Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 16

தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.

16 தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர்,
    என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
பூமியிலுள்ள தன் சீடருக்கு கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார்.
    அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதை கர்த்தர் காட்டுகிறார்.
பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள்.
    அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன்.
    அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.

என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும்.
    கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
என் பரம்பரைச் சொத்து அற்புதமானது.
    நான் பெற்ற பங்கு மிக அழகானது.

எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன்.
    இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
    அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும்.
    என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
10 ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர்.
    உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
11 சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர்.
    கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும்.
    உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.

தானியேல் 4:4-18

நேபுகாத்நேச்சாராகிய நான் எனது அரண்மனையில் மகிழ்ச்சியுடனும், வெற்றியோடும் இருந்தேன். என்னை அச்சுறுத்தும் ஒரு கனவை நான் கண்டேன். நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனதில் படங்களையும், தரிசனங்களையும் பார்த்தேன். அவை என்னை மிகவும் அச்சுறுத்தின. எனவே என் கனவிற்குரிய பொருளைக் கூறும்படி நான் பாபிலோனிலுள்ள அனைத்து ஞானிகளையும் அழைத்துவருமாறு கட்டளையிட்டேன். சாஸ்திரிகளும், கல்தேயர்களும் வந்தபோது நான் அவர்களிடம் என் கனவைப்பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களால் கனவின் பொருளைச் சொல்ல முடியவில்லை. இறுதியாக, தானியேல் என்னிடம் வந்தான், (நான் தானியேலுக்கு என் தேவனைப் பெருமைப்படுத்தும்படி பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டிருந்தேன். பரிசுத்த தெய்வங்களின் ஆவி அவனிடமிருந்தது.) நான் தானியேலிடம் எனது கனவைச் சொன்னேன்.

“பெல்தெஷாத்சார், நீ சாஸ்திரிகளிலேயே மிகவும் முக்கியமானவன். உன்னிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதை நான் அறிவேன். உன்னால் புரிந்துகொள்ள முடியாத கடுமையான இரகசியம் இல்லை என்பதை அறிவேன். நான் கண்ட கனவு இதுதான். என்னிடம் இதன் பொருள் என்னவென்று சொல். 10 நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது கண்ட தரிசனங்கள் இதுதான். என் முன்னால் பூமியின் மத்தியில் ஒரு மரம் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மரம் மிக உயரமாக இருந்தது. 11 அம்மரம் பெரிதாகவும் பலமுடையதாகவும் வளர்ந்தது. அம்மரத்தின் உச்சி வானத்தைத் தொட்டது. அதனை பூமியின் எந்த இடத்தில் இருந்தும் பார்க்கமுடியும். 12 அம்மரத்தின் இலைகள் மிக அழகானவை. அதில் ஏராளமான நல்ல பழங்கள் இருந்தன. அம்மரத்தில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான உணவு இருந்தது. அம்மரத்தின் அடியில் காட்டு மிருகங்கள் தங்கின. அதன் கிளைகளில் பறவைகள் வசித்தன. ஒவ்வொரு மிருகங்களும் அம்மரத்திலிருந்து சாப்பிட்டன.

13 “நான் படுக்கையில் படுத்திருந்தபோது நான் அவற்றைக் காட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நான், ஒரு பரிசுத்தமான தேவதூதன் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். 14 அவன் உரத்தகுரலில்: மரத்தை வெட்டிப்போடுங்கள். அதன் கிளைகளை வெட்டிப் போடுங்கள். அதன் இலைகளை உதிர்த்துவிடுங்கள். அதன் பழங்களைச் சிதறடியுங்கள். அம்மரத்தின் அடியிலுள்ள மிருகங்கள் ஓடிப்போகும். அதன் கிளைகளில் உள்ள பறவைகள் பறந்துபோகும். 15 ஆனால் அதன் தண்டையும், வேர்களையும், மண்ணிலே இருக்கவிடுங்கள். அதைச் சுற்றி இரும்பாலும், வெண்கலத்தாலுமான விலங்கைப் போடுங்கள். அதின் தண்டும் வேர்களும் தம்மைச் சுற்றிலும் புல்லிருக்கின்ற வெளியில் இருக்கும். அது காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு மத்தியில் இருக்கும். அது பனியில் நனையும். 16 அவன் ஒரு மனிதனைப்போல சிந்திக்கமாட்டான். அவன் ஒரு மிருகத்தின் மனதைப் பெறுவான். அவன் இவ்வாறு இருக்கையில் ஏழு பருவங்களும் கடந்துபோகும் என்று கூறினான்.

