Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:97-104

மேம்

97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
    எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
    உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
    ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
    முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
    எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
    ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
    எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.

நெகேமியா 9:1-15

இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள்

பிறகு அதே மாதத்தின் 24வது நாள் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு நாள் உபவாசத்திற்காகக் கூடினார்கள். அவர்கள் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்தனர்; தங்கள் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டனர். இதன் மூலம் தாங்கள் துக்கமாகவும், கலக்கமாகவும் இருப்பதாகக் காட்டினார்கள். இஸ்ரவேல் சந்ததியினர் அயல் நாட்டினவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் எழுந்து நின்று தங்களது பாவங்களையும் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டனர். அவர்கள் மூன்று மணி நேரம் எழுந்து நின்று, ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். பிறகு மேலும் மூன்று மணிநேரம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து தொழுதுகொண்டனர்.

யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியர்களுடைய படிகளின் மேல் நின்றார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை உரத்தக்குரலில் அழைத்தார்கள். பிறகு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் ஜனங்களைப் பார்த்து பேசினார்கள். அவர்கள், “எழுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்!” என்றனர்.

“தேவன் என்றென்றும் வாழ்கிறார்!
    தேவன் என்றென்றும் வாழ்வார்!
ஜனங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்க வேண்டும்!
    உமது நாமம் எல்லாத் துதிக்கும் போற்றுதலுக்கும் மேலானதாக இருப்பதாக!
நீரே தேவன்! கர்த்தாவே, நீர் ஒருவரே தேவன்!
    நீர் வானத்தை உண்டாக்கினீர்!
நீர் மிக உயர்ந்த பரலோகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்!
    நீர் பூமியையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் கடல்களையும் அதிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர்!
நீர் எல்லாவற்றிற்கும் உயிர் கொடுத்தீர்!
    தேவதூதர்களெல்லாம் உம்மை பணிந்து தொழுதுகொள்கின்றனர்!
நீரே தேவனாகிய கர்த்தர்.
    நீர் ஆபிராமைத் தேர்ந்தெடுத்தீர்.
பாபிலோனிலுள்ள ஊரிலிருந்து அவரை வழிநடத்தினீர்.
    அவனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றினீர்.
அவன் உமக்கு உண்மையாகவும் நம்பிக்கையுடையவனாகவும் இருந்ததைக் கண்டீர்.
    நீர் அவனோடு ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டீர்.
நீர் அவனுக்கு கானானியர்,
ஏத்தியர், எமோரியர், பெரிசியர்,
எபூசியர், கிர்காசியர் ஆகியோரது நாடுகளைக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
    ஆனால் நீர் அத்தேசத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்குக் கொடுப்பதாக வாக்களித்தீர்.
உமது வாக்குறுதியைக் காப்பாற்றினீர்!
    ஏன்? ஏனென்றால் நீர் நல்லவர்!
எங்கள் முற்பிதாக்கள் எகிப்தில் துன்பப்படுவதை நீர் பார்த்தீர்.
    செங்கடலில் அவர்கள் உதவிக்காகக் கூப்பிட்டதைக் கேட்டீர்.
10 பார்வோனிடத்தில் நீர் அற்புதங்களைக் காட்டினீர்.
    அவனது அதிகாரிகளிடமும் ஜனங்களிடமும் அற்புதங்களை செய்தீர்.
நமது முற்பிதாக்களைவிட எகிப்தியர்கள் தம்மைச் சிறந்தவர்களாக நினைத்தனர் என்பது உமக்குத் தெரியும்.
    ஆனால் நீர் எவ்வளவு சிறந்தவர் என நிரூபித்தீர்! அவர்கள் இன்றும் கூட அதனை நினைக்கின்றனர்!
11 அவர்களுக்கு முன் நீர் செங்கடலைப் பிரித்தீர்.
    அவர்கள் காய்ந்த நிலத்தின் வழியாக நடந்தனர்.
எகிப்திய வீரர்கள் அவர்களைத் துரத்தினர்.
    ஆனால் அவர்களை நீர் கடலுக்குள் எறிந்தீர். அவர்கள் கடலுக்குள் பாறை மூழ்குவது போன்று மூழ்கினார்கள்.
12 அந்த நேரத்தில் அவர்களை வழி நடத்த பகல் நேரத்தில் நீர் உயர்ந்த மேகத்தைப் பயன்படுத்தினீர்.
    இரவில் நீர் அக்கினி தூணைப் பயன்படுத்தினீர்.
இவ்வாறு நீர் அவர்களின் பாதையை வெளிச்சமாக்கினீர்.
    அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் வழிக்காட்டினீர்.
13 பிறகு நீர் சீனாய் மலையிலிருந்து இறங்கினீர்.
    நீர் பரலோகத்திலிருந்து அவர்களோடு பேசினீர்.
நீர் அவர்களுக்கு நல்ல சட்டங்களையும் கொடுத்தீர்.
    நீர் அவர்களுக்கு மிக நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமானவற்றை கொடுத்தீர்.
14 உமது பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றியும் சொன்னீர்.
    உமது தாசனாகிய மோசேயைப் பயன்படுத்தி, நீர் அவர்களுக்கு கற்பனைகளையும் போதனைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்.
15 அவர்கள் பசியோடு இருந்தார்கள்.
    எனவே, பரலோகத்திலிருந்து அவர்களுக்கு உணவைக் கொடுத்தீர்.
அவர்கள் தாகமாய் இருந்தார்கள்.
    எனவே, பாறையிலிருந்து அவர்களுக்கு தண்ணீரைக் கொடுத்தீர்.
நீர் அவர்களிடம், ‘வாருங்கள், இந்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றீர்.
    நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி அவர்களுக்காக நாட்டை எடுத்துக்கொண்டீர்.

