Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 107:1-3

புத்தகம் 5

107 கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
    அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
    கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
    அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.

சங்கீதம் 107:23-32

23 சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
    பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
24 கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
    கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
25 தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
    அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
26 அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
    மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
27 அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
    மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
28 அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
    எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
    அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
29 தேவன் புயலை நிறுத்தினார்.
    அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
30 கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
    அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
31 அவரது அன்பிற்காகவும்,
    அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
32 பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
    முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள்.

யோபு 29:1-20

யோபு அவனது பேச்சைத் தொடர்கிறான்

29 யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான்.

யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது,
    பல மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போன்று என் வாழ்க்கை அமையாதா என விரும்புகிறேன்.
அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது.
    தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார்.
நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன்.
    அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.
என் வாழ்க்கை மிக நன்றாக இருந்த காலம் அது.
    நான் பாலேட்டில் என் கால்களைக் கழுவினேன், சிறந்த எண்ணெய்கள் என்னிடம் ஏராளம் இருந்தன.

“நான் நகரவாயிலுக்குச் சென்று,
    பொது ஜனங்கள் கூடும் இடத்தில் நகர மூப்பர்களுடன் வீற்றிருந்த நாட்கள் அவை.
அங்கு எல்லா ஜனங்களும் எனக்கு மதிப்பளித்தார்கள்!
    நான் வருவதைப் பார்க்கும்போது இளைஞர்கள் என் பாதையிலிருந்து (எனக்கு வழிவிட்டு) விலகி நின்றார்கள்.
    முதியோர் எழுந்து நின்றனர்.
    என்னை அவர்கள் மதித்ததைக் காட்டும் பெருட்டு அவர்கள் எழுந்தனர்.
ஜனங்களின் தலைவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள்.
    பிறரும் அமைதியாயிருக்கும்படி அவர்கள் தங்கள் கைகளை வாய்களில் வைத்தார்கள்.
10 மிக முக்கியமான தலைவர்கள் கூட தங்கள் சத்தத்தைக் குறைத்து (தாழ்ந்த தொனியில்) பேசினார்கள்.
    ஆம், அவர்கள் நாவு வாயின்மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டாற்போலத் தோன்றிற்று.
11 ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள்,
    என்னைப்பற்றி நல்ல காரியங்களைச் சொன்னார்கள்.
12 ஏனெனில், ஏழை உதவிக்காக கூப்பிட்டபோது, நான் உதவினேன்.
    நான் பெற்றோரற்ற பிள்ளைகளுக்கும், கவனிப்பாரற்ற பிள்ளைகளுக்கும் உதவினேன்.
13 கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான்.
    உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.
14 நேர்மையான வாழ்க்கையை நான் ஆடையாக உடுத்தியிருந்தேன்.
    நியாயம் எனக்கு அங்கியாகவும், தலைப்பாகையாகவும் அமைந்தது.
15 குருடர்களுக்கு நான் கண்களானேன்.
    அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு வழி நடத்தினேன்.
    முடவருக்கு நான் காலானேன்.
    அவர்கள் போகவேண்டிய இடத்திற்கு அவர்களைச் சுமந்து சென்றேன்.
16 நான் ஏழைகளுக்குத் தந்தையைப் போன்றிருந்தேன்.
    நான் அறிந்திராத ஜனங்களுக்கு உதவினேன்.
    நியாயசபையில் அவர்களின் வழக்கு வெற்றிப்பெற உதவினேன்.
17 நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன்.
    அவர்களிடமிருந்து களங்கமற்றோரைக் காப்பாற்றினேன்.

18 “என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க
    வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
19 பனிப்படர்ந்த கிளைகளும் தண்ணீரை மிகுதியாகப் பெற்ற வேர்களையுமுடைய ஆரோக்கியமான செடியைப்போல
    நானும் ஆரேக்கியமாயிருப்பேன் என எண்ணியிருந்தேன்.
20 என் பெலன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது.
    என் கையிலுள்ள வில் புதுப்பெலன் கொண்டது.

அப்போஸ்தலர் 20:1-16

மக்கதோனியா, கிரீஸில் பவுல்

20 தொல்லை நீங்கியபோது பவுல் சீஷர்களைத் தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தான். அவன் அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி, பின் விடை பெற்றான். பவுல் மக்கதோனியா நாட்டிற்குத் தன் பயணத்தைத் துவக்கினான். மக்கதோனியாவிற்குச் சென்ற வழியில் பல இடங்களில் தங்கி சீஷர்களை பலப்படுத்துவதற்குப் பல காரியங்களை அவர்களுக்குக் கூறினான். பின் பவுல் கிரீசை அடைந்தான். அவன் அங்கு மூன்று மாதங்கள் தங்கினான். அவன் சிரியாவுக்குக் கடற்பயணம் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். ஆனால் சில யூதர்கள் அவனுக்கெதிராகத் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தனர். எனவே பவுல் மக்கதோனியா வழியாக சிரியாவுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தான். சில மனிதர்கள் அவனோடிருந்தனர். அவர்கள் பெரேயா நகரத்தைச் சேர்ந்த சோபத்தர், தெசலோனிக்கா நகரத்தின் அரிஸ்தர்க்கு மற்றும் செக்குந்து, தெர்பெ நகரின் காயு, தீமோத்தேயு, ஆசியாவின் இரண்டு மனிதர்களான தீகிக்குவும், துரோப்பீமும் ஆவர். பவுலுக்கு முன்னரே இம்மனிதர்கள் சென்றனர். துரோவா நகரில் அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தனர். புளிப்பில்லாத அப்பத்தின் பண்டிகைக்குப் பிறகு நாங்கள் பிலிப்பி நகரத்திலிருந்து கடற் பயணமாகச் சென்றோம். ஐந்து நாட்களுக்குப் பிறகு துரோவாவில் இம்மனிதர்களை நாங்கள் சந்தித்தோம். அங்கு ஏழு நாட்கள் தங்கினோம்.

துரோவாவில் பவுல்

கர்த்தரின் திருவிருந்தை[a] உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். நாங்கள் எல்லோரும் மாடியிலுள்ள அறையில் கூடியிருந்தோம். அறையில் பல விளக்குகள் ஒளி வீசிக்கொண்டிருந்தன. ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.

10 பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான். 11 பவுல் மீண்டும் மாடிக்குச் சென்றான். அவன் அவர்களோடு அப்பத்தைப் பிட்டு உண்டான். பவுல் அவர்களோடு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசி முடித்தபோது அதிகாலைப் பொழுதாகியிருந்தது. பின் பவுல் புறப்பட்டுப் போனான். 12 மக்கள் இளைஞனை வீட்டிற்குள் எடுத்துச்சென்றனர். அவன் உயிரோடிருந்தான். மக்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர்.

மிலேத்துவுக்குப் பயணம்

13 ஆசோ நகருக்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். நாங்கள் பவுலுக்கு முன்பாகவே முதலாவதாக அங்கு சென்றோம். ஆசோவில் பவுல் எங்களைச் சந்தித்து அங்குள்ள கப்பலில் எங்களோடு சேர்ந்துகொள்ளத் திட்டமிட்டான். பவுல் ஆசோவிற்கு நிலத்தின் வழியாகப் பயணம் செய்ய விரும்பியதால் இவ்வாறு செய்யும்படி எங்களுக்குக் கூறினான். 14 பின்னர் பவுலை நாங்கள் ஆசோவில் சந்தித்தோம். அங்கு அவன் எங்களோடு கப்பலின்மேல் வந்தான். நாங்கள் எல்லோரும் மித்திலேனே நகருக்குச் சென்றோம். 15 மறுநாள் நாங்கள் மித்திலேனேயிலிருந்து கடற்பயணமானோம். கீயுதீவின் அருகேயுள்ள ஓரிடத்திற்கு வந்தோம். மறுநாள் சாமோஸ் தீவிற்கு நாங்கள் கடல்வழியாகப் பயணமானோம். ஒரு நாள் கழித்து, மிலேத்து நகரத்திற்கு வந்தோம். 16 எபேசுவில் தங்கவேண்டாமென்று பவுல் ஏற்கெனவே முடிவெடுத்திருந்தான். ஆசியாவில் நீண்ட காலம் தங்க அவன் விரும்பவில்லை. முடிந்தால் பெந்தெகோஸ்து[b] நாளில் எருசலேமில் இருக்க விரும்பியதால் அவன் அவசரப்பட்டுக்கொண்டிருந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center