Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 142

தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்.

142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
    நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
    நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
    நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
    ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
    எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.

எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
    கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
    கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
    என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
    அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
    நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.

ஆமோஸ் 9:1-4

பலிபீடத்தின் அருகில் கர்த்தர் நிற்கும் தரிசனம்

நான் என் ஆண்டவர் பலிபீடத்தின் அருகில் நிற்பதைக் கண்டேன்.

அவர், “நீ, வாசல் நிலைகள் அசையும்படி தூண்களை அடித்து,
    அவற்றை அவர்கள் எல்லாருடைய தலையின் மேலும் விழ உடைத்துப்போடு.
ஜனங்களில் எவராவது உயிரோடு மீந்தால், பிறகு நான் அவர்களை வாளால் கொல்வேன்.
    ஒருவன் வெளியே ஓடிவிடலாம்.
ஆனாலும் அவன் தப்பமுடியாது.
    ஜனங்களில் ஒருவரும் தப்ப இயலாது.
அவர்கள் தரையில் ஆழமாகத் தோண்டிப் போனாலும்
    நான் அவர்களை அங்கிருந்து வெளியே எடுப்பேன்.
அவர்கள் வானம் வரை ஏறிப்போனாலும்
    நான் அவர்களை அங்கிருந்து தரைக்குக் கொண்டு வருவேன்.
அவர்கள் கர்மேல் மலையின் உச்சியில் ஒளிந்தாலும் நான் அவர்களை அங்கே காண்பேன்.
    நான் அவர்களை அங்கிருந்து எடுப்பேன்.
அவர்கள் என்னிடமிருந்து ஓடிக் கடலின் ஆழத்திற்குப் போனாலும்
    நான் பாம்புக்கு கட்டளையிடுவேன்,
    அது அவர்களைக் கடிக்கும்.
அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பகைவர்களால் கொண்டு செல்லப்பட்டால்
    நான் வாளுக்குக் கட்டளையிடுவேன்.
    அது அங்கே அவர்களைக் கொல்லும்.
ஆம் நான் அவர்களைக் கவனிப்பேன்.
    ஆனால் நான் அவர்களுக்குத் துன்பம் தரும் வழிகளைக் கொடுப்பதற்கே பார்ப்பேனேயல்லாமல் நன்மையைத்தருவதற்கல்ல” என்றார்.

அப்போஸ்தலர் 23:12-35

பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்

12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.

16 பவுலின் சகோதரியின் குமாரன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் குமாரனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.

19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.

22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.

செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்

23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.

26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,

வாழ்த்துக்கள்.

27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.

31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.

34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center