Revised Common Lectionary (Complementary)
கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் குமாரனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்.
7 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை மீட்டுக்கொள்ளும்!
2 நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!
3 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
4 என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
5 ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
6 கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
7 கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
8 கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
9 தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
தேவனே, நீர் நல்லவர்.
நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.[a]
14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.
17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.
7 “இப்பொழுது, மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னைக் காவல்காரனாக நான் தேர்ந்தெடுக்கிறேன். எனது வாயிலிருந்து செய்தியை நீ கேட்டால், எனக்காக ஜனங்களை எச்சரிக்க வேண்டும். 8 நான் உனக்குச் சொல்லலாம்: ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்.’ பிறகு நீ எனக்காகப் போய் அவனை எச்சரிக்க வேண்டும். நீ அந்தப் பாவியை எச்சரிக்காமல் அவனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படி சொல்லாவிட்டால், பிறகு அவன் தான் செய்த பாவத்துக்காக மரிப்பான். ஆனால் அவனது மரணத்திற்கு நான் உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். 9 ஆனால் நீ அந்தப் பாவியைத் தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும்படியும், பாவம் செய்வதை நிறுத்தும்படியும் எச்சரிக்கை செய்தும் அவன் பாவம் செய்வதை நிறுத்த மறுத்துவிட்டால், பின் அவன் மரிப்பான். ஏனென்றால், அவன் பாவம் செய்தவன். ஆனால் நீ உன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கிறாய்.
ஜனங்களை அழிக்க தேவன் விரும்புகிறதில்லை
10 “எனவே, மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் வம்சத்தாரிடம் பேசு. அந்த ஜனங்கள் சொல்லலாம்: ‘நாங்கள் பாவம் செய்து சட்டங்களை மீறினோம். எங்கள் பாவங்கள் தாங்கமுடியாத அளவிற்குப் பாரமானவை. அந்தப் பாவங்களால் நாங்கள் கெட்டுப்போனோம். நாங்கள் உயிர் வாழ என்ன செய்யவேண்டும்?’
11 “நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என் உயிரின் மேல் ஆணையிடுகிறேன், நான் ஜனங்கள் மரிப்பதை, பாவிகள் கூட மரிப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைவதில்லை. அவர்கள் மரிப்பதை நான் விரும்புவதில்லை. அந்தப் பாவி ஜனங்களும் என்னிடம் திரும்பி வருவதையே நான் விரும்புகிறேன். நான், அவர்கள் வாழ்வை மாற்றிக்கொண்டு உண்மையான வாழ்க்கை வாழ்வதை விரும்புகிறேன். எனவே என்னிடம் திரும்பி வா. தீமை செய்வதை நிறுத்து. இஸ்ரவேல் வம்சத்தாரே நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?’
12 “மனுபுத்திரனே, உன் ஜனங்களிடம் சொல்: ‘ஒருவன் தீயவனாக மாறிப் பாவம் செய்யத் தொடங்குவானேயானால் அவன் முன்பு செய்த நன்மைகள் எல்லாம் அவனைக் காப்பாற்றாது. ஒருவன் தீமையிலிருந்து மாறிவிடுவானேயானால் அவன் முன்பு செய்த தீமைகள் அவனை அழிக்காது. எனவே, ஒருவன் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் முன்பு செய்த நன்மைகள் அவனைக் காப்பாற்றாது என்பதை நினைவில் வைத்துக்கொள்.’
13 “நான் ஒரு நல்லவனிடம் நீ வாழ வேண்டும் என்று சொல்லலாம். ஒருவேளை அவன் தான் முன்பு செய்த நன்மைகள் தன்னைக் காப்பாற்றும் என்று நினைக்கலாம். எனவே, அவன் தீமைகள் செய்யத் தொடங்கலாம். நான் அவன் முன்பு செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கமாட்டேன்! இல்லை, அவன் தான் செய்யத் தொடங்கிவிட்ட பாவத்தால் மரிப்பான்.
14 “அல்லது நான் ஒரு தீயவனிடம் அவன் மரிப்பான் என்று சொல்லலாம். ஆனால், அவன் தன் வாழ்க்கையை மாற்றலாம். அவன் பாவம் செய்வதை நிறுத்தி, சரியான வழியில் வாழத் தொடங்கலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 15 அவன் கடன் கொடுத்தபோது பெற்ற பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அவன் திருடிய பொருளையும் திருப்பிக் கொடுக்கலாம். அவன் வாழ்வைத் தருகிற நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றத் தொடங்கலாம். அவன் தீமை செய்வதை நிறுத்திவிடுகிறான். பிறகு அவன் நிச்சயம் வாழ்வான். அவன் மரிக்கமாட்டான். 16 அவன் முன்பு செய்த தீமைகளை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அவன் இப்பொழுது நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறான். எனவே அவன் வாழ்வான்!
17 “ஆனால் உங்கள் ஜனங்கள், ‘அது சரியன்று! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்க முடியாது!’ என்கிறார்கள்.
“ஆனால் அவர்களோ நேர்மையில்லாத ஜனங்களாய் இருக்கிறார்கள். அவர்களே மாறவேண்டிய ஜனங்களாக இருக்கிறார்கள். 18 ஒரு நல்லவன் தான் செய்யும் நன்மைகளை நிறுத்திப் பாவம் செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தன் பாவத்தாலேயே மரிப்பான். 19 ஒரு பாவி தான் செய்யும் தீமைகளை நிறுத்தி நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் வாழத்தொடங்கினால் பிறகு அவன் வாழ்வான். 20 ஆனாலும் நீங்கள் நான் நேர்மையாக இல்லை என்று இன்னும் சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இஸ்ரவேல் குடும்பத்தாரே, ஒவ்வொருவனும் தான் செய்த காரியங்களுக்காகவே நியாயந்தீர்க்கப்படுவான்!”
தேவ அதிகாரம் பெற்ற இயேசு
19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.
22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.
24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். 25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.
28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.
30 “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.
யூதர்களிடம் இயேசு பேசுதல்
31 “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும்.
33 “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். 34 மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். 35 யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.
36 “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. 37 என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. 38 பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.
2008 by World Bible Translation Center