Revised Common Lectionary (Complementary)
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று.
81 நமது பெலனாகிய தேவனைப் பாடி மகிழ்ச்சியாயிருங்கள்.
இஸ்ரவேலரின் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரியுங்கள்.
2 இசையைத் தொடங்குங்கள், தம்புராவை வாசியுங்கள்.
வீணையையும் சுரமண்டலத்தையும் இசையுங்கள்.
3 மாதப்பிறப்பு நாளில் எக்காளம் ஊதுங்கள்.
முழு நிலவின் நாளில் எக்காளம் ஊதுங்கள்.
அப்போது நம் விடுமுறை ஆரம்பமாகிறது.
4 அது இஸ்ரவேலருக்கு சட்டமாக வகுக்கப்பட்டிருந்தது.
தேவன் அக்கட்டளையை யாக்கோபிற்குக் கொடுத்தார்.
5 தேவன் யோசேப்பை[a] எகிப்திலிருந்து அழைத்துச் சென்றபோது அவனோடு இந்த உடன்படிக்கையைச் செய்தார்.
எகிப்தில், எங்களால் புரிந்துகொள்ள முடியாத மொழியை நாங்கள் கேட்டோம்.
6 தேவன், “உனது தோள்களிலிருந்து பாரத்தை இறக்கியிருக்கிறேன்.
உன்னிடமிருந்து பணியாட்களின் கூடையை விழப்பண்ணினேன்.
7 நீங்கள் தொல்லைகளில் சிக்குண்டிருந்தீர்கள்.
நீங்கள் உதவிக்காகக் கூப்பிட்டீர்கள், நான் உங்களை விடுவித்தேன்.
புயல் மேகங்களில் மறைந்திருந்து உங்களுக்குப் பதிலளித்தேன்.
மேரிபாவின் தண்ணீரண்டையில் நான் உங்களை சோதித்தேன்.”
8 “எனது ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
அப்போது என் உடன்படிக்கையை உங்களுக்குத் தருவேன்.
இஸ்ரவேலே, நான் சொல்வதை தயவாய்க்கேள்!
9 வேற்றுநாட்டார் தொழுதுகொள்ளும் பொய் தெய்வங்களை
நீ தொழுதுகொள்ளாதே.
10 கர்த்தராகிய நானே உன் தேவன்.
நான் உன்னை எகிப்திலிருந்து வரவழைத்தேன்.
இஸ்ரவேலே, உன் வாயைத் திற,
நான் உன்னைப் போஷிப்பேன்.
11 “ஆனால் என் ஜனங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.
இஸ்ரவேல் எனக்குக் கீழ்ப்படியவில்லை.
12 எனவே அவர்கள் செய்ய விரும்பியதைச் செய்யுமாறு அனுமதித்தேன்.
இஸ்ரவேலர் அவர்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
13 என் ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்டு நடந்தால்,
என் விருப்பப்படியே வாழ்ந்தால்,
14 அப்போது நான் அவர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பேன்.
இஸ்ரவேலருக்குத் தொல்லை தரும் ஜனங்களைத் தண்டிப்பேன்.
15 கர்த்தருடைய பகைவர்கள் அச்சத்தால் நடுங்குவார்கள்.
அவர்கள் என்றென்றைக்கும் தண்டிக்கப்படுவார்கள்.
16 தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார்.
அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்.”
புதிய இஸ்ரவேல்
31 கர்த்தர், “அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களுக்கும் தேவனாக இருப்பேன். அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்” என்றார்.
2 கர்த்தர் கூறுகிறார்:
“ஜனங்களில் சிலர் பகைவரின் வாளால் கொல்லப்படவில்லை.
அந்த ஜனங்கள் வனாந்தரத்திற்குத் தப்பி ஓடி, ஆறுதலடைவார்கள்,
இஸ்ரவேலர் இளைப்பாறுதலைத் தேடி அங்கு போவார்கள்.”
3 வெகு தொலைவில் இருந்து
கர்த்தர் அவரது ஜனங்களுக்கு தோன்றுவார்.
கர்த்தர் கூறுகிறார்:
“ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்.
எனது அன்பு என்றென்றும் நீடித்திருக்கும்.
ஆகையால் தான் தொடர்ந்து உங்களுக்கு அன்பு காட்டினேன்.
4 இஸ்ரவேலே, எனது மணப்பெண்ணே, நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.
நீ மீண்டும் ஒரு நாடாவாய்.
நீ உனது மேள வாத்தியங்களை மீண்டும் எடுத்துக்கொள்வாய்.
நீ மகிழ்ச்சியூட்டும் மற்ற ஜனங்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவாய்.
5 இஸ்ரவேலின் விவசாயிகளாகிய நீங்கள் மீண்டும்
திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்வீர்கள்.
சமாரியா நகரைச் சுற்றிலும் மலைப் பகுதிகளில் திராட்சைகளைப் பயிரிடுவாய்.
அவ்விவசாயிகள் அத்திராட்சைத் தோட்டங்களிலிருந்து
பழங்களைத் தின்று மகிழ்வார்கள்.
6 காவல்காரன் இச்செய்தியைச் சத்தமிடும்
ஒரு காலம் வரும்.
‘வாருங்கள், நமது தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ள சீயோனுக்குப் போகலாம்!’
எப்பிராயீம் நாட்டு மலையில் உள்ள காவல்காரன் கூட இச்செய்தியைச் சத்தமிட்டுச் சொல்வான்.”
35 “நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை. 36 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். 37 எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம்மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். 38 நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை. 39 தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான். 40 குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு.
2008 by World Bible Translation Center