Revised Common Lectionary (Complementary)
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
5 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
2 எனது தேவனாகிய ராஜாவே,
என் ஜெபத்தைக் கேளும்.
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.
18 நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இச்செய்தியைப் பெற்றேன். 19 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “உங்களுக்குத் துக்கம் கொள்ளவும், உபவாசம் இருக்கவும், நாலாவது மாதத்திலும், ஐந்தாவது மாதத்திலும், ஏழவாவது மாதத்திலும், பத்தாவது மாதத்திலும் சிறப்பான நாட்கள் இருக்கும். அந்தத் துக்கத்துக்குரிய நாட்களை மகிழ்ச்சிக்குரிய நாட்களாக மாற்றவேண்டும். அவை நல்ல மகிழ்ச்சிகரமான நாட்களாக இருக்கும். நீங்கள் உண்மையையும் சமாதானத்தையும் நேசிக்க வேண்டும்.”
20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்,
“எதிர்காலத்தில், எருசலேமிற்கு பல நகரங்களிலிருந்து ஜனங்கள் வருவார்கள்.
21 வேறுபட்ட நகரங்களிலிருந்து ஜனங்கள் ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லுவார்கள்.
அவர்கள், ‘நாங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொள்ளப் போகிறோம்’ என்பார்கள்.
மேலும் மற்றவன் ‘நான் உன்னோடு வரவிரும்புகிறேன்’ என்பான்.”
22 சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பார்ப்பதற்காக அநேக நாடுகளிலிருந்து அநேக ஜனங்கள் வருவார்கள். அவர்கள் அவரை தொழுதுகொள்வதற்காக வருவார்கள். 23 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “அந்த வேளையில், வேவ்வேறு மொழிகளைப் பேசுகிற ஜனங்கள் யூதரிடம் வருவார்கள். பல அன்னிய நாட்டினர் ஒரு யூதனின் உடையின் ஓரத்தைப் (வஸ்திரத்தொங்கலை) பிடித்துக்கொள்வார்கள். அவர்கள், ‘தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். நாங்கள் அவரை தொழுதுகொள்ள உங்களோடு வரலாமா?’ என்று கேட்பார்கள்.”
கிறிஸ்துவின் பகைவரைப் பின்பற்றாதீர்கள்
18 எனது அன்பான பிள்ளைகளே, முடிவு நெருங்குகிறது. போலிக் கிறிஸ்து வந்துகொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் பகைவர்கள் பலர் இங்கு ஏற்கெனவே உள்ளனர். எனவே முடிவு நெருங்குகிறது என்பதை நாம் அறிவோம். 19 நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.
20 புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும். 21 ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார்.
24 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்ட போதனையைப் பின்பற்றுவதைத் தொடருங்கள். அப்போதனையைத் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.
2008 by World Bible Translation Center