Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 51

இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.

51 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
    என் பாவங்களை அழித்துவிடும்.
தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
    என் பாவங்களைக் கழுவிவிடும்.
    என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!

நான் பாவம் செய்தேனென அறிவேன்.
    அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
    தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
    உமது முடிவுகள் நியாயமானவை.
நான் பாவத்தில் பிறந்தேன்.
    என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.

தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
    உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
    பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
    நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
எனது பாவங்களைப் பாராதேயும்!
    அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்

10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
    எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
    என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
    மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
    எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
    அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.

14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
    என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15     என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
    நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
    தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.

18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
    எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
    ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.

உபாகமம் 28:58-29:1

58 “நீ இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ உனது தேவனாகிய கர்த்தருடைய அற்புதமும் பயங்கரமுமான பெயருக்கு மதிப்பளிக்க வேண்டும். நீ கீழ்ப்படியாவிட்டால் பிறகு 59 கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும். 60 எகிப்தில் நீ பல துன்பங்களையும் நோய்களையும் பார்த்தாய். அவை உன்னை அஞ்சும்படி செய்தன. உனக்கு அத்துன்பங்களையெல்லாம் கர்த்தர் கொண்டு வருவார். 61 இந்தப் போதனைகளின் புத்தகத்தில் எழுதப்படாத துன்பங்களையும், நோய்களையும் கர்த்தர் உனக்குக் கொண்டுவருவார். நீ அழிக்கப்படும்வரை கர்த்தர் இதனைத் தொடர்ந்து செய்வார். 62 நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அதிக எண்ணிக்கையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களிடம் சிலரே மீதியாகவிடப்படுவீர்கள். ஏனென்றால், நீ உனது தேவனாகிய கர்த்தருக்குச் செவிசாய்க்கவில்லை.

63 “கர்த்தர் உனக்கு நல்லவராக இருப்பதிலும் உனது நாட்டை வளர்ச்சி அடைய செய்வதிலும் மகிழ்ந்தார். அதே வழியில் உன்னை அழிப்பதிலும் அதம்பண்ணுவதிலும் மகிழ்ச்சியடைவார். நீ அந்த நாட்டை உனக்குச் சொந்தமானதாக ஆக்கப்போகிறாய், ஆனால் ஜனங்கள் அந்த நாட்டைவிட்டு உன்னை அப்புறப்படுத்துவார்கள். 64 கர்த்தர் உங்களை உலக நாட்டு குடிகளினிடையில் சிதறடிப்பார். அங்கே நீ கல்லாலும், மரத்தாலும் ஆன பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்வாய். அவர்கள் உன்னாலும் உனது முற்பிதாக்களாலும் ஆராதிக்கப்படாத பொய்த் தெய்வங்கள்.

65 “இந்நாட்டு குடிகளுக்குள்ளே நீ சமாதானத்தைப் பெறமாட்டாய், உனக்கு ஓய்வு கொள்ள இடமிருக்காது. கர்த்தர் உனது மனம் முழுவதையும் கவலைகளால் நிரப்புவார். உனது கண்கள் சோர்வை உணரும். நீ மிகுந்த மனசஞ்சலம் அடைவாய். 66 நீ எப்பொழுதும் ஆபத்துக்களுக்கிடையில் பயத்தோடு இருப்பாய். நீ இரவும், பகலும் பயப்படுவாய். நீ உனது வாழ்க்கையைப் பற்றிய உறுதி இல்லாமல் இருப்பாய். 67 காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய். 68 கப்பல்களில் கர்த்தர் உன்னை மீண்டும் எகிப்திற்கு அனுப்புவார். உங்களை மீண்டும் அனுப்பமாட்டேன் என்று நான் சொன்னேன். ஆனால், கர்த்தர் உங்களை அனுப்புவார். எகிப்தில் உங்கள் பகைவர்களுக்கு நீங்களே உங்களை அடிமைகளாக விற்பீர்கள். ஆனால் உங்களை யாரும் வாங்கமாட்டார்கள்.”

மோவாபில் உடன்படிக்கை

29 கர்த்தர், இஸ்ரவேல் ஜனங்களோடு ஓரேப் மலையின் (சீனாய்) மேல் உடன்படிக்கை செய்தார். அவர்கள் மோவாபில் இருக்கும்போது உடன்படிக்கையோடு கர்த்தர், இன்னொரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். இதுதான் அந்த உடன்படிக்கை:

அப்போஸ்தலர் 7:17-29

17 “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) 18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. 19 இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான்.

20 “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். 21 மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் குமாரத்தி அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள். 22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

23 “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். 24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். 25 தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

26 “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். 27 ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. 28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’(A) என்றான். 29 அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center