Revised Common Lectionary (Complementary)
4 ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார். 5 குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். 6 முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். 7 இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும்.
146 கர்த்தரை துதி!
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன்.
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள்.
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது.
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள்.
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார்.
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார்.
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார்.
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார்.
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களை கர்த்தர் விடுவிக்கிறார்.
8 குருடர் மீண்டும் காண்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார்.
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்.
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்!
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்!
கர்த்தரைத் துதியுங்கள்!
அனைவரையும் நேசியுங்கள்
2 அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள். 2 உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம். 3 நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். 4 இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள்.
5 அன்பான சகோதர சகோதரிகளே, உலகம் ஏழையாகப் பார்க்கிற ஒருவனை விசுவாசத்தில் செல்வந்தனாக தேவன் தேர்ந்தெடுத்தார் என்பது உண்மையில்லையா? தான் நேசிப்பவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த இராஜ்யத்தை அந்த ஏழை மக்கள் பெறுவார்கள். 6 ஆனால் நீங்கள் ஏழைகளை மதிக்கவில்லை என்பதைப் புலப்படுத்தினீர்கள். செல்வந்தர்களே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? நீதிமன்றத்திற்கு உங்களை இழுப்பது அவர்கள் அல்லவா? 7 நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா?
8 ஒரு சட்டம் மற்ற சட்டங்களை ஆளுகின்றது. “நீ உன்னை நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக”(A) என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்ட சட்டம்தான் மிகச் சிறந்த சட்டமாகும். நீ இச்சட்டத்தின்படி செய்தால் பிறகு நீ சரியானதைச் செய்கிறாய். 9 ஆனால் நீ ஒருவனை மற்றவர்களை விட முக்கியமாக நடத்தினால் பிறகு நீ பாவம் செய்தவன் ஆகிறாய். நீ மிக உயர்ந்த தேவனின் சட்டத்தை உடைத்த குற்றவாளி ஆகிறாய்.
10 ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான்.
11 “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக”(A) என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக”(B) என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய்.
12 உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். 13 மற்ற மனிதர்கள் மீது கருணை காட்ட ஒருவன் தவறினால், அவனை நியாயந்தீர்க்கும்போது தேவன் அவன் மீது கருணை காட்டத் தவறுவார். மனிதர்கள் மீது கருணை காட்டுகிறவன் நியாயத்தீர்ப்பு நாளில் பயமின்றி நிற்க முடியும்.
விசுவாசமும் நற்செயல்களும்
14 எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? 15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. 17 இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.
யூதரல்லாத பெண்ணுக்கு உதவி
(மத்தேயு 15:21-28)
24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு குமாரத்தி, அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.
28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.
29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.
30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.
செவிட்டு மனிதனைக் குணமாக்குதல்
31 பிறகு இயேசு தீரு பகுதியை விட்டு விலகி சீதோன் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கலிலேயா கடற்கரைக்குச் சென்றார். அங்கு இயேசு தெக்கப்போலி வழியாக வந்தார். 32 அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர்.
33 இயேசு அவனை அந்த மக்களிடமிருந்து விலக்கி தனியாய் அழைத்துச் சென்றார். அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார். 34 இயேசு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். பிறகு அந்த மனிதனிடம் இயேசு, “எப்பத்தா” என்றார். (அதற்குத் “திறக்கப்படுவாயாக” என்று பொருள்) 35 இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது.
36 நடந்ததைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயேசு எப்போதும் தன்னைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம் என்றே கட்டளையிடுவார். ஆனால் இது மக்களை இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் மேலும், மேலும் சொல்ல வைத்தது. 37 மக்கள் அவரைப்பற்றி மிகவும் பிரமித்துப் போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்கிறார். அவர் செவிடர்களைக் கேட்க வைக்கிறார். ஊமைகளைப் பேச வைக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center