Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்.
26 கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
2 கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
3 நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
4 நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
5 அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
6 கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
7 கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
8 கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
9 கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
10 அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
11 ஆனால் நான் களங்கமற்றவன்.
எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
12 நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.
ஏதோம் தண்டிக்கப்படும்
1 இது ஒபதியாவின் தரிசனம். என் கர்த்தராகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைப் பற்றி இதனைக் கூறுகிறார்.
நாங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து ஒரு அறிக்கையைக் கேட்டோம்.
ஒரு தூதுவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்.
அவர், “நாம் போய் ஏதோமுக்கு எதிராகச் சண்டையிடுவோம்” என்று கூறினார்.
கர்த்தர் ஏதோமிடம் பேசுகிறார்
2 “ஏதோமே, நான் உன்னை மிகவும் சிறிய நாடாக்குவேன்.
ஜனங்கள் உன்னை மிகவும் வெறுப்பார்கள்.
3 உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது.
கன்மலை உச்சியிலுள்ள குகைகளில் நீ வசிக்கிறாய்.
உன் வீடு மலைகளின் உச்சியில் உள்ளது.
எனவே நீ உனக்குள்ளேயே,
‘எவராலும் என்னைத் தரைக்குக் கொண்டு வரமுடியாது’” என்கிறாய்.
ஏதோம் கீழே கொண்டு வரப்படும்
4 தேவனாகிய கர்த்தர்:
“நீ கழுகைப் போன்று உயரப்போனாலும் நட்சத்திரங்களுக்கிடையில் உன் கூட்டைக் கட்டினாலும்,
நான் அங்கிருந்து உன்னைக் கீழே கொண்டு வருவேன்” என்று கூறுகிறார்.
5 “நீ உண்மையில் அழிக்கப்படுவாய்.
திருடர்கள் உன்னிடம் வருவார்கள்.
கள்ளர்கள் இரவில் வருவார்கள்.
அத்திருடர்கள் தாம் விரும்புகிற அனைத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
வேலைக்காரர்கள் உங்கள் வயல்களில் திராட்சையைப் பறிக்கும்போது
சில திராட்சைப் பழங்களை விட்டுவைப்பார்கள்.
6 ஆனால் பகைவன் ஏசாவினுடைய மறைக்கப்பட்ட கருவூலங்களைத் தீவிரமாகத் தேடுவான்.
அவர்கள் அவையனைத்தையும் கண்டுப்பிடிபார்கள்.
7 உன் நண்பர்களான அனைத்து ஜனங்களும்
நாட்டை விட்டு வெளியேற உன்னை வற்புறுத்துவார்கள்.
உன்னோடு சமாதானமாக உள்ள ஜனங்கள் (நல்ல நண்பர்கள்) தந்திரம் செய்து
உன்னைத் தோற்கடிப்பார்கள்.
உன் நண்பர்கள் உனக்காக ஒரு கண்ணியைத் திட்டமிடுகிறார்கள்.
‘அவன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை!’”
என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
8 கர்த்தர் கூறுகிறார்:
“அந்த நாளில், நான் ஏதோமிலுள்ள ஞானிகளை அழிப்பேன்.
ஏசாவின் மலைகளில் உள்ள புத்திமான்களை அழிப்பேன்.
9 தேமானே, உனது பலவான்கள் பயப்படுவார்கள்.
ஏசாவின் மலையில் உள்ள ஒவ்வொருவரும் அழிக்கப்படுவார்கள்.
அநேக ஜனங்கள் கொல்லப்படுவார்கள்.
பெருங்கூட்டம்
9 பிறகு நான் பார்த்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். ஒரு மனிதனால் எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் சகல நாடுகளிலும், பழங்குடிகளிலும், இனங்களிலும், மொழிகளிலும், இருந்து வந்தவர்கள். அவர்கள் சிம்மாசனத்தின் முன்னும், ஆட்டுக்குட்டியானவர் முன்னும் நின்றனர். அவர்கள் வெள்ளை அங்கிகளை அணிந்து தம் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர். 10 அவர்கள் உரத்த குரலில் “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கும் நம் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் வெற்றி உரியது!” என்று குரல் எழுப்பினர்.
11 அங்கே நான்கு உயிருள்ள ஜீவன்களும் மூப்பர்களும் இருந்தனர். அவர்களையும் சிம்மாசனத்தையும் சுற்றி தேவ தூதர்கள் நின்றனர். அவர்கள் தலைகுனிந்து பணிவுடன் வழிபட்டார்கள். 12 அவர்கள், “ஆமென்! எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பலமும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக! ஆமென்” என்றனர்.
13 பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.
14 அதற்கு நான், “ஐயா, அது உங்களுக்கே தெரியும்” என்றேன்.
அந்த மூப்பரோ, “இவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து[a] உடுத்தியவர்கள். இப்பொழுது இவர்கள் வெண்மையாகவும் தூய்மையாகவும் இருக்கின்றனர். 15 எனவே இப்பொழுது இவர்கள் சிம்மாசனத்தில் உள்ள தேவனின் முன்னால் நிற்கின்றனர். அவர்கள் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் தேவனை வழிபடுகின்றனர். சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர்களைக் காப்பாற்றுவார். 16 இவர்களுக்கு ஒருபோதும் மீண்டும் பசி வருவதில்லை. இவர்களுக்கு ஒருபோதும் தாகமும் எடுப்பதில்லை. சூரியன் இவர்களைச் சுடுவதில்லை. வெப்பமும் இவர்களைத் தாக்குவதில்லை. 17 சிம்மாசனத்தின் நடுவில் உள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களின் மேய்ப்பராகி இவர்கள் அனைவரையும் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றுக்கு அழைத்துச் செல்வார். இவர்களின் கண்களில் இருந்து பெருகும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தேவன் துடைத்துவிடுவார்.”
2008 by World Bible Translation Center