Revised Common Lectionary (Complementary)
116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
நான் நேசிக்கிறேன்.
2 நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
நான் நேசிக்கிறேன்.
3 நான் மரித்தவன் போலானேன்!
மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
நான் அஞ்சிக் கலங்கினேன்.
4 அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.
5 கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
தேவன் தயவுள்ளவர்.
6 கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
7 என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
8 தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
9 நான் உயிருள்ளோரின் தேசத்தில்
தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.
எரிகோவில் ஒற்றர்கள்
2 அகாசியாவில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், ஜனங்கள் அனைவரும் முகாமிட்டிருந்தனர். யோசுவா இரண்டு ஒற்றர்களை அனுப்பினான். அம்மனிதர்களை யோசுவா அனுப்பிய விவரம் யாருக்கும் தெரியாது. யோசுவா அவர்களிடம், “போய் தேசத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள், முக்கியமாக எரிகோ நகரத்தைப் பார்த்து வாருங்கள்” என்றான்.
எனவே அவர்கள் எரிகோ நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் ஒரு வேசியின் வீட்டிற்குச் சென்று, அங்கே இரவில் தங்கினர். அப்பெண்ணின் பெயர் ராகாப்.
2 சிலர் எரிகோவின் ராஜாவிடம் சென்று, “நேற்றிரவு இஸ்ரவேலிலிருந்து சில மனிதர்கள் நம் நாட்டின் பெலவீனங்களைக் கண்டறிய வந்திருக்கிறார்கள்” என்றனர்.
3 எனவே எரிகோவின் ராஜா ராகாபுக்கு, “உனது வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிற மனிதர்களை ஒளித்து வைக்காதே. அவர்களை வெளியே அழைத்து வா. அவர்கள் நம் நாட்டை உளவு பார்க்க வந்துள்ளனர்” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினான்.
4 அப்பெண் அவ்விருவரையும் மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவள், “அவ்விருவரும் இங்கு வந்திருந்தனர், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்கிற விவரம் எனக்குத் தெரியாது. 5 மாலையில், நகர வாயிலை அடைக்கும் சமயத்தில், அவ்விருவரும் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள் விரைந்து சென்றால், அவர்களைப் பிடிக்கக் கூடும்” என்றாள். 6 (ராகாப், அவள் இப்படி கூறினாலும், உண்மையில் அவ்விருவரையும், கூரையின் மேல்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே அவள் குவித்து வைத்திருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்திருந்தாள்.)
7 எனவே ராஜாவால் அனுப்பப்பட்ட ஆட்கள் நகரத்திற்கு வெளியே சென்ற பின்பு, நகர வாயிலை அடைத்தனர். இஸ்ரவேலிலிருந்து வந்த இருவரையும் தேடி ராஜாவின் மனிதர்கள் சென்றனர். அவர்கள் யோர்தான் நதிக்குச் சென்று, ஜனங்கள் நதியைக் கடக்கும் எல்லா இடங்களிலும் அவர்களைத் தேடினார்கள்.
8 ஒற்றர்களாக வந்த இருவரும் இரவில் தூங்குவதற்கு ஆயத்தமாயினர். ஆனால் ராகாப் கூரையின் மேல்பகுதிக்கு ஏறிச் சென்று அவர்களிடம், 9 “உங்கள் ஜனங்களுக்கு கர்த்தர் இத்தேசத்தைக் கொடுத்தார் என்பதை நான் அறிவேன். நீங்கள் எங்களுக்கு அச்சமூட்டுகிறீர்கள். இத்தேசத்தில் வாழும் ஜனங்கள் உங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். 10 கர்த்தர் உங்களுக்கு உதவிய வழிகளை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடியால் நாங்கள் அஞ்சுகிறோம். நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர் செங்கடலின் தண்ணீரை வற்றிப்போகச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். சீகோன், ஓகு என்னும் இரண்டு எமோரிய ராஜாக்களுக்கும் நீங்கள் செய்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். யோர்தான் நதியின் கிழக்கில் வாழ்ந்த ராஜாக்களை நீங்கள் அழித்ததையும் அறிந்தோம். 11 அந்தக் காரியங்களை நாங்கள் அறிந்து மிகவும் அஞ்சினோம். இப்போது, எங்களில் எந்த மனிதனுக்கும் உங்களை எதிர்க்கும் துணிவு இல்லை. ஏனெனில் உங்கள் தேவனாகிய கர்த்தர் மேலே வானத்தையும், கீழே பூமியையும் ஆளுகிறார்! 12 எனவே நீங்கள், இப்போது எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நான் உங்களிடம் இரக்கம் காட்டி, உங்களுக்கு உதவினேன். எனவே என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதாக கர்த்தருக்கு முன்னால் வாக்களியுங்கள். நீங்கள் இதைச் செய்வீர்களென்று எனக்கு உறுதி கூறுங்கள். 13 நீங்கள் எனது தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர் உட்பட, எனது குடும்பத்தார் அனைவரையும் உயிரோடு வாழ அனுமதிப்பதாக எனக்குக் கூறுங்கள். எங்களை மரணத்தினின்று விடுவிப்பதாக எனக்கு வாக்குறுதி அளியுங்கள்” என்றாள்.
14 அவ்விருவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள், “உங்கள் உயிருக்கு எங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம். நாங்கள் செய்வதை யாருக்கும் சொல்லாதே. கர்த்தர், எங்களுக்குரிய நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உனக்கு இரக்கம் காட்டுவோம். நீ எங்களை நம்பலாம்” என்றனர்.
17-18 தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி தேவன் சொன்னார். ஆபிரகாமும் விசுவாசத்தின் காரணமாக அந்தக் கட்டளையைப் பின்பற்றினான், ஏனென்றால் ஏற்கெனவே தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்துள்ளார். “ஈசாக்கு மூலம் உன் பரம்பரை வளரும்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ஒரே குமாரனான அந்த ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் முன் வந்தான். 19 தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் குமாரனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று.
20 யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். 21 யாக்கோபு யோசேப்பின் குமாரர்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.
22 யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான்.
2008 by World Bible Translation Center