17 “பரிசுத்த தேவதூதன் இத்தண்டனையை அறிவித்தது ஏன்? அதனால் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் மனிதர்களின் இராஜ்யங்களை மிக உன்னதமான தேவன் ஆளுகிறார் என்று அறிந்துகெள்வார்கள். தேவன் அந்த இராஜ்யங்களை தாம் விரும்புகிற எவருக்கு வேண்டுமானாலும் கொடுக்கிறார். தேவன் அந்த இராஜ்யங்களை ஆள பணிவானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

18 “நேபுகாத்நேச்சாரகிய நான் கண்ட கனவு இதுதான். இப்பொழுது பெல்தெஷாத்சாரே (தானியேல்), இதன் பொருள் என்னவென்று சொல். எனக்காக என் இராஜ்யத்தில் உள்ள எந்த ஞானிக்கும் இதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை. ஆனால் பெல்தெஷாத்சாரே, நீ இதற்கு விளக்கமளிக்கமுடியும். ஏனென்றால் பரிசுத்த தேவனுடைய ஆவி உன்னில் இருக்கிறது.”

1 தீமோத்தேயு 6:11-21

நினைவுகொள்ளவேண்டிய விஷயங்கள்

11 நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். 12 விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய். 13 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் முன்பாக நான் ஒரு ஆணையை இடுகிறேன். பொந்தியு பிலாத்துவின் முன்னால் நிற்கும்போது அவர் பேருண்மைக்கு சாட்சியம் வழங்கினவர். கிறிஸ்து இயேசு ஒருவரே எல்லாவற்றிற்கும் வாழ்வளிக்கிறார். 14 அதனால் இப்பொழுது உனக்குக் கூறுகிறேன், உனக்கு ஆணையிட்டுள்ளபடி செய். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்வரை குற்றம் இல்லாமலும் பிழை இல்லாமலும் சரியாகச் செய். 15 தேவன் அதனைச் சரியான நேரத்தில் நிகழும்படி செய்வார். தேவன் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும், ஏக சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார். அவரே ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், கர்த்தர்களுக்கெல்லாம் கர்த்தராகவும் விளங்குகிறார். 16 அவர் ஒருவரே என்றும் மரிப்பதில்லை. அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கமுடியாது. என்றென்றைக்கும் அவருக்குக் கனமும் வல்லமையும் உண்டாகுவதாக ஆமென்.

17 இந்த ஆணைகளைச் செல்வர்களிடம் கூறு. பெருமிதம் கொள்ளவேண்டாம் என அவர்களுக்குச் சொல். செல்வத்தின் மீது விசுவாசம் நிரந்தரமாக வைக்கவேண்டாம் என்றும், தேவன் மீது விசுவாசம் வைக்குமாறும் கூறு. செல்வம் விசுவாசிப்பதற்கு உரியதன்று. ஆனால் தேவன் நம்மை செழிப்பாகப் பாதுகாக்கிறார். அவற்றை நாம் சந்தோஷமாக அனுபவிக்க அவர் கொடுக்கிறார். 18 நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு. 19 இவற்றைச் செய்வதன் மூலம் அவர்கள் பரலோகத்தில் ஒரு பொக்கிஷத்தைச் சேமித்து வைக்கிறார்கள். அது அவர்களுக்குப் பலமான அஸ்திபாரமாக எதிர்கால வாழ்வைக் கட்ட உதவியாக இருக்கும். அதனால் உண்மையான வாழ்வைப் பெறுவர்.

20 தீமோத்தேயுவே, தேவன் உன்னிடம் நம்பிக்கையுடன் பல நல்ல காரியங்களைத் தந்திருக்கிறார். அவற்றைப் பாதுகாத்துக்கொள். தேவனிடமிருந்து வராத முட்டாள்தனமான காரியங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து விலகு. உண்மைக்கு எதிராக வாதம் செய்கிறவர்களிடமிருந்தும் விலகிப் போ. அவர்கள் “ஞானம்” என்று அழைப்பதெல்லாம் தவறான “ஞானம்” ஆகும். 21 சிலர் தங்களிடம் அந்த “ஞானம்” உள்ளதாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையான போதனையில் இருந்து விலகிப்போனார்கள்.

தேவனுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center