Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
9 கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.
17 ஆனால் சீயோன் மலையின் மேல் தப்பிப் பிழைத்தோர் இருப்பார்கள்.
அவர்கள் எனது சிறப்பான ஜனங்களாக இருப்பார்கள்.
யாக்கோபின் நாடு தனக்குரியவற்றைத்
திரும்ப எடுத்துக்கொள்ளும்.
18 யாக்கோபின் குடும்பம் நெருப்பைப் போன்றிருக்கும்.
யோசேப்பின் நாடானது சுவாலையைப் போன்றிருக்கும்.
ஆனால் ஏசாவின் நாடு சாம்பலைப் போன்றிருக்கும்.
யூதா ஜனங்கள் ஏதோமை எரிப்பார்கள்.
யூதா ஜனங்கள் ஏதோமை அழிப்பார்கள்.
அதன் பிறகு ஏசாவின் நாட்டில் தப்பிப் பிழைத்தோர் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.”
ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் இதைக் கூறினார்.
19 பிறகு ஏசா மலைமீது,
நெகேவ் ஜனங்கள் வாழ்வார்கள்.
மலை அடிவாரத்திலுள்ள ஜனங்கள் பெலிஸ்தியர்களின் நிலங்களை எடுத்துக்கொள்வார்கள்.
எப்பிராயீம் மற்றும் சமாரியா நாடுகளில்
அந்த ஜனங்கள் வாழ்வார்கள்.
கீலேயாத் பென்யமீனுக்கு உரியதாகும்.
20 இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டவர்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் சாரிபாத் வரையுள்ள கானான் நாட்டை எடுத்துக்கொள்வார்கள்.
யூதா ஜனங்கள் எருசலேமை விட்டு வெளியேறி சேப்பாராதத்தில் வாழும்படி வற்புறுத்தப்படுவார்கள்.
ஆனால் அவர்கள் நெகேவ் நகரங்களை எடுத்துக்கொள்வார்கள்.
21 விடுவிக்கிக்கப்பட்டவர்கள் சீயோன் மலைக்குப்போய்
ஏசா மலையில் வாழும் ஜனங்களை நியாயம்தீர்த்து ஆட்சி செய்வார்கள்.
இராஜ்யம் கர்த்தருக்கு உரியதாகும்.
செல்வந்தனும் லாசருவும்
19 “விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.
22 “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். 24 அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.
25 “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.
27 “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.
29 “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.
30 “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.
31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center