்று முக்கியமானவள் எவருமில்லை.
நான் எப்போதும் விதவை ஆவதில்லை நான் எப்போதும் பிள்ளைகளைக் கொண்டிருப்பேன்’ என்று நீ சொல்கிறாய்.
9 இந்த இரண்டும் திடீரென்று உனக்கு நிகழும். முதலில் நீ உனது பிள்ளைகளை இழப்பாய்.
பிறகு நீ உனது கணவனை இழப்பாய்.
ஆம் இவை உனக்கு உண்மையில் நிகழும்.
உனது அனைத்து மந்திரங்களும் தந்திரங்களும் உன்னைக் காப்பாற்றாது.
மிருகத்தின்மேல் பெண்மணி
17 ஏழு தூதர்களில் ஒரு தூதன் வந்து என்னிடம் பேசினான். ஏழு கிண்ணம் வைத்திருந்த ஏழு தூதர்களில் இத்தூதனும் ஒருவன். அவன், “வா. ஒரு பிரசித்தி பெற்ற வேசிக்கு வரப்போகும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். அவள் திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிறவள். 2 பூமியில் உள்ள ராஜாக்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
3 ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. 4 இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. 5 அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்:
மகா பாபிலோன் வேசிகளுக்கும்
பூமியில் உள்ள
அருவருப்புகளுக்கும் தாய்!
6 அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள்.
அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. 7 அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது.
9 “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு ராஜாக்களுமாகும். 10 இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் ராஜாவாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான்.
12 “நீ பார்த்த பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாகும். இந்தப் பத்து பேரும் இன்னும் தம் இராஜ்யங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த மிருகத்துடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆள்வதற்கு உரிய அதிகாரத்தைப் பெற்றுள்ளார்கள். 13 இவர்கள் ஒரே நோக்கம் உடையவர்கள். அவர்கள் தம் சக்தியையும் அதிகாரத்தையும் அந்த மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் போர் செய்வார்கள். ஆனால் இவர்களை ஆட்டுக்குட்டியானவர் தோற்கடிப்பார். ஏனென்றால் அவர் கர்த்தர்களின் கர்த்தர், ராஜாக்களின் ராஜா. அவர் தாம் அழைத்தவர்களாகிய தம்முடைய தேர்ந்தெடுத்தவர்களோடும், நம்பிக்கைக்குரியவர்களோடும் கூட அவர்களைத் தோற்கடிப்பார்” என்று சொன்னான்.
15 பிறகு அந்தத் தூதன் என்னிடம், “அந்த வேசி உட்கார்ந்திருக்கிற நீர்நிலைகளைப் பார்த்தாய் அல்லவா. அந்த நீர்நிலைகள் தான் உலகத்தில் உள்ள மக்கள், குடிகள், தேசங்கள், மொழிகளாக இருக்கின்றன. 16 நீ பார்த்த அந்த மிருகமும் அதன் பத்துக் கொம்புகளும் அந்த வேசியை வெறுப்பர். அவளிடம் உள்ள அனைத்தையும் அவர்கள் பறித்துக்கொண்டு அவளை நிர்வாணமாக விட்டுவிடுவர். அவர்கள் அவளது உடலைத் தின்பார்கள். அவர்கள் அவளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள். 17 தன் குறிக்கோளை நிறைவேற்ற, அந்த பத்துக் கொம்புகளும் விருப்பம் கொள்ள தேவன் காரணமானார். ஆளுவதற்குரிய அவர்கள் அதிகாரத்தை அம்மிருகத்துக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். தேவன் சொன்னவை நிறைவேறும் காலம்வரை அவர்கள் ஆளுவார்கள். 18 பூமியின் ராஜாக்கள் மீது அரசாள்கிற மகா நகரமானது நீ பார்த்த பெண்ணாகும்” என்று சொன்னான்.
2008 by World Bible Translation Center