Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆமோஸ் 7:7-15

தூக்குநூலின் தரிசனம்

கர்த்தர் எனக்கு இதனைக் காட்டினார். கர்த்தர் ஒரு சுவரின் பக்கத்தில் தூக்கு நூலைத் தம் கரத்தில் பிடித்துக்கொண்டு நின்றார். (அச்சுவர் தூக்கு நூலினால் குறிக்கப்பட்டிருந்தது) கர்த்தர், “ஆமோஸ், என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார்.

நான், “ஒரு தூக்கு நூல்” என்றேன்.

பிறகு என் ஆண்டவர், “பார், என் இஸ்ரவேல் ஜனங்களிடம் தூக்கு நூலை நான் விடுவேன். நான் அவர்களது ‘கோணல் தன்மை’ இனிமேலும் பரிசோதனையைக் கடந்து செல்ல விடமாட்டேன். நான் அந்தக் கெட்ட பகுதிகளை நீக்குவேன். ஈசாக்கின் மேடைகள் அழிக்கப்படும். இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் கற்குவியல்கள் ஆக்கப்படும். நான் யெரோபெயாம் குடும்பத்தை வாளால் தாக்கிக் கொல்வேன்” என்றார்.

அமத்சியா, ஆமோசைத் தடுக்க முயல்கிறான்

10 பெத்தேலின் ஆசாரியன் அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரோபெயாமுக்கு இச்செய்தியை அனுப்பினான். “ஆமோஸ் உனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகிறான். அவன், இஸ்ரவேல் உனக்கு எதிராகப் போராட முயற்சி செய்கிறான். இந்த நாடு அவனது வார்த்தைகளையெல்லாம் சகித்துக்கொள்ளாது. 11 ஆமோஸ், ‘யெரொபெயாம் வாளால் கொல்லப்படுவான். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களது நாட்டிலிருந்து சிறைகளாகச் செல்வார்கள்’” என்று சொல்லியிருக்கிறான்.

12 அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: “தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய். 13 ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!”

14 பிறகு ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதில் சொன்னான். “நான் தொழில்ரீதியான தீர்க்கதரிசி இல்லை. நான் தீர்க்கதரிசியின் குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் மந்தையைப் பாதுகாக்கிறவன். நான் காட்டத்தி மரங்களைக் கவனித்து வருபவன். 15 நான் ஒரு மேய்ப்பன், நான் மந்தையின் பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை அழைத்தார். கர்த்தர், ‘போ, எனது இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு’ என்று என்னிடம் சென்னார்.

சங்கீதம் 85:8-13

தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
    அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
    எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
    நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
    நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
    பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
    நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
    அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.

எபேசியர் 1:3-14

கிறிஸ்துவில் ஆவியானவரின் ஆசீர்வாதம்

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார். உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற குமாரனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். 10 சரியான நேரம் வரும்போது தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தேவன் ஏற்கெனவே செய்த முடிவு. பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்று கூடி கிறிஸ்துவின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம்.

11 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். 12 கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களில் நாமே முதல் மக்கள். நாம் தேவனின் மகிமைக்குப் புகழ் சேர்ப்போம் என்பதனால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். 13 இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். 14 தேவன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி நாம் பெறுவோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் உள்ளார். தேவனைச் சேர்ந்தவர்களுக்கு இது முழு விடுதலை தரும். தேவனின் மகிமைக்குப் புகழ்ச்சியைத் தேடித் தருவது தான் இவை எல்லாவற்றின் நோக்கமாக இருக்கும்.

மாற்கு 6:14-29

ஏரோதுவின் தவறான கணிப்பு

(மத்தேயு 14:1-12; லூக்கா 9:7-9)

14 இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர்.

15 இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர்.

16 இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான்.

யோவான் ஸ்நானகனின் மரணம்

17 ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். 18 ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். 19 எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை 20 யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது.

21 பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். 22 ஏரோதியாளின் குமாரத்தி அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர்.

ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். 23 “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.

24 அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள்.

25 உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள்.

26 ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. 27 உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். 28 பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29 அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center