Revised Common Lectionary (Complementary)
7 கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
8 கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.
9 கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.
இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசுதல்
1 இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே அறிவித்தச் செய்தி. யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள பாலைவனத்தின் பள்ளத்தாக்கில் அவர்கள் இருந்தபொழுது, மோசே அவர்களிடம் சொன்னான். அப்பகுதி சூப்புக்கு எதிராகவும், பாரான் பாலைவனத்திற்கும் தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இருந்தது.
2 ஓரேப் மலையிலிருந்து (சீனாய்) சேயீர் குன்றுகள் வழியாக காதேஸ்பர்னேயாவுக்கு பயணம் செய்வதற்கு பதினோரு நாட்கள் ஆகும். 3 ஆனால் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பதாண்டுகள் கழிந்தபின்னரே இவ்விடத்தை அடைந்தனர். நாற்பதாவது ஆண்டின் பதினோராவது மாதத்தின் முதல் நாளன்று, மோசே அந்த ஜனங்களிடம் பேசினான். அவர்களிடம் கூறுமாறு தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே எடுத்துச் சொன்னான். 4 கர்த்தர் சீகோனையும் ஓகையும் வெற்றிக்கொண்ட பின்னர் இது நடந்தது. (எஸ்பானில் வசித்த சீகோன் எமோரியரின் ராஜா. பாசான் மன்னனாகிய ஓக், அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வசித்தான்.) 5 இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே மோவாப் நிலப்பகுதியில் இருந்தபொழுது, தேவன் கட்டளையிட்டவற்றை மோசே அவர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னான். மோசே,
6 “நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் (சீனாய்) நம்மிடம் பேசினார். தேவன் சொன்னது என்னவென்றால்: ‘நீங்கள் நீண்டகாலம் இம்மலையில் தங்கியிருந்தது போதும். 7 எமோரிய ஜனங்கள் வாழும் மலை நாட்டிற்கும், அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களுக்கும் செல்லுங்கள். யோர்தான் பள்ளத்தாக்கு, மலைநாடு, மேற்குச்சரிவுகள், யூதேயாவின் தெற்கிலுள்ள நெகேவ் (பாலைவனப் பகுதி) மற்றும் கடற்கரைப் பகுதிக்கும் செல்லுங்கள். கானான் நிலப்பகுதி மற்றும் லீபனோன் ஆகியவற்றின் வழியாக பெரும் நதியான ஐபிராத்து வரைக்கும் செல்லுங்கள். 8 அந்நிலத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். சென்று எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலத்தை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு நான் வாக்களித்தேன். அந்நிலத்தை அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக நான் வாக்களித்தேன்’” என்றார்.
மோசே தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல்
9 மோசே, “அந்த நாட்களில் நான் ஒருவனாக உங்களை கவனித்துக்கொள்ள இயலாது. 10 இப்பொழுது, உங்களிடம் பலர் இருக்கிறீர்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலும் பலரை சேர்த்துள்ளார். ஆகவே வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போல் நீங்கள் எண்ணிக்கையில் பெருகியுள்ளீர்கள்! 11 உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், உங்களை இப்பொழுதுள்ளதைப் போல 1,000 மடங்கு எண்ணிக்கையில் அதிகரிக்கச் செய்யட்டும்! அவர் வாக்களித்தபடி உங்களை ஆசீர்வதிக்கட்டும்! 12 ஆனால் உங்களை கவனித்துக்கொள்ளவும், உங்கள் வாதங்களைத் தீர்த்து வைக்கவும், என் ஒருவனால் முடியவில்லை. 13 ஆகவே ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் சிலரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக்குவேன். புரிந்துகொள்ளும் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த ஞானவான்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று நான் சொன்னேன்.
14 “அதற்கு நீங்கள், ‘நீர் செய்யச்சொன்ன செயல் நல்ல செயல்’ என கூறினீர்கள்.
15 “ஆகவே உங்கள் கோத்திரங்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த அறிவும் அனுபவமும் நிறைந்தவர்களை உங்கள் தலைவர்களாக்கினேன். இப்படியாக, 1,000 பேர்களுக்குத் தலைவர்களையும், 100 பேர்களுக்குத் தலைவர்களையும், 50 பேர்களுக்குத் தலைவர்களையும், 10 பேர்களுக்குத் தலைவர்களையும், உங்களுக்கு ஏற்படுத்தினேன். மேலும் உங்கள் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் அதிகாரிகளையும் கொடுத்தேன்.
16 “அந்த சமயத்தில் அந்த நீதிபதிகளிடம், ‘உங்கள் ஜனங்களுக்கு இடையிலான வாதங்களைக் கேளுங்கள். ஒவ்வொரு வழக்கிற்கும் தீர்ப்பளிக்கும்போது நடுநிலையாக இருங்கள். வழக்கு இரு இஸ்ரவேலர்களுக்கு இடையிலா அல்லது ஒரு இஸ்ரவேலனுக்கும் ஒரு வெளிநாட்டவனுக்கும் இடையிலா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வழக்குகளையும் நடுநிலையுடன் தீர்க்கவேண்டும். 17 நீங்கள் நியாயம் வழங்கும்பொழுது, ஒருவன் மற்றவனைவிட முக்கியத்துவம் வாய்ந்தவன் என நினைக்கக் கூடாது. நீங்கள் அனைவரையும் சமமாகக் கருதவேண்டும். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம், ஏனெனில் உங்கள் தீர்ப்பு தேவனுடையது. ஆனால் கடினமான வழக்காயிருந்தால், என்னிடம் அவ்வழக்கைக் கொண்டு வாருங்கள். நான் நியாயம் வழங்குகிறேன்’ என்று கூறினேன். 18 அதே சமயம், நீங்கள் செய்ய வேண்டிய மற்ற எல்லாவற்றையும் உங்களுக்குக் கூறினேன்.
20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து ராஜாவின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.
25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.
2008 by World Bible Translation Center