Revised Common Lectionary (Complementary)
கிமெல்
17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
ஆராமின் ராஜா இஸ்ரவேல் ராஜாவைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்
8 ஆராமின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். ராஜா, “இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்” என்றான்.
9 ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, “எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!” என்று சொல்லச் செய்தான்.
10 உடனே ராஜா எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.
11 இதை அறிந்ததும் ஆராமின் ராஜா மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் ராஜாவுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான்.
12 ஒரு அதிகாரி, “எங்கள் ராஜாவும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் ராஜாவிடம் சொல்ல முடியும்!” என்றான்.
13 அதற்கு ராஜா, ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான்.
வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர்.
14 பிறகு ராஜா குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர். 15 தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
16 எலிசாவோ, “பயப்படவேண்டாம், ஆராம் ராஜாவுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்” என்றான்.
17 பிறகு அவன் ஜெபம் செய்து “கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்” என்று வேண்டிக்கொண்டான்.
அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்!
18 பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். 19 எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.
20 அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான்.
பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! 21 இஸ்ரவேலின் ராஜா ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான்.
22 அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான்.
23 ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் ராஜா நிறைய உணவைத் தயாரித்தான். ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் ராஜா ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.
லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு
32 எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை[a] அவன் சந்தித்தான். 33 அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். 35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.
2008 by World Bible Translation Center