Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 139:1-18

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.

139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
    என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
    வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
    நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
    என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
    நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
    நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.

நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
    கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
    மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
    நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
    என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.

11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
    பகல் இரவாக மாறிப்போயிற்று.
    “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
    இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
    இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.

13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
    என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
    நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
    நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
    என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
    உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
    நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.

17 உமது எண்ணங்கள் எனக்கு
    முக்கியமானவை.
    தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
    நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.

2 இராஜாக்கள் 11:21-12:16

21 யோவாஸ் ராஜாவாகும்போது அவனுக்கு ஏழு வயது.

யோவாஸ் தன் ஆட்சியைத் தொடங்கியது

12 இஸ்ரவேலில் யெகூ தன் ஆட்சியை ஏழாம் ஆண்டில் நடத்திக்கொண்டிருக்கும்போது, யோவாஸ் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். பெயெர்செபாவிலுள்ள சிபியாள் என்பவள்தான் யோவாசின் தாயார். கர்த்தர் சொன்ன நல்ல செயல்களை மட்டுமே யோவாஸ் செய்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு அடிபணிந்து வந்தான். யோய்தா எனும் ஆசாரியன் அவனுக்கு கற்றுத் தந்ததையே கடைபிடித்தான். ஆனால் அவன் மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் பொய்த் தெய்வங்களை தொழுதுக்கொள்ளும் இடங்களில் பலிகொடுப்பதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.

ஆலயத்தைச் செப்பனிட யோவாஸ் ஆணையிட்டான்

4-5 யோவாஸ் ஆசாரியர்களிடம், “கர்த்தருடைய ஆலயத்தில் அதிக பணம் இருக்கிறது. ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு பரிசுத்தக் காணிக்கையாகப் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆலயவரி மற்றும் தம் விருப்பம்போல் கணக்குப் பார்க்கப்படும்பொழுதெல்லாம் அவர்கள் அதை செலுத்தியுள்ளார்கள். மற்றும் தம் விருப்பம்போலவும் பணம் தருகின்றனர். ஆசாரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு அறிமுகமான ஒவ்வொருவரிடமிருந்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பணத்தைக் கொண்டுத் தேவையான இடத்தில் ஆலயப்பணி செய்யவேண்டும்” என்றான்.

ஆனால் ஆசாரியர்கள் பழுது பார்க்கவில்லை. யோவாஸ் தனது 23வது ஆட்சியாண்டில் கூட அவர்கள் ஆலயப்பணி செய்யவில்லை. எனவே யோவாஸ் ராஜா யோய்தா ஆசாரியனையும் மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, “ஏன் நீங்கள் ஆலயத் திருப்பணிகள் செய்யவில்லை? ஜனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள். ஜனங்களின் பணம் ஆலயத் திருப்பணிக்கே பயன்பட வேண்டும்” என்றான்.

ஜனங்களிடமிருந்து பணம் பெறுவதை நிறுத்திவிடுவதாக ஆசாரியர்கள் ஒப்புக்கொண்டனர். அதோடு ஆலயத்தைச் செப்பனிடும் பணியைச் செய்வதில்லை என்றும் முடிவுச்செய்தனர். எனவே, ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மேல் பகுதியில் துவாரமிட்டான். அதனைப் பலிபீடத்தின் தென்பகுதியில் வைத்தான். அப்பெட்டி கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் கதவுக்கருகில் இருந்தது. சில ஆசாரியர்கள் வாசலைக் காவல் செய்தனர். அவர்கள் கர்த்தருக்காக ஜனங்கள் தரும் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டனர்.

10 பிறகு ஜனங்களே ஆலயத்திற்குப் போகும்போதெல்லாம் பணத்தைப் பெட்டிக்குள் போட ஆரம்பித்தனர். பெட்டியில் ஏராளமான பணம் இருப்பதை ராஜாவின் எழுத்தரும் (செயலாளர்) தலைமை ஆசாரியரும் பார்த்தால் அவர்கள் வந்து பெட்டியைத் திறந்து பணத்தை எடுப்பார்கள். அவர்கள் அப்பணத்தை பைகளில் போட்டு எண்ணினார்கள். 11 அப்பணம் எடை போடப்பட்டவுடன் அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்தனர். ஆலயத்தில் பணியாற்றும் தச்சர்கள், கட்டிட வேலைக்காரர்கள் போன்றோருக்கு அப்பணத்தைக் கொடுத்தனர். 12 அப்பணத்தைக் கல்வேலை செய்பவர்களும் பெற்றனர். இப்பணத்தின் மூலம் மரங்கள், கற்கள், கர்த்தருடைய ஆலய கட்டிடத்திற்கு பழுதுபார்க்கத் தேவையான மற்ற பொருட்களையும் வாங்கினார்கள்.

13-14 ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காகப் பணத்தைக் கொடுத்தனர். வெள்ளிக் கிண்ணங்கள், இசைக்கருவிகள், எக்காளங்கள், பொன் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய ஆசாரியர்களால் அப்பணத்தை உபயோகிக்க முடியாமல் போனது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே இப்பணம் உபயோகமானது. அந்த வேலைக்காரர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள். 15 எவரும் பணமுழுவதையும் எண்ணிப் பார்க்கவில்லை. பணத்தை என்ன செய்தார்கள் என வேலைக்காரர்களை வற்புறுத்தவும் இல்லை. ஏனெனில் அவ்வேலைக்காரர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்!

16 குற்றப்பரிகாரப் பலியாகவும், பாவப்பரிகாரப் பலியாகவும் ஜனங்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் அப்பணத்தை ஆலயத் திருப்பணி செய்யும் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் தர பயன்படுத்தவில்லை. அது ஆசாரியர்களுக்கு உரியதாக இருந்தது.

யாக்கோபு 5:1-6

சுய நலமிக்க பணக்காரர்கள் தண்டிக்கப்படுவர்

பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துப் போகும். அந்தத் துருவே நீங்கள் தவறானவர்கள் என்பதை நிரூபிக்கும். அது உங்கள் சரீரத்தை நெருப்பு போல எரித்துவிடும். உங்கள் கடைசி நாட்களில் செல்வத்தைச் சேர்த்தீர்கள். மக்கள் உங்கள் வயல்களில் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை. அவர்கள் கூலிகளை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். இப்போது அவர்கள் மீண்டும் உங்களைப் பார்த்து கூக்குரலிடுகிறார்கள். கூலிக்காரர்களின் கதறல்களை அனைத்து அதிகாரமுமுள்ள கர்த்தர் கேட்டார்.

பூமியில் உங்கள் வாழ்வானது செல்வமிக்கது. உங்கள் விருப்பத்தின்படி கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைகிறீர்கள். உங்களை நீங்கள் கொழுக்க வைத்து வெட்டப்படப்போகிற மிருகங்களைப்போல் ஆகிறீர்கள். நல்ல மக்களுக்கு நீங்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களை எதிர்த்து நிற்காத நல்ல மக்களை நீங்கள் தண்டித்துக் கொலை செய்தீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center