Revised Common Lectionary (Complementary)
93 கர்த்தர் ராஜா.
அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார்.
அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது,
அது அசைக்கப்படுவதில்லை.
2 தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது.
தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
3 கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது.
மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன.
4 கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன.
ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர்.
5 கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும்.
உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும்.
சீதோனுக்கு எதிரான செய்தி
20 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, சீதோனுக்கு எதிராகத் திரும்பி எனக்காகத் தீர்க்கதரிசனம் சொல். 22 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என்று சொல்.
“‘சீதோனே நான் உனக்கு எதிராக இருக்கிறேன்!
உன் ஜனங்கள் என்னை மதிக்க கற்பார்கள்.
நான் சீதோனைத் தண்டிப்பேன்.
பிறகு, நானே கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
பிறகு, நான் பரிசுத்தமானவர் என்று அறிவார்கள்.
அவ்வாறே என்னை அவர்கள் மதிப்பார்கள்.
23 நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன்.
நகரத்தில் பலர் மரிப்பார்கள்.
பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”
இஸ்ரவேலைக் கேலி செய்வதை நாடுகள் நிறுத்தும்
24 “‘இஸ்ரவேலைச் சுற்றிலுள்ள நாடுகள் அவளை வெறுத்தனர். ஆனால் அந்நாடுகளுக்குத் தீமைகள் ஏற்படும். பிறகு அங்கே இஸ்ரவேல் வம்சத்தாரைப் புண்படுத்தும் முட்களும் துன்புறுத்தும் நெருஞ்சிலும் இல்லாமல் போகும். அப்பொழுது நானே அவர்களுடைய கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்ளுவார்கள்.’”
25 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “நான் இஸ்ரவேல் ஜனங்களை மற்ற நாடுகளில் சிதறடித்தேன். ஆனால் மீண்டும் இஸ்ரவேல் வம்சத்தாரை ஒன்று சேர்ப்பேன். பிறகு அந்நாடுகள் நான் பரிசுத்தமானவர் என்பதை அறிந்து அவ்வாறு என்னை மதிப்பார்கள். அந்நேரத்தில், இஸ்ரவேலர்கள் தம் நாட்டில் வாழ்வார்கள், நான் அந்த நாட்டை என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்தேன். 26 அவர்கள் தம் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வீடுகட்டுவார்கள். திராட்சை தோட்டங்களை அமைப்பார்கள். அதனை வெறுக்கிற, சுற்றிலும் உள்ள அனைத்து நாட்டினரையும் நான் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
20 ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். 21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. 22 ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். 23 ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். 24 அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார்.
25 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். 26 கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும். 27 “தேவன் அவரது அதிகாரத்துக்குள் எல்லாவற்றையும் வைத்தார்”(A) என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது” எனும்போது தேவனை உள்ளடக்கிக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தியவர் தேவனே. 28 எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.
2008 by World Bible Translation Center