Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 106:1-6

106 கர்த்தரைத் துதியுங்கள்!

கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
    ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
    எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.

கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
    என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
    நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
    உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.

எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
    நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.

சங்கீதம் 106:13-23

13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
    அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
    மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
    கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.

16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
    அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
    தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
    தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
    அத்தீயோரை நெருப்பு எரித்தது.

19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
    அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
    மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
    ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
    எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
    செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
    ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
    தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.

சங்கீதம் 106:47-48

47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
    தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
    எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
    அவர் என்றென்றும் வாழ்வார்.
    எல்லா ஜனங்களும், “ஆமென்!”

கர்த்தரைத் துதியுங்கள் என்று சொல்லக்கடவர்கள்.

உபாகமம் 4:21-40

21 “உங்களால் என்மீது கோபங்கொண்ட கர்த்தர், நான் யோர்தான் நதியைக் கடக்க இயலாது என்று ஆணையிட்டார். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தரும் சிறப்பான நாட்டிற்குள் நான் கடந்து போவதில்லை” என்றார். 22 ஆகவே நான் இங்கேயே மரிக்க வேண்டும். ஆனால் நீங்களோ விரைவில் யோர்தான் நதியைக் கடந்து நல்ல நிலப்பகுதியைக் கைப்பற்றி அங்கு வாழ்வீர்கள். 23 அப்புதிய பூமியில், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நீங்கள் மறக்கக்கூடாது. கர்த்தருடைய கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த உருவிலும் விக்கிரகங்களைச் செய்யாதீர்கள். 24 ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தம் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வதை வெறுக்கிறார். அழிக்கும் அக்கினியாகவும் கர்த்தர் விளங்குவார்!

25 “அந்நாட்டில் நீங்கள் நீண்டகாலம் வசிப்பீர்கள். அங்கே குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் பெறுவீர்கள். அங்கு நீங்கள் முதுமையடைவீர்கள். பின் எல்லா வகையான விக்கிரகங்களையும் செய்து உங்கள் வாழ்க்கையை பாழாக்குவீர்கள். நீங்கள் அவ்வாறுச் செய்யும்போது, தேவனுக்கு மிகுந்த கோபமூட்டுவீர்கள்! 26 ஆகவே இப்பொழுதே நான் உங்களை எச்சரிக்கிறேன். பரலோகமும் பூமியும் எனக்குச் சாட்சி! அக்கொடியச் செயலை நீங்கள் செய்தால் விரைவில் அழிக்கப்படுவீர்கள். அப்பூமியைக் கைப்பற்ற நீங்கள் யோர்தான் நதியை இப்பொழுது கடக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் ஏதேனும் விக்கிரகங்களைச் செய்தால், அங்கே நீங்கள் நீண்ட காலம் வசிக்கமாட்டீர்கள். இல்லை, நீங்கள் முழுவதுமாக அழிக்கப்படுவீர்கள்! 27 கர்த்தர் உங்களைப் பல நாடுகளில் சிதறடிப்பார். கர்த்தர் உங்களை அனுப்பும் நாடுகளுக்குச் செல்ல உங்களில் வெகுசிலரே மீதியாயிருப்பீர்கள். 28 அங்கே மரத்தாலும் கல்லாலும் செய்யப்பட்டு பார்க்கவோ, கேட்கவோ, உண்ணவோ அல்லது நுகரவோ சக்தியற்ற, மனிதர்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்குச் சேவை செய்வீர்கள். 29 ஆனால் மற்ற நாடுகளில் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் முழு மனதுடனும் முழு இருதயத்துடனும் தேடினால் அவரைக் கண்டடைவீர்கள். 30 நீங்கள் துன்பமடைகிற பொழுது, இவைகளெல்லாம் உங்களுக்கு நேரும்போது உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்புவீர்கள். அவருக்குக் கீழ்ப்படிவீர்கள். 31 உங்கள் தேவனாகிய கர்த்தர் கருணைமிக்க தேவன், உங்களை அங்கே விட்டுவிடமாட்டார் அவர் உங்களை முழுமையாக அழிக்கமாட்டார். உங்கள் முற்பிதாக்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையை மறக்கமாட்டார்.

தேவன் செய்த பெரும் செயல்களை நினையுங்கள்

32 “இதைப்போன்ற பெரிய செயல் ஏதும் இதற்கு முன் நடந்ததுண்டா? இல்லவே இல்லை. கடந்த காலத்தைப் பாருங்கள். நீங்கள் பிறப்பதற்கு முன்பு நடந்த அனைத்தையும் சிந்தித்துப் பாருங்கள். பூமியில் தேவன் மனிதர்களைப் படைத்த காலம் வரைக்கும் பின்னோக்கிப் பாருங்கள். இவ்வுலகில் நடந்த எல்லாவற்றையும் பாருங்கள். இப்படிப்பட்ட பெரிய காரியம் எதனையும் யாரும் கேள்விப்பட்டதுண்டா? இல்லை! 33 தேவன் அக்கினியிலிருந்து உங்களுடன் பேசியதைக் கேட்டும் உயிருடன் இருக்கிறீர்கள்! வேறெவருக்கேனும் அவ்வாறு நடந்ததுண்டா? இல்லை! 34 மேலும் வேறு எந்த தேவனும் ஒரு நாட்டிற்குள் நுழைந்து தன் ஜனங்களை தனக்காகத் தேர்ந்தெடுக்க முயன்றதுண்டா? இல்லை! ஆனால் இந்த அற்புதச் செயல்களை உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்ததை நீங்களே கண்டீர்கள்! தன் வல்லமையையும் பலத்தையும் உங்களுக்குக் காண்பித்தார். ஜனங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைக் கண்டீர்கள். அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டீர்கள். போரையும், கொடுஞ் செயல்கள் ஏற்பட்டதையும் பார்த்தீர்கள். 35 கர்த்தர் அவர் தேவன் என்பதை நீங்கள் அறியவே அவற்றை நிகழ்த்தினார். அவரைப் போல் வேறொரு தேவன் இல்லை! 36 உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பரலோகத்திலிருந்து நீங்கள் அவரது குரலைக் கேட்க வைத்தார். பூமியின் மீது அவருடைய பெரும் நெருப்பை நீங்கள் காணும்படிச் செய்து, அதிலிருந்து உங்களுடன் பேசினார்.

37 “கர்த்தர் உங்கள் முற்பிதாக்களை நேசித்தார். அதனால்தான், அவர்களின் சந்ததியினரான உங்களைத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார். அவர் உங்களுடன் இருந்து, தமது பெரும் வல்லமையினால் உங்களை வெளியேற்றினார். 38 நீங்கள் முன்னேறியபொழுது, உங்களைவிடவும் பெரியதும் வலிமை மிக்கதுமான ஜனங்களை கர்த்தர் வெளியில் துரத்தினார். அந்நாடுகளுக்குள் உங்களை வழிநடத்தினார். நீங்கள் வாழ்வதற்காக உங்களுக்கு அவர்களுடைய நாடுகளைக் கொடுத்தார். இன்றும் அவர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்.

39 “ஆகவே கர்த்தரே தேவன் என்பதை நீங்கள் இன்று உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும். மேலேயுள்ள பரலோகத்திலும், கீழேயுள்ள பூமியிலும் அவரே தேவன். வேறு தேவன் இல்லை! 40 நான் உங்களுக்கு இன்று தரும் அவரது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கும் உங்களுக்குப் பின் வசிக்கப்போகும் உங்கள் குழந்தைகளுக்கும் ஒவ்வொன்றும் நல்லபடியாக நடக்கும். உங்களுக்கே எப்பொழுதும் சொந்தமாக உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் நாட்டில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள். இது என்றும் உங்களுடையதாயிருக்கும்!” என்றான்.

மாற்கு 7:9-23

மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். 10 ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’(A) என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’(B) என்று கூறி இருக்கிறான். 11 ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். 12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். 13 ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.

14 மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 15 வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். 16 நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார்.

17 பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். 18 “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? 19 உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)

20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. 21 கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை 22 விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். 23 இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center