Revised Common Lectionary (Complementary)
10 நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
11 எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
12 எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பதுபோல் நான் முடிந்து போகிறேன்.
எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
13 ஒரு சிங்கத்தைப்போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பதுபோன்று நொறுக்கப்பட்டன.
இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
14 ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப்போகிறேன்.
எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
15 நான் என்ன சொல்லமுடியும்.
என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
16 எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
நான் மீண்டும் வாழ உதவும்!
17 பார்! எனது தொல்லைகள் போகின்றன!
இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
18 மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
19 இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
20 எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்.”
9 பின்பு பெலிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது. 10 யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர்.
11 பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர்.
அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான்.
12 பின்பு அவர்கள், “உன்னைக் கட்டி, பெலிஸ்தியரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளோம்” என்றனர்.
சிம்சோன் யூதா ஜனங்களிடம், “நீங்களாகவே என்னை காயப்படுத்தமாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்று கேட்டான்.
13 அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.
14 லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. 15 அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.
16 பின்பு சிம்சோன்,
“ஒரு கழுதையின் தாடையெலும்பால்
1,000 பேரைக் கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால்
ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.
17 இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது.
18 சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான்.
19 லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. 20 இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.
இயேசு ஒரு நோயாளிச் சிறுவனைக் குணமாக்குதல்
(மாற்கு 9:14-29; லூக்கா 9:37-43)
14 இயேசுவும் சீஷர்களும் கூடியிருந்த மக்களிடம் திரும்பிச் சென்றார்கள். அப்போது ஒரு மனிதன் இயேசுவின் முன் வந்து குனிந்து வணங்கினான். 15 அவன், “ஆண்டவரே! என் மகனுக்குக் கருணை காட்டும். வலிப்பு நோயினால் மிகவும் துன்புறுகிறான். அடிக்கடி என் மகன் தண்ணீரிலோ அல்லது நெருப்பிலோ வீழ்ந்து விடுகிறான். 16 உமது சீஷர்களிடம் என் மகனை அழைத்து வந்தேன். ஆனால், அவர்களால் அவனைக் குணப்படுத்த இயலவில்லை” என்றான்.
17 இயேசு, “உங்களுக்கெல்லாம் விசுவாசமில்லை. உங்கள் வாழ்க்கை முறையே தவறானது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுடன் இருக்க முடியும்? உங்களுடன் எத்தனை நாட்கள் பொறுமையுடன் காலந்தள்ள முடியும்? உன் மகனை இங்கு அழைத்து வா” என்று பதில் சொன்னார். 18 இயேசு அப்பையனின் உடலுக்குள் இருந்த பிசாசுக்கு கண்டிப்பான கட்டளையிட்டார். பின் அப்பையனுக்குள்ளிருந்த பிசாசு வெளியேறியது. உடனே பையன் குணமடைந்தான்.
19 பிறகு இயேசுவிடம் அவரது சீஷர்கள் தனித்து வந்தார்கள், “பையனிடமிருந்து பிசாசை நாங்கள் விரட்ட முயன்றோம். ஆனால் எங்களால் இயலவில்லை. ஏன் எங்களால் பிசாசை விரட்ட இயலவில்லை?” என்று இயேசுவிடம் கேட்டார்கள்.
20 அதற்கு இயேசு, “உங்களால் பிசாசை விரட்ட முடியவில்லை, ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மிகவும் சிறிய அளவிலானது. உங்களுக்கு ஒரு கடுகளவேனும் நம்பிக்கை இருந்து இம்மலையை நோக்கி, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து செல்’ எனக் கூறினால், இம்மலையும் நகரும். 21 உங்களுக்கு அனைத்தும் சாத்தியமாகும் என்று உங்களுக்கு சொல்லுகிறேன்”[a] என்று கூறினார்.
2008 by World Bible Translation Center