Revised Common Lectionary (Complementary)
கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் குமாரனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்.
7 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை மீட்டுக்கொள்ளும்!
2 நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!
3 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
4 என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
5 ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
6 கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
7 கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
8 கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
9 தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
தேவனே, நீர் நல்லவர்.
நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.[a]
14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.
17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.
3 பிறகு எஸ்தர் மீண்டