Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 38:10-20

10 நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
    ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
11 எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
    இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
12 எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
    நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பதுபோல் நான் முடிந்து போகிறேன்.
    எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
13 ஒரு சிங்கத்தைப்போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
    ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பதுபோன்று நொறுக்கப்பட்டன.
    இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
14 ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
    ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
    ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப்போகிறேன்.
    எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
15 நான் என்ன சொல்லமுடியும்.
    என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
    அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
    எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
16 எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
    என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
    நான் மீண்டும் வாழ உதவும்!

17 பார்! எனது தொல்லைகள் போகின்றன!
    இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
    நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
    எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
18 மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
    பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
    அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
    அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
19 இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
    ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
20 எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
    எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்.”

யோசுவா 8:1-23

ஆயீ அழிக்கப்படுதல்

கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் ராஜாவை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். எரிகோவுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் ராஜாவுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார்.

யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.

“கர்த்தர் கூறுகிறபடியே நீங்கள் செய்ய வேண்டும். என்னைக் கவனியுங்கள். நகரத்தைத் தாக்குவதற்கான கட்டளையை நான் இட்டதும் நகரத்தைக் கைப்பற்றி, அதற்குத் தீ மூட்டுங்கள்” என்றான்.

யோசுவா அம்மனிதர்களை மறைவிடங்களுக்கு அனுப்பியபின் காத்திருந்தான். அவர்கள் பெத்தேலுக்கும் ஆயீக்கும் மத்தியிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றனர். அது ஆயீக்கு மேற்கிலிருந்தது. அன்றிரவு யோசுவா தனது ஜனங்களோடு தங்கியிருந்தான்.

10 மறுநாள் அதிகாலையில் யோசுவா ஆண்களைக் கூடிவரும்படி அழைத்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் தலைவர்களும் அவர்களை ஆயீக்கு வழிநடத்தினர். 11 யோசுவாவோடிருந்த எல்லா வீரர்களும் ஆயீக்கு நேராக அணிவகுத்துச் சென்று நகரத்திற்கு முன்னே சென்று நின்றனர். நகரத்திற்கு வடக்கே படை முகாமிட்டது. பாளையத்திற்கும் ஆயீக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

12 அப்போது யோசுவா சுமார் 5,000 ஆண்களைத் தெரிந்துகொண்டு, பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவில், நகரத்திற்கு மேற்கேயுள்ள பகுதியில் மறைந்திருக்குமாறு கூறி, அவர்களை அனுப்பினான். 13 யோசுவா அவனது ஆட்களைப் போருக்குத் தயாராக்கினான். நகரத்திற்கு வடக்கே பெரிய முகாம் இருந்தது. மற்ற ஆட்கள் மேற்கே மறைந்திருந்தனர். இரவில் யோசுவா பள்ளத்தாக்கினுள் இறங்கிச் சென்றான்.

14 இஸ்ரவேலரின் படையைக் கண்டதும் ஆயீயின் ராஜாவும் அவனது ஆட்களும் எழுந்து இஸ்ரவேலரின் படையோடு போர் செய்வதற்கு விரைந்து வந்தனர். ஆயீயின் ராஜா நகரின் கிழக்குப் பகுதிக்குச் சென்றான். அதனால் நகருக்குப் பின்னே மறைந்திருந்த வீரர்களை அவன் பார்க்கவில்லை.

15 யோசுவாவும், இஸ்ரவேலின் மனிதர்களும் ஆயீயின் படையினர் தம்மைத் துரத்திவர இடம் கொடுத்தனர். யோசுவாவும் அவனது ஆட்களும் பாலைவனத்திற்கு நேராக கிழக்கே ஓட ஆரம்பித்தனர். 16 நகரத்து ஜனங்கள் சத்தமிட்டுக் கொண்டே, யோசுவாவையும் அவனது மனிதர்களையும் துரத்த ஆரம்பித்தனர். எல்லா ஜனங்களும் நகரத்திற்கு வெளியே வந்தனர். 17 ஆயீ, பெத்தேல் ஆகியவற்றின் எல்லா ஜனங்களும் இஸ்ரவேல் படையைத் துரத்தினார்கள். நகரம் திறந்திருந்தது. யாரும் நகரத்தைப் பாதுகாப்பதற்காகப் பின் தங்கவில்லை.

18 அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் ஈட்டியை ஆயீ நகரத்திற்கு நேராக நீட்டு, நான் உனக்கு அந்நகரத்தைக் கொடுப்பேன்” என்றார். எனவே யோசுவா ஆயீ நகரத்திற்கெதிராக அவனது ஈட்டியை நீட்டினான். 19 மறைந்திருந்த இஸ்ரவேலர் இதைக் கண்டனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து வெளிவந்து நகரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். பிறகு வீரர்கள் நகரத்திற்கு நெருப்பூட்டினர்.

20 ஆயீ நகர ஜனங்கள் திரும்பிப் பார்த்து, தங்கள் நகரம் எரிவதையும், வானத்திற்கு நேராகப் புகை எழும்புவதையும் கண்டனர். எனவே அவர்கள் தங்கள் வலிமையையும் துணிவையும் இழந்து, இஸ்ரவேலரைத் துரத்துவதைக் கைவிட்டனர். இஸ்ரவேலர் ஓடுவதை நிறுத்திவிட்டு திரும்பி ஆயீ நகர மக்களோடு போரிட்டனர். ஆயீ நகர ஜனங்கள் ஓடி ஒளிவதற்கு எந்த இடமும் அகப்படவில்லை. 21 யோசுவாவும் அவனது ஆட்களும், நகரம் தங்கள் வசமானதையும், நகரத்திலிருந்து புகையெழுவதையும் கண்டதும் ஓடுவதை நிறுத்தி, திரும்பிவந்து, ஆயீ நகர ஜனங்ககளை எதிர்த்தனர். 22 அப்போது ஒளிந்திருந்த மனிதர்களும் நகரத்திலிருந்து வந்து போரில் உதவினார்கள். ஆயீ நகர ஜனங்களை இஸ்ரவேலர் இருபுறமும் சூழ்ந்து வளைந்துகொண்டனர். இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்தனர். ஆயீ நகர மனிதர்கள் தப்பி, உயிரோடிராதபடி இஸ்ரவேலர் அவர்களோடு போரிட்டு அழித்தனர். 23 ஆனால், ஆயீ நகர ராஜாவை உயிரோடு பிடித்து யோசுவாவிற்கு முன்னால் வீரர்கள் கொண்டு வந்தனர்.

எபிரேயர் 12:3-13

இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.

தேவன் பிதாவைப் போன்றவர்

நீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை. நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்.

“என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே.
    அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே.
தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார்.
    தம் மக்களாக ஏற்றுக்கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார்.”(A)

எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் குமாரனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள். இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. 10 உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம். 11 எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை! ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

எவ்வாறு வாழ்வது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்

12 நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள். 13 சரியான வழியில் நடவுங்கள், அப்போதுதான் இரட்சிக்கப்படுவீர்கள். உங்கள் பலவீனம் எந்த இழப்புக்கும் காரணமாகக் கூடாது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center