Revised Common Lectionary (Complementary)
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்.
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில்[a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
19 “பிறகு, நான் நான்காவது மிருகம் எதைக் குறிக்கும்? அதன் பொருள் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அந்த நான்காவது மிருகமானது மற்ற மிருகங்களிடமிருந்து வித்தியாசமானது. இது மிகப் பயங்கரமானது. இதற்கு இரும்புப் பல்லும் வெண்கல நகங்களும் இருந்தன. அது தன் இரையைப் பிடித்து நொறுக்கி முழுமையாகத் தின்றது. மற்றவர்களை அது காலால் மிதித்துத் துவைத்தது. 20 நான், நான்காவது மிருகத்தின் தலைமீது முளைத்த பத்துக் கொம்புகளைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதில் முளைத்த சிறிய கொம்பைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினேன். அச்சிறிய கொம்பு மற்ற பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது. அச்சிறு கொம்பிற்கு மனிதக் கண்கள் இருந்தன. அது தொடர்ந்து இறுமாப்பாய்ப் பேசியது. மற்றக் கொம்புகளை விடவும் இது குரூரமானதாகக் காணப்பட்டது. 21 நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இச்சிறு கொம்பு தேவனுடைய சிறப்பான ஜனங்களுக்கு எதிராகச் சண்டையிடத் துவங்கியது. அக்கொம்பு அவர்களைக் கொன்றது. 22 சிறு கொம்பானது, தேவனுடைய விசேஷமான ஜனங்களை நித்திய ஆயுசுள்ள ராஜா வந்து நியாயம்தீர்க்கும்வரை கொலைசெய்துகொண்டிருந்தது. நித்திய ஆயுசுள்ள ராஜா சிறிய கொம்பினை நியாயந்தீர்த்தார். இத்தீர்ப்பு தேவனுடைய விசேஷ ஜனங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் இராஜ்யத்தைப் பெற்றனர்.
23 “அவன் இதனை என்னிடம் விளக்கினான்: ‘நான்காவது மிருகம் என்பது பூமியில் வரவிருக்கும் நான்காவது இராஜ்யம். இது மற்ற இராஜ்யங்களைவிட வேறுபட்டது. நான்காவது இராஜ்யமானது உலகில் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரையும் அழிக்கும். அது நடந்து உலகில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை மிதித்து நசுக்கும். 24 இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து ராஜாக்களைக் குறிக்கும். இந்தப் பத்து ராஜாக்களும் போனபின்பு அடுத்த ராஜா வருவான். அவன் அவனுக்கு முன்பு ஆண்ட ராஜாக்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். அவன் மற்ற ராஜாக்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான். 25 இந்த விசேஷ ராஜா மிக உன்னதமான தேவனுக்கு எதிராகப் பேசுவான். அந்த ராஜா தேவனுடைய விசேஷ ஜனங்களைக் காயப்படுத்தவும் கொல்லவும் செய்வான். அந்த ராஜா ஏற்கெனவே அமைக்கப்பட்ட காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற முயல்வான். தேவனுடைய விசேஷ ஜனங்கள் மூன்றரை வருடங்களுக்கு அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26 “‘ஆனாலும் என்ன நிகழும் என்பதை நியாய சபை முடிவுசெய்யும். அந்த ராஜாவின் வல்லமை எடுத்துக்கொள்ளப்படும். அவனது இராஜ்யம் முழுமையாக முடிவடையும். 27 பிறகு தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தை ஆளுவார்கள். அவர்கள் பூமியிலுள்ள அனைத்து இராஜ்யங்களையும் ஆள்வார்கள். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். அவர்களுக்கு எல்லா இராஜ்யங்களில் உள்ள ஜனங்களும் மதிப்பளித்து, சேவை செய்வார்கள்.’
இரண்டு சாட்சிகள்
11 பிறகு கைக்கோல் போன்ற ஒரு அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்போது தேவதூதன் நின்று என்னிடம், “போ, போய் தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அளந்து பார், அதற்குள் வழிபட்டுக்கொண்டிருப்பவர்களையும் அளந்து பார். 2 ஆலயத்திற்கு வெளியே இருக்கிற பிரகாரம் யூதர் அல்லாதவர்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அளக்காதே. அந்த மக்கள் பரிசுத்த நகரத்தில் 42 மாதங்கள் நடமாடுவார்கள். 3 நான் எனது இரண்டு சாட்சிகளுக்கும் 1,260 நாட்களின் அளவிற்குத் தீர்க்கதரிசனம் சொல்ல அதிகாரம் கொடுப்பேன். அவர்கள் முரட்டுத் துணியாலான ஆடையை அணிந்திருப்பார்கள்” என்றான்.
4 இரண்டு ஒலிவ மரங்களும் பூமியின் கர்த்தருக்கு முன்னிலையில் இருக்கிற இரு விளக்குத்தண்டுகளும் இந்த இரு சாட்சிகளாகும். 5 எவராவது சாட்சிகளைச் சேதப்படுத்த முயற்சித்தால், சாட்சிகளின் வாயில் இருந்து நெருப்பு வந்து எதிரிகளை அழித்துவிடும். எவரொருவர் சாட்சிகளைச் சேதப்படுத்த முயன்றாலும் அவர்கள் இது போலவே அழிக்கப்படுவர். 6 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாள்களில் மழை பெய்துவிடாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு வல்லமை உண்டு. அவர்களுக்குத் தண்ணீரை இரத்தம் ஆக்குகிற வல்லமையும் உண்டு. விரும்பும்போதெல்லாம் அடிக்கடி பூமியைச் சகலவிதமான வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உண்டு.
7 அந்த இரு சாட்சிகளும் தங்களது செய்திகளைச் சொல்லி முடித்தபின், பாதாளத்தில் இருந்து வெளிவருகிற மிருகம் அவர்களை எதிர்த்துச் சண்டையிடும். அம்மிருகம் அவர்களைத் தோற்கடித்து அவர்களைக் கொல்லும். 8 பிறகு ஞானார்த்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் அழைக்கப்படுகிற அந்த மகா நகரத்தின் தெருக்களில் அச்சாட்சிகளின் சடலங்கள் கிடக்கும். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த நகரமும் இது தான். 9 ஒவ்வொரு இனத்திலும், பழங்குடியிலும், மொழியிலும், நாட்டிலும் உள்ள மக்கள், மூன்றரை நாட்களுக்கு நகர வீதிகளில் அப்பிணங்களைக் காண்பார்கள். அவற்றை அடக்கம் செய்ய அவர்கள் மறுப்பர். 10 அந்த இருவரும் இறந்துபோனதற்காக, பூமியில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவர். அவர்கள் விருந்து நடத்தி தமக்குள் பரிசுகளை அளிப்பர். அச்சாட்சிகள் உலகில் உள்ள மக்களுக்கு மிகுதியாகத் துன்பம் அளித்ததால்தான் அம்மக்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள்.
11 ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர். 12 பின்னர் அவ்விரு சாட்சிகளும் பரலோகத்தில் இருந்து வந்த ஒரு குரலைக் கேட்டனர். அது “இங்கே வாருங்கள்” என்று அழைத்தது. அவர்கள் மேகங்களின் வழியாகப் பரலோகத்துக்குப் போனார்கள். அவர்கள் போவதை அவர்களுடைய பகைவர்கள் கவனித்தனர்.
13 அதே நேரத்தில் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நகரின் பத்தில் ஒரு பகுதி அழிந்துபோனது. அந்நில நடுக்கத்தால் ஏழாயிரம் மக்கள் இறந்து போயினர். இறந்து போகாத மற்றவர்கள் மிகவும் பயந்துபோனார்கள். அவர்கள் பரலோகத்தில் உள்ள தேவனை மகிமைப்படுத்தினர்.
14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.
2008 by World Bible Translation Center