Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 2:1-5

குரலானது, மனுபுத்திரனே,[a] எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது.

பிறகு, ஒரு காற்று வந்து என்னை நிற்கும்படி செய்தது. என்னோடு பேசிய அந்த நபருக்கு (தேவன்) செவிசாய்த்தேன். அவர் என்னிடம் “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தோடு பேசுவதற்கு நான் உன்னை அனுப்புகிறேன். அந்த ஜனங்கள் எனக்கு எதிராகப் பலமுறை திரும்பினார்கள். அவர்களது முற்பிதாக்களும் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பலமுறை பாவம் செய்திருக்கின்றனர். அவர்கள் இன்றும் பாவம்செய்துகொண்டிருக்கின்றனர். அந்த ஜனங்களோடு பேசவே உன்னை நான் அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் மிகக் கடினமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடினமான மனதை உடையவர்கள். ஆனால் நீ அந்த ஜனங்களோடு பேசவேண்டும். நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும். ஆனால் அந்த ஜனங்கள் நீ சொல்வதைக் கவனிக்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மோசமான கலகக்காரர்கள். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராக திரும்புகின்றார்கள். ஆனால் நீ அவற்றைச் சொல்லவேண்டும். எனவே, அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அறிந்துக்கொள்வார்கள்.

சங்கீதம் 123

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.

123 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
    நீர் பரலோகத்தில் ராஜாவாக வீற்றிருக்கிறீர்.
தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
    அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம்.
    நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.

கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும்.
    நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம்.
    பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

2 கொரி 12:2-10

கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். 3-4 அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான். நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன்.

நான் என்னையே பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நான் முட்டாளாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் உண்மையைச் சொல்லிவிடுவேன். அதோடு நான் சொல்வதையும் செய்வதையும் காணும் மக்கள் என்னைப் பற்றி மிகுதியாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் என்னைப் பற்றி நானே பெருமை பேசிக்கொள்ளமாட்டேன்.

எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. 10 எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.

மாற்கு 6:1-13

தன் சொந்த ஊரில் இயேசு

(மத்தேயு 13:53-58; லூக்கா 4:16-30)

அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? இவர் ஒரு தச்சன் மட்டும்தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர்.

இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார். இயேசு அந்த ஊரில் அதிக அளவில் அற்புதங்களைச் செய்ய இயலவில்லை. அவர் நோயுற்ற சிலரின் மேல் தன் கையை வைத்து குணமாக்கும் சில செயல்களை மட்டுமே செய்தார். அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார்.

சீஷர்கள் அனுப்பப்படுதல்

(மத்தேயு 10:1,5-15; லூக்கா 9:1-6)

அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம். செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள். 10 நீங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த ஊரை விட்டு நீங்கும்வரை அங்கேயே தங்கி இருங்கள். 11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது உங்கள் உபதேசங்களைக் கேட்க மறுத்தாலோ அந்த ஊரைவிட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் அங்கேயே உதறிவிட்டுச் செல்லுங்கள். அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.

12 சீஷர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் பல இடங்களுக்கும் சென்றனர். அவர்கள் மக்களிடம் உபதேசம் செய்தனர். தங்கள் மனதையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுமாறு போதித்தனர். 13 அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து விரட்டினர். அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு ஒலிவ எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center