Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.
11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
பகல் இரவாக மாறிப்போயிற்று.
“இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
முக்கியமானவை.
தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
நாகமானின் பிரச்சனை
5 நாகமான் என்பவன் ஆராம் ராஜாவின் படைத் தளபதி ஆவான். அவன் ராஜாவுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
2 ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். 3 அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
4 நாகமானும் அவனது எஜமானிடம் (ராஜாவிடம்) போய், இஸ்ரவேலியப் பெண் கூறியதைச் சொன்னான்.
5 ஆராமின் ராஜாவும், “இப்போதே செல், நானும் இஸ்ரவேல் ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான்.
எனவே நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000 தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். 6 அதோடு ராஜாவின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ரவேல் ராஜா கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் ராஜா என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் ராஜா முயற்சி செய்கிறான்” என்றான்.
8 ராஜா வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டதைப்பற்றி தேவமனிதனான எலிசா அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள் ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், நாகமானை என்னிடம் அனுப்புங்கள். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான்.
9 ஆகவே, நாகமான் தனது குதிரைகளோடும் இரதங்களோடும், எலிசாவின் வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான். 10 எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.
11 நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன். 12 இஸ்ரவேலில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும் ஆகிய தமஸ்குவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.
13 ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! தீர்க்கதரிசி உம்மிடம் சில பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர் செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (தீர்க்கதரிசி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’ என்று கூறியிருக்கிறார்” என்றனர்.
14 எனவே நாகமான் தேவமனிதன் (தீர்க்கதரிசி எலிசா) சொன்னவாறு செய்தான். அவன் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல் குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று.
8 தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 9 சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். 10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.
நீங்கள் நியாயாதிபதி அல்ல
11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். 12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?
தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்
13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். 14 “நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும்” என்பதை நினைத்துப்பாருங்கள். 15 எனவே, “தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்” என்று எண்ணுங்கள். 16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும். 17 எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.
2008 by World Bible Translation Center