Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
130 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,
எனவே நான் உதவிக்காக உம்மைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.
2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.
உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.
3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்
நீர் அவர்களைத் தண்டித்தால் ஒருவனும் உயிரோடிருக்கமாட்டான்.
4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.
அப்போது உம்மைத் தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் இருப்பார்கள்.
5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஆத்துமா அவருக்காகக் காத்திருக்கிறது. கர்த்தர் கூறுவதை நான் நம்புகிறேன்.
6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
காலை வேளைக்கெனக் காத்து நிற்கும் காவலாளரைப்போல் நான் இருக்கிறேன்.
7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.
கர்த்தர் நம்மை மீண்டும், மீண்டும் காப்பாற்றுகிறார்.
8 கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.
ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது
34 “நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து, 35 ‘இப்பொழுது உயிருடனிருக்கும் தீயவர்களாகிய உங்களில் ஒருவரும் நான் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்த பரிசுத்த பூமிக்குச் செல்லமாட்டீர்கள். 36 எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் மட்டுமே அப்பூமியைக் காண்பான். காலேப் நடந்து சென்ற பூமியை அவனுக்கும், அவனது சந்ததியினருக்கும் வழங்குவேன். ஏனென்றால் நான் கட்டளையிட்டவற்றை காலேப் மட்டுமே செய்தான்’ என்று கர்த்தர் கூறினார்.
37 “உங்கள் நிமித்தம் என்னிடமும் கர்த்தர் கோபமாயிருந்தார். அவர் என்னிடம், ‘மோசே நீயும் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது. 38 ஆனால் உன் உதவியாளனும், நூனின் மகனுமாகிய யோசுவாவும் அந்நாட்டிற்குச் செல்வார்கள். யோசுவாவை ஊக்கப்படுத்து, ஏனெனில் இஸ்ரவேலர்கள் அந்த நாட்டை சொந்தமாக்கிக்கொள்ள அவன் அவர்களை வழிநடத்துவான்’ என்று கூறினார். 39 மேலும் கர்த்தர் எங்களிடம், ‘உங்கள் குழந்தைகள் எதிரிகளால் தூக்கிச் செல்லப்படுவார்கள் என்று கூறினீர்கள். ஆனால், அக்குழந்தைகள் அந்நாட்டிற்குள் நுழைவார்கள். உங்கள் தவறுகளுக்காக உங்கள் குழந்தைகளை நான் குற்றஞ் சொல்லமாட்டேன் ஏனென்றால் நல்லது கெட்டது அறியாத இளம்பருவத்தினர் அவர்கள். ஆகவே அந்த நாட்டை நான் அவர்களுக்கு வழங்குகிறேன். உங்கள் குழந்தைகள் அதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 40 ஆனால் நீங்களோ செங்கடலுக்குச் செல்லும் சாலை வழியாகப் பாலைவனத்திற்குத் திரும்பிச்செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
5 பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது. 2 ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். 3 அது நம்மை ஆடையுள்ளவர்களைப் போலாக்கும். நாம் நிர்வாணமானவர்களைப்போல இருக்கமாட்டோம். 4 நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும். 5 இதற்காகத்தான் தேவன் நம்மை ஆயத்தம் செய்திருக்கிறார். ஆவி என்னும் அச்சாரத்தைத் தந்து நமக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறார்.
2008 by World Bible Translation Center