Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 112

[a]112 கர்த்தரை துதியுங்கள்!

கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கிற மனிதன் சந்தோஷமாயிருப்பான்.
    அவன் தேவனுடைய கட்டளைகளை நேசிக்கிறான்.
அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
    நல்லோரின் சந்ததியினர் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
    அவன் நன்மை என்றென்றைக்கும் தொடரும்.
தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
    தேவன் நன்மையும், தயவும், இரக்கமுமுள்ளவர்.
தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
    தனது வியாபாரத்தில் நியாயமாயிருப்பது ஒருவனுக்கு நல்லது.
அவன் விழமாட்டான்,
    ஒரு நல்ல மனிதன் என்றென்றும் நினைவுக்கூரப்படுவான்.
அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
    அவன் கர்த்தரை நம்புகிறதால் தன்னம்பிக்கையோடிருப்பான்.
அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
    அவன் தனது பகைவர்களைத் தோற்கடிப்பான்.
அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
    அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.
    அவர்கள் கோபத்தால் தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
பின்பு அவர்கள் மறைந்து போவார்கள்.
    தீயோர் அவர்கள் மிகவும் விரும்புவதைப் பெறுவதில்லை.

உபாகமம் 22:13-30

திருமணச் சட்டங்கள்

13 “ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்பு, அவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து, 14 அவன் அவள் மீது பொய்யாக, ‘நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளோடு பாலின உறவுகள் வைத்துக்கொள்ளும்போது அவள் கற்பில்லாதவள் என்பதைக் கண்டேன்’ என்று கூறி அதன் மூலம், ஜனங்கள் மத்தியில் அவள் மீது கெட்ட எண்ணங்களை உருவாக்கினால், 15 அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் குமாரத்தி கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்து, அவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும். 16 பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் குமாரத்தியை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன், ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து, 17 “நான் உன் குமாரத்தியிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் குமாரத்திக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான். ஆனால், இதோ என் குமாரத்தி கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் குமாரத்தியின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார். 18 பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில், அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும். அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.

20 “ஆனால், அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால், 21 ஊர்த் தலைவர்கள் அந்தப் பெண்ணை அவளது தந்தை வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்து, ஊர் ஜனங்கள் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும். ஏனென்றால், இஸ்ரவேலில் அந்தப் பெண் அவமானமான செயல் ஒன்றைச் செய்துள்ளாள். தன் தந்தை வீட்டில் ஒரு வேசியைப் போன்ற செயலைச் செய்த பாவியாக இருந்துள்ளாள். உங்கள் மத்தியில் இந்தத் தீமையை இப்படியே விலக்கிட வேண்டும்.

பாலுறவுப் பாவங்கள்

22 “ஒருவன் மற்றவனது மனைவியுடன் தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.

23 “ஒருவனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ள கற்புள்ள பெண் ஒருத்தியை வேறொருவன் சந்தித்து அவளுடன் பாலுறவு தொடர்பு வைத்துக்கொள்வது நகரில் நடந்ததென்றால், 24 பின் நீங்கள் அவ்விருவரையும் நகர எல்லையின் பொது இடத்திற்குக் கொண்டுவந்து அவர்களைக் கற்களால் எறிந்து கொல்ல வேண்டும். நீங்கள் அவனைக் கொல்வது எதற்கென்றால், அவன் அடுத்தவனது மனைவியைக் கற்பழித்தப் பாவத்திற்காக. அவளைக் கொல்வது எதற்கென்றால், அவள் இந்நகரத்தில் அவ்வாறு நடக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க யாரையும் கூக்குரலிட்டு அழைக்காமல் இருந்ததால். உங்கள் மத்தியிலிருந்து இப்படிப்பட்ட தீமையை இவ்வாறு விலக்கிட வேண்டும்.

25 “ஆனால், ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளி இடங்களில் கண்ட ஒருவன் அவளைப் பலவந்தமாகப் பிடித்துக் கற்பழித்ததாக அறிந்தால், அவனை மட்டும் கொன்றுவிட வேண்டும். 26 அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது. 27 வெளி இடத்திலே அவன் அவளைக் கண்டதும் அவளைத் தன் பலத்தினால் பிடிக்க, அவள் தனக்கு உதவிட கூக்குரலிட்டபோதும் அவளைக் காப்பாற்ற அங்கு யாரும் இல்லாததால் அவளைத் தண்டிக்க வேண்டாம்.

28 “ஒருவன், இன்னும் திருமணம் நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப் பெண்ணை பலவந்தமாகப் பிடித்து கற்பழிப்புச் செய்ததை மற்ற ஜனங்கள் பார்த்துவிட்டால், 29 அவன் அவளது தந்தைக்கு 50 வெள்ளிக் காசுகளை கொடுக்கவேண்டும். அவன் அவளைக் கற்பழித்த பாவத்தினால், அவளே அவனது மனைவியாவாள். அவன் வாழ்நாள் முழுவதிலும் அவளை விவாகரத்து செய்திட முடியாது.

30 “எவனும் தன் தந்தையின் மனைவியுடன் பாலின உறவு வைத்துக்கொள்வதால், அவரது மானத்தை வெளிப்படுத்தக்கூடாது.”

1 கொரி 7:1-9

திருமணம் குறித்த போதனைகள்

இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.

திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center