எபேசியர் 5:21-6:9

கணவன்களும், மனைவிமார்களும்

21 ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள்.

22 மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். 23 சபைக்குத் தலையாகக் கிறிஸ்து இருக்கிறார். மனைவியின் தலையாக இருப்பது கணவன்தான். சபை கிறிஸ்துவின் சரீரம் போன்றது. சரீரத்தின் இரட்சகராய் கிறிஸ்து இருக்கிறார். 24 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் சபை உள்ளது. இதைப் போன்றுதான் மனைவிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். எல்லா வகையிலும் உங்கள் கணவர்களின் அதிகாரத்திற்குள்தான் இருக்கிறீர்கள்.

25 கணவன்மார்களே! கிறிஸ்து சபையை நேசிக்கிறதுபோல நீங்கள் உங்கள் மனைவியரை நேசியுங்கள். கிறிஸ்து சபைக்காகவே இறந்தார். 26 சபையைப் புனிதமாக்கவே அவர் இறந்தார். சரீரத்தைத் தண்ணீரால் கழுவித் தூய்மைப்படுத்துவது போலவே திருவசனத்தைப் பயன்படுத்தி சபையைத் தூய்மை செய்கிறார். 27 கிறிஸ்து இறந்து போனதால் அவர் சபையை அழகுமிக்க மணமகளைப் போன்று ஆக்க, தம்மையே தந்தார். இதனால் சபை புனிதமானதாக, குற்றம் இல்லாததாக, கேடோ, பாவமோ, வேறு தவறுகளோ நடைபெறாத இடமாக ஆக்க விரும்பினார். இதுபோல

28 கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும். 29 ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார். 30 ஏனென்றால் நாம் அவரது உறுப்புக்கள். 31 “ஒரு மனிதன் தனது தந்தையையும் தாயையும் விட்டுவிலகி மனைவியோடு சேர்ந்துகொள்கிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது(A) 32 நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது. 33 எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

பிள்ளைகளும் பெற்றோர்களும்

பிள்ளைகளே கர்த்தர் விரும்புவது போல நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாகும். “நீங்கள் உங்களுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்”(B) என்று கட்டளை கூறுகிறது. இதுதான் முதல் கட்டளை. அதிலே ஒரு வாக்குறுதி உள்ளது. “பிறகு எல்லாம் உங்களுக்கு நல்லதாகும். நீங்கள் பூமியில் நீண்ட வாழ்வைப் பெறுவீர்கள்!” என்பது தான் அந்த வாக்குறுதி.

தந்தைமார்களே! உங்கள் குழந்தைகளைக் கோபப்படுத்தாதீர்கள். கர்த்தருக்கேற்ற கல்வியாலும், பயிற்சியாலும் அவர்களை மேலான நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

அடிமைகளும், எஜமானர்களும்

அடிமைகளே பூமியில் உள்ள உங்கள் எஜமானர்களுக்கு அச்சத்தோடும், மரியாதையோடும் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போன்று உண்மையான மனதோடு கீழ்ப்படியுங்கள். அவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கும்போது மட்டும் நல்லெண்ணத்தைப் பெற உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது; நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலக் கீழ்ப்படியுங்கள். தேவன் விரும்புவதை நீங்கள் முழு மனதுடன் செய்யுங்கள். உங்கள் வேலையைச் செய்யுங்கள். சந்தோஷமாய் செய்யுங்கள். கர்த்தருக்கு சேவை செய்வதுபோல எண்ணுங்கள். மனிதருக்கு சேவை செய்வதாக எண்ணாதீர்கள். அவரவர் செய்யும் நற்செயலுக்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பலன் தருவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அடிமைகள்போல இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொருவரும் தத்தம் நற்செயலுக்கு ஏற்றபடி பலன்களைப் பெறுவர்.

எஜமானர்களே, இதைப்போன்றே நீங்களும் உங்கள் அடிமைகளிடம் நல்லவர்களாகவும் இருங்கள். அவர்களை மிரட்டாதீர்கள். உங்களுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் எஜமானராய் இருக்கிற தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் எல்லாரையும் ஒன்று போலவே நியாயந்தீர்க்கிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center