Revised Common Lectionary (Complementary)
7 கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
8 கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.
9 கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.
13 மறுநாள், ஜனங்களை நியாயந்தீர்க்கும் விசேஷ வேலை மோசேக்கு இருந்தது. நாள் முழுவதும் மோசேக்கு முன்னால் காலை முதல் மாலைவரை ஜனங்கள் கூடி நின்றனர்.
14 மோசே ஜனங்களை நியாயந்தீர்ப்பதை எத்திரோ பார்த்தான். அவன், “ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஏன் நீ மட்டும் நியாயந்தீர்க்க வேண்டும்? ஏன் நாள் முழுவதும் ஜனங்கள் உன்னிடம் வந்துகொண்டிருக்கின்றனர்?” என்று கேட்டான்.
15 மோசே அவனது மாமனாரை நோக்கி: “ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்களின் பிரச்சனைகளைப்பற்றிய தேவனின் முடிவைக் கேட்டறிந்து சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். 16 ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்” என்றான்.
17 ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல, 18 நீ ஒருவனே செய்வதற்கு இது பழுவான வேலையாகும். இவ்வேலையை நீ ஒருவனே செய்ய முடியாது. அது உன்னைக் களைப்படையச் செய்யும். ஜனங்களும் சோர்ந்து போகிறார்கள்! 19 இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்குச் சில அறிவுரைகளைக் கூறுவேன். தேவன் உன்னோடிருக்கும் பொருட்டு நான் ஜெபம் செய்கிறேன். ஜனங்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீ கேட்கவேண்டும், இவற்றைக் குறித்துத் தொடர்ந்து நீ தேவனிடம் பேச வேண்டும். 20 நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. 21 ஆனால் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பதற்காகச் சிலரை நீ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வேண்டும்.
“உன் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள். அம்மனிதர்கள் தேவனை மதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்காக தங்கள் முடிவுகளை மாற்றாத மனிதர்களைத் தெரிந்துகொள். ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்துவிடு. 1,000 ஜனங்களுக்கும், 100 ஜனங்களுக்கும், 50 ஜனங்களுக்கும், 10 பேருக்கும் கூட தலைவர்கள் இருக்கட்டும். 22 இந்த அதிகாரிகள் ஜனங்களை நியாயந்தீர்க்கட்டும். மிக முக்கியமான வழக்கிருந்தால் அவர்கள் உன்னிடம் வரட்டும், நீ என்ன செய்வதென முடிவெடுக்கலாம். ஆனால் மற்ற வழக்குகளில் இம்மனிதர்கள் உனது வேலையைப் பகிர்ந்துகொள்ளட்டும். இப்படி ஜனங்களை வழி நடத்துவது உனக்கு எளிதாகும். 23 தேவ தயவால் நீ இவற்றைச் செய்தால், நீ உனது பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதே நேரத்தில் ஜனங்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவர்களாய் வீடு திரும்ப முடியும்” என்றான்.
24 எனவே எத்திரோ கூறியபடியே மோசே செய்தான். 25 இஸ்ரவேல் ஜனங்களில் சில நல்ல மனிதர்களை மோசே தெரிந்தெடுத்து ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்தான். 1,000 பேருக்கும், 100 பேருக்கும், 50 பேருக்கும், 10 பேருக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 26 இந்த அதிகாரிகள் ஜனங்களுக்கு நீதிபதிகளாக இருந்தனர். இந்த அதிகாரிகளிடம் ஜனங்கள் தங்கள் விவாதங்களை எந்த நேரத்திலும் முன் வைக்க முடிந்தது. மிக முக்கியமான வழக்குகளை மட்டும் மோசே தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று.
27 கொஞ்ச நாட்களுக்குப்பின், மோசே தன் மாமனாராகிய எத்திரோவை வழியனுப்பினான். எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பினான்.
13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.
15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.
18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.
21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.
விசுவாசிகளின் பிரார்த்தனை
23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.
“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
அவர்கள் செய்வது வீணானது.
26 “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர்.
தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’(A)
27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.
31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.
2008 by World Bible Translation Center