Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
2 எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?
3 எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
இல்லையெனில் நான் மடிவேன்.
4 அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.
5 கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
6 கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.
தானியேலிடம் தரிசனம் விளக்கப்படுகிறது
15 தானியேலாகிய நான், இந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். இதன் பொருள் என்னவென்று புரிந்துகொள்ள முயன்றேன். நான் தரிசனத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது, மனிதனைப்போன்று தோன்றியவர் திடீரென்று என் முன் எழுந்து நின்றார். 16 பிறகு நான் மனிதனின் குரலைக் கேட்டேன். இந்தக் குரல் ஊலாய் ஆற்றுக்கு மேலிருந்து வந்தது. இந்தக் குரல், “காபிரியேலே, இந்த மனிதனிடம் தரிசனத்தை விளக்கு” என்றது.
17 எனவே மனிதனைப்போன்று தோன்றிய காபிரியேல் தேவதூதன், என்னிடம் வந்தான். நான் மிகவும் பயந்து தரையில் விழுந்தேன். ஆனால் காபிரியேல் என்னிடம், “மனிதனே, இந்த தரிசனமானது முடிவு காலத்தைக் குறித்தது” என்றான்.
18 காபிரியேல் பேசிக்கொண்டிருக்கும்போது நான் தரையில் விழுந்து தூங்கிவிட்டேன். அது ஆழ்ந்த உறக்கம். பிறகு காபிரியேல் என்னைத் தொட்டு நிற்கும்படியாகத் தூக்கிவிட்டான். 19 காபிரியேல், “இப்பொழுது, நான் தரிசனம் பற்றி விளக்குவேன். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்வேன். உனது தரிசனம் காலத்தின் முடிவைப்பற்றியது.
20 “நீ இரண்டு கொம்புள்ள செம்மறியாட்டுக்கடாவைப் பார்த்தாய். அக்கொம்புகள் மேதியா, பெர்சியா எனும் தேசங்களாகும். 21 வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் ராஜா. இரண்டு கண்களுக்கு மத்தியில் முளைத்த கொம்பானது முதல் ராஜாவாகும். 22 அந்தக் கொம்பு உடைந்தது. அந்த இடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு இராஜ்யங்களாகும். அந்த நான்கு இராஜ்யங்களும் முதல் ராஜாவின் தேசத்திலிருந்து வரும். ஆனால் அந்த நான்கு தேசங்களும் முதல் ராஜாவைப் போன்று அவ்வளவு பலமுடையதாக இல்லை.
23 “அந்த இராஜ்யங்களுக்கு முடிவு நெருங்கும்போது, அங்கு தைரியமும் கொடுமையும் வாய்ந்த ஒரு ராஜா தோன்றுவான். இந்த ராஜா மிகவும் தந்திரசாலியாக இருப்பான். ஏராளமாக மேலும், மேலும் ஜனங்கள் பாவம் செய்யும்போது இது நிகழும். 24 இந்த ராஜா மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான். ஆனால் இந்த வல்லமை இவனிடத்திலிருந்து வருவதாக இருக்காது. இந்த ராஜா பயங்கரமான அழிவுக்குக் காரணமாக இருப்பான். அவன் செய்கிற எல்லாவற்றிலும் வெற்றிகரமாக விளங்குவான். அவன் வல்லமைமிக்க ஜனங்களையும் தேவனுடைய விசேஷ ஜனங்களையும் அழிப்பான்.
25 “இந்த ராஜா மிகவும் உபாயமும் தந்திரமும் உடையவனாக இருப்பான். அவன் வெற்றி பெறுவதற்காகத் தனது ஞானத்தையும், பொய்களையும் பயன்படுத்துவான். அவன் தன்னை மிகவும் முக்கியமானவன் என்று நினைப்பான். அவன் பல ஜனங்களை அவர்கள் எதிர்பார்திராத நேரத்தில் அழிப்பான். அவன் அதிபதிகளுக்கெல்லாம் அதிபதியானவரோடு (தேவன்) போரிட முயற்சி செய்வான். ஆனால் கொடுமையான ராஜாவின் வல்லமை அழிக்கப்படும். அவனை அழிக்கப்போவது மனிதக் கைகளாக இருக்காது.
26 “அந்தக் காலங்களைப்பற்றிய தரிசனமும் நான் சொன்னவையும் உண்மையானவை. ஆனால் தரிசனத்தை நீ முத்திரையிட்டு வை. அதற்கு இன்னும் அநேக காலம் ஆகும்.” என்றான்.
27 தானியேலாகிய நான் மிகவும் பலவீனனாகிவிட்டேன். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு பல நாட்கள் நான் நோயுற்றேன். பிறகு நான் எழுந்து ராஜாவுக்காக வேலை செய்யப்போனேன். ஆனால் நான் அந்தத் தரிசனத்தால் கலங்கிக்கொண்டிருந்தேன். தரிசனத்தின் பொருள் என்னவென்று நான் புரியாமல் இருந்தேன்.
உனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் விட்டுவிடாதே
32 நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். 33 சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். 34 ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள்.
35 எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். 36 நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். 37 கொஞ்ச காலத்தில்,
“வரவேண்டியவர் வருவார்,
அவர் தாமதிக்கமாட்டார்.
38 விசுவாசத்தினாலே நீதிமானாக
இருக்கிறவன் பிழைப்பான்.
அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால்
நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.”(A)
39 ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
2008 by World Bible Translation Center