Revised Common Lectionary (Complementary)
நான்காவது விலங்கின் தீர்ப்பு
9 “நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன.
நீண்ட ஆயுசுள்ள ராஜா ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார்.
அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன.
அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன.
அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது.
அது கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது.
அவரது சிங்காசனம் நெருப்பினால் செய்யப்பட்டிருந்தது.
அச்சிங்காசனத்தின் சக்கரங்கள் ஜுவாலைகளால் செய்யப்பட்டிருந்தன.
10 நீண்ட ஆயுசுள்ள அரசருக்கு முன்னால்
ஒரு நெருப்பு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பல லட்சம் பேர் அரசருக்குப் பணிவிடைச் செய்தனர்.
அவருக்கு முன்னால் கோடா கோடிபேர் நின்றார்கள்.
இது செயல்படத் துவங்கும் நீதிமன்றம்போல்,
புத்தகங்களெல்லாம் திறந்துவைக்கப்பட்டிருந்தன.
13 “இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்தபோது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவரைப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர்.
14 “மனிதனைப்போன்று தோற்றமளித்த அவரிடம் அதிகாரம், மகிமை, ஆட்சி உரிமை கொடுக்கப்பட்டன. எல்லா ஜனங்களும் எல்லா மொழிக்காரர்களும் அவரைத் தொழவேண்டும். அவரது ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராஜ்யம் என்றென்றும் தொடரும். இது என்றைக்கும் அழிக்கப்படாமல் இருக்கும்.
93 கர்த்தர் ராஜா.
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
அது அசைக்கப்படுவதில்லை.
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
இயேசுவின் செய்திகளை சபைகளுக்கு யோவான் எழுதுகிறார்
4 ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுவது:
எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் இனிமேல் வரப்போகிறவருமான ஒருவராலும், அவரது சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 5 இயேசுவே உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தவர்களுள் முதலானவர் அவரே ஆவார்.
பூமியில் உள்ள ராஜாக்களுக்கு எல்லாம் அதிபதி இயேசு. 6 இயேசுவே நம்மை நேசிக்கிறவர். அவரே தமது இரத்தத்தால் நமது பாவங்களில் இருந்து நம்மை விடுதலை செய்தவர். தமது பிதாவாகிய தேவனின் முன்னிலையில் நம்மை ஆசாரியர்களாக்கி, அரசு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அவருக்கு மகிமையும், வல்லமையும் எப்போதும் உண்டாவதாக! ஆமென்.
7 பாருங்கள், இயேசு மேகங்களுடனே வருகிறார். ஒவ்வொருவரும் அவரைக் காண்பார்கள். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பூமியில் உள்ள அனைத்து மக்களும் அவரைப் பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள். ஆமாம், அது அப்படியே நடக்கும். ஆமென்.
8 கர்த்தர் கூறுகிறார்: “நான் அல்பாவும் ஒமேகாவுமாய்[a] இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்.”
33 பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். “நீ யூதர்களின் ராஜாவா?” என்று அவரிடம் கேட்டான்.
34 இயேசு அவனிடம், “இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா?” என்று கேட்டார்.
35 பிலாத்து அதற்கு, “நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டுவந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்?” என்று கேட்டான். 36 “எனது இராஜ்யம் இந்த உலகத்துக்கு உரியதன்று. அது இந்த உலகத்தோடு தொடர்புடையது எனில் என் சேவகர்கள் எனக்காகப் போரிட்டிருப்பார்கள். நான் யூதர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கமாட்டேன். எனவே என் இராஜ்யம் இவ்விடத்திற்கு உரியதன்று” என்று இயேசு சொன்னார்.
37 பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ ராஜா தானோ?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு, “நான் ராஜா என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான்” என்றார்.
2008 by World Bible Translation Center