Revised Common Lectionary (Complementary)
10 நான் முதுமையடையும்வரை வாழ்வேன் என்று நான் எனக்குள் சொன்னேன்.
ஆனால் பிறகு பாதாளத்தின் வாசல்கள் வழியாகச் செல்லும் எனது நேரம் வந்தது.
11 எனவே, நான் சொன்னேன்: “கர்த்தரை நான் இனிமேல் உயிரோடு இருக்கிறவர்களின் நாட்டில் பார்க்கமாட்டேன்.
இனிமேல் பூமியிலுள்ள ஜனங்களோடு இருந்து ஜனங்களை நான் காணமாட்டேன்.
12 எனது வீடு, எனது மேய்ப்பனுடைய கூடாரம் கீழே தள்ளப்படுவதுபோல் என்னிடமிருந்து எடுக்கப்படும்.
நெசவு செய்கிறவன் பாவினை அறுப்பதுபோல் நான் முடிந்து போகிறேன்.
எனது வாழ்வை அவ்வளவு சிறிய காலத்திற்குள் நீ முடித்தாய்!
13 ஒரு சிங்கத்தைப்போன்ற நான் எல்லா இரவுகளிலும் கதறினேன்.
ஆனால் எனது நம்பிக்கைகள் சிங்கம் எலும்புகளைத் தின்பதுபோன்று நொறுக்கப்பட்டன.
இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எனது வாழ்வை நீ முடித்துவிட்டாய்.
14 ஒரு புறாவைப்போன்று அலறினேன்.
ஒரு பறவையைப்போன்று அலறினேன்.
எனது கண்கள் சோர்ந்துபோயின.
ஆனால் நான் தொடர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது ஆண்டவரே! நான் அதிகமாய் ஒடுங்கிப்போகிறேன்.
எனக்கு உதவிட வாக்களிப்பீர்!”
15 நான் என்ன சொல்லமுடியும்.
என்ன நிகழும் என்று எனது ஆண்டவர் கூறினார்.
அவை நிகழ எனது எஜமானர் காரணமாக இருப்பார்.
இந்தத் தொல்லைகளை நான் எனது ஆத்துமாவிற்குள் வைத்திருந்தேன்.
எனவே இப்போது நான் எனது வாழ்வுமுழுவதும் பணிவுள்ளவனாக இருப்பேன்.
16 எனது ஆண்டவரே! இந்தக் கடின நேரத்தைப் பயன்படுத்தி எனது ஆவியை மீண்டும் வாழச் செய்யும்.
என் ஆவி பலமும் நலமும் பெற உதவும்.
நான் நலம் பெற உதவும்!
நான் மீண்டும் வாழ உதவும்!
17 பார்! எனது தொல்லைகள் போகின்றன!
இப்போது எனக்கு சமாதானம் உள்ளது.
நீர் என்னை மிகவும் நேசிக்கிறீர்.
நான் கல்லறையில் அழுகும்படிவிடமாட்டீர்.
எனது பாவங்களையெல்லாம் மன்னித்தீர்,
எனது பாவங்களை வெகு தொலைவிற்கு எறிந்தீர்.
18 மரித்த ஜனங்கள் உம்மைப் புகழ்ந்து பாடுவதில்லை.
பாதாளத்திலுள்ள ஜனங்களும் உம்மைத் துதிப்பதில்லை.
மரித்த ஜனங்கள் தமக்கு உதவுமாறு உம்மீது நம்பிக்கை வைக்கமாட்டார்கள்.
அவர்கள் தரையில் உள்ள பாதாளத்துக்குள் செல்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் பேசமாட்டார்கள்.
19 இன்று என்னைப்போன்று உயிருடன் இருக்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கும் ஜனங்களாக உள்ளனர்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம், “உம்மை நம்ப முடியும்” என்று சொல்லவேண்டும்.
20 எனவே, நான் சொல்கிறேன்: “கர்த்தர் என்னைக் காப்பாற்றினார் எனவே நாங்கள் பாடுவோம்.
எங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் பாடல்களை இசைப்போம்.”
எரிகோ பிடிக்கப்படுதல்
6 எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை.
2 அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “பார், நீ எரிகோ நகரத்தை வீழ்த்தும்படி செய்வேன். நீ அந்நகரத்தின் ராஜாவையும், போர் செய்யும் ஜனங்களையும் தோற்கடிப்பாய். 3 உனது சேனையோடு ஒவ்வொரு நாளும் நகரை ஒரு முறை சுற்றிச் செல். ஆறு நாட்கள் இவ்வாறு செய். 4 வெள்ளாட்டுக் கடாவின் கொம்பால் செய்த எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் சுமக்கும்படி சொல். பரிசுத்தப் பெட்டியையும் சுமந்து செல்லுங்கள். ஆசாரியர்களை பரிசுத்தப் பெட்டிக்கு முன் அணிவகுத்துச் செல்லும்படி கூறு. ஏழாம் நாள், ஏழுமுறை அணிவகுத்துச் செல்லும் போது ஆசாரியர்களிடம் எக்காளம் ஊதும்படி கூறு. 5 ஆசாரியர்கள் எக்காளத்தை உரத்த குரலில் ஊதும் சத்தத்தை நீ கேட்டதும், எல்லா ஜனங்களையும் உரத்த சத்தம் எழுப்பச் சொல். அவ்வாறு நீங்கள் செய்யும் போது, நகரத்தின் சுவர்கள் இடிந்து விழும். உனது ஜனங்கள் நகரத்திற்குள் நுழைவார்கள்” என்றார்.
6 நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து அவர்களிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து செல்லுங்கள். ஏழு ஆசாரியர்களிடம் எக்காளத்தைச் சுமந்துக்கொண்டு பெட்டிக்கு முன் அணிவகுத்துப் போகச்சொல்லுங்கள்” என்றான்.
7 பின் யோசுவா ஜனங்களிடம், “இப்போது புறப்பட்டுச் செல்லுங்கள்! நகரைச் சுற்றிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக ஆயுதமேந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்” என்றான்.
8 யோசுவா ஜனங்களிடம் பேசி முடித்த பிறகு, கர்த்தருக்கு முன்பாக அந்த ஏழு ஆசாரியர்களும் அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஏழு எக்காளங்களை ஏந்திக் கொண்டு, அணிவகுத்துச் சென்றபோது ஊதினார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்தவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். 9 ஆயுதமேந்திய வீரர்கள் ஆசாரியர்களுக்கு முன்பு சென்றனர். பரிசுத்தப் பெட்டிக்குப் பின்பு சென்றோர் அணிவகுத்துச் செல்லும்போது, எக்காளம் ஊதினார்கள். 10 போர் முழக்கம் செய்யாதபடிக்கு யோசுவா ஜனங்களுக்குக் கூறியிருந்தான். அவன், “சத்தம் போடாதீர்கள். நான் சொல்லும் நாள் வரைக்கும் எந்த வார்த்தையும் பேசாதீர்கள். அதன் பிறகு சத்தமிடலாம்!” என்றான்.
11 நகரத்தைச் சுற்றிலும் ஒருமுறை கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் சுமந்து வருமாறு யோசுவா செய்தான். பின்பு அவர்கள் முகாமிட்டிருக்கும் இடத்திற்குச் சென்று இரவைக் கழித்தனர்.
12 மறுநாள் அதிகாலையில், யோசுவா எழுந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர்கள் மீண்டும் சுமந்தனர். 13 ஏழு ஆசாரியர்களும், ஏழு எக்காளங்களை ஏந்திச் சென்றனர். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக, அவர்கள் அணிவகுத்து எக்காளங்களை ஊதியபடியே நடந்தார்கள். ஆயுதங்களை ஏந்தியிருந்த வீரர்கள் அவர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்ற மீதி ஜனங்கள் அணிவகுத்தும், தங்களது எக்காளங்களை ஊதியும் சென்றார்கள். 14 எனவே இரண்டாம் நாளும், அவர்கள் எல்லோரும் நகரைச் சுற்றிலும் ஒருமுறை சென்றனர். பின் அவர்கள் முகாமிற்குத் திரும்பினார்கள். இவ்வாறே ஆறு நாட்கள் தொடர்ந்து செய்தனர்.
15 ஏழாவது நாள், அதிகாலையிலேயே எழுந்து நகரத்தைச் சுற்றிலும் ஏழு முறை நடந்தனர். முந்தின நாட்களில் நடந்து சென்றதுபோலவே சென்றார்கள். ஆனால், அன்றைய தினம் ஏழுமுறை நகரைச் சுற்றி வந்தனர். 16 ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்! 17 நகரமும் அதிலுள்ளவை அனைத்தும் கர்த்தருக்குரியவை. ராகாப் என்னும் வேசியும் அவள் வீட்டினரும் மட்டுமே உயிரோடிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனென்றால் ராகாப் இரண்டு ஒற்றர்களுக்கும் உதவினாள். 18 எல்லாவற்றையும் நாம் அழிக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். எந்தப் பொருட்களையும் எடுக்காதீர்கள். அவற்றை எடுத்து நமது முகாமிற்குக்கொண்டு வந்தால் நீங்கள் அழிக்கப்படுவதுடன், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லலோருக்கும் தொல்லையை வரவழைப்பீர்கள். 19 எல்லா வெள்ளியும், பொன்னும், வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் கர்த்தருக்குரியவை. அப்பொருட்கள் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
20 ஆசாரியர்கள் எக்காளம் ஊதின சத்தத்தைக் கேட்டு ஜனங்கள் ஆரவாரம் செய்தபோது சுவர்கள் இடிந்து விழுந்தன. ஜனங்கள் நேரே நகரத்திற்குள் நுழைந்தனர். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரை வென்றனர். 21 அங்குள்ள அனைத்தையும், அங்கு வாழ்ந்த உயிரினங்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் அழித்தனர். அவர்கள் இளைஞரும் முதியோருமாகிய ஆண்களையும், இளைஞரும் முதியோருமாகிய பெண்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் கொன்றனர்.
29 மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள்.
30 எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன.
31 ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.
32 பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. 33 விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். 34 சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். 35 இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். 36 வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 37 சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். 38 உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள்.
39 தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. 40 தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.
இயேசுவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோம்
12 நம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்களைப்போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும். நம் முயற்சியில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது. நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும். 2 நாம் இயேசுவை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்ற வேண்டும். நம் விசுவாசத்தின் தலைவரே இயேசுதான். நம் விசுவாசத்தை அவர் முழுமையாக்குகிறார். அவர் சிலுவையில் துன்புற்று மரணம் அடைந்தார். ஆனால் சிலுவையின் அவமானத்தைப் பொருட்படுத்தாமல் சிலுவையின் துன்பங்களை அவர் ஏற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு முன்னால் வைக்கப்போகிற மகிழ்ச்சிக்காகவே இத்தனையையும் ஏற்றுக்கொண்டார். எனவே இப்போது அவர் தேவனுடைய வலது புறத்தில் வீற்றிருக்கிறார்.
2008 by World Bible Translation Center