Revised Common Lectionary (Complementary)
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
88 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
2 தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
3 இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
நான் விரைவில் மரிப்பேன்.
4 ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
5 மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
6 பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
7 தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.
8 என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
9 என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.
10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.
13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.
ஏசேக்கியா நோயுற்று மரணத்தை நெருங்குதல்
20 அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, “நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
2 எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து, 3 “கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன்” என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான்.
4 ஏசாயா பாதி முற்றத்தை விட்டு விலகு முன், கர்த்தருடைய செய்தி அவனுக்கு வந்தது. கர்த்தர் அவனிடம், 5 “திரும்பிப் போய் எசேக்கியாவிடம் பேசு. எனது ஜனங்களின் தலைவனான அவனிடம், ‘கர்த்தரும் உனது முற்பிதாவான தாவீதின் தேவனும் சொல்லுவதாவது: நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். உனது கண்ணீரைப் பார்த்தேன். எனவே நான் உன்னைக் குணப்படுத்துவேன். மூன்றாவது நாள் நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய். 6 நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவின் வல்லமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன்.’ என்று சொல்” என்று கூறினார்.
7 பிறகு ஏசாயா ராஜாவிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான்.
அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.
8 எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தர் என்னைக் குணப்படுத்துவார் என்பதற்கான அடையாளம் எது? மூன்றாவது நாள் நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கான அடையாளமும் எது?” என்று கேட்டான்.
9 ஏசாயாவோ, “நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா?[a] இதுதான், கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்” என்றான்.
10 “நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.
11 பிறகு ஏசாயா, கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். கர்த்தரும் ஆகாசுடைய (சூரிய கடியாரத்தில்) காலடிக்கு முன்போன நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.
சிறுவன் குணமாக்கப்படுதல்
(மத்தேயு 17:14-20; லூக்கா 9:37-43)
14 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். 15 இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர்.
16 இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
17 “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. 18 பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன்.
19 அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார்.
20 ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று.
21 இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார்.
அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. 22 பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான்.
23 இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார்.
24 அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.
25 எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார்.
26 அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். 27 ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார்.
28 இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர்.
29 இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார்.
2008 by World Bible Translation Center