Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.
52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
2 நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
4 நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
5 எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
அவர் உன்னை உனது வீட்டிலிருந்து[a] இழுத்து எறிவார்.
அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
6 நல்லோர் இதனைக் காண்பார்கள்.
தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
7 “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
8 ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
9 தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.
தீய ராஜாக்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
22 கர்த்தர், “எரேமியா, ராஜாவினுடைய அரண்மனைக்குப் போ. யூதாவின் ராஜாவிடம் போ. அங்கு இந்த வார்த்தையைப் பிரச்சாரம் செய்: 2 ‘கர்த்தரிடமிருந்து வருகிற வார்த்தையை யூதாவின் ராஜாவே, கேள். நீ தாவீதின் சிங்காசனத்திலிருந்து ஆளுகிறாய். எனவே, கேள். ராஜாவே, நீயும் உன் அதிகாரிகளும் நன்றாகக் கேட்கவேண்டும். எருசலேமின் வாசல் வழியாக வருகிற அனைத்து ஜனங்களும் கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேட்க வேண்டும். 3 கர்த்தர் கூறுகிறார்: நியாயமானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். களவாடுகிறவனிடமிருந்து களவாடப்படுகிற மனிதனைக் காப்பாற்றுங்கள். அனாதைகள் அல்லது விதவைகளுக்குக் காயமோ அல்லது வேறு எதுவுமோ செய்யாதீர்கள். அப்பாவி ஜனங்களைக் கொல்லாதீர்கள். 4 இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் பிறகு இதுதான் நடக்கும். தாவீதின் சிங்காசனத்தின் மேல் இருக்கிற ராஜாக்கள் எருசலேம் நகர வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள் தங்கள் அதிகாரிகளோடு வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த ராஜாக்கள், அவர்களின் அதிகாரிகள், அவர்களின் ஜனங்கள், இரதங்களிலும், குதிரைகளிலும் சவாரி செய்துகொண்டு வருவார்கள். 5 ஆனால், நீங்கள் இந்தக் கட்டளைகளுக்கு அடி பணியாவிட்டால், இதுதான் கர்த்தர் சொல்கிறது: கர்த்தராகிய நான் வாக்குறுதியளிக்கிறேன், இந்த ராஜாக்களின் அரண்மனைகள் அழிக்கப்படும். அது கற்குவியல் ஆகும்’” என்றார்.
6 யூதாவின் ராஜாக்கள் வாழ்கிற அரண்மனையைப்பற்றி கர்த்தர் இவற்றைத் தான் கூறுகிறார்:
“அரண்மனை உயரமானது.
கீலேயாத் காடுகளைப் போன்று உயரமானது.
லீபனோனின் மலையைப்போன்று அரண்மனை உயரமானது.
ஆனால் நான் அதனை வனாந்தரம் போன்று ஆக்குவேன்.
இந்த அரண்மனை ஆளில்லாத நகரத்தை போன்று காலியாகும்.
7 அரண்மனையை அழிக்க நான் ஆட்களை அனுப்புவேன்.
ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களை வைத்திருப்பான்.
அந்த ஆயுதங்களை அவன் அரண்மனையை அழிக்கப் பயன்படுத்துவான்.
அம்மனிதர்கள் உங்களது பலமான அழகான கேதுரு தூண்களை வெட்டி எறிவார்கள்.
மனிதர்கள் அத்தூண்களை நெருப்பில் போடுவார்கள்.
8 “பலநாடுகளில் உள்ள ஜனங்கள் இந்நகரத்தின் வழியாகக் கடந்துபோவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்பார்கள். ‘ஏன் கர்த்தர் எருசலேம் நகரத்திற்கு இந்தப் பயங்கரமான காரியத்தைச் செய்தார்? எருசலேம் ஒரு மாபெரும் நகரமாக இருந்ததே.’ 9 அந்த வினாவிற்கு இதுதான் பதில்: ‘தேவன் எருசலேமை அழித்தார். ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கையைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். அந்த ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்தனர்.’”
இருவகைப் பழங்கள்
(மத்தேயு 7:17-20; 12:34-35)
43 “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. 44 ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. 45 நல்ல மனிதனின் இதயத்தில் நல்ல காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் இதயத்தில் இருந்து நல்ல காரியங்களையே வெளிப்படுத்துவான். ஆனால், தீய மனிதனின் இதயத்தில் தீய காரியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனவே அவன் தீய காரியங்களை வெளிப்படுத்துவான். ஏனெனில் ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே ஆகும்.
2008 by World Bible Translation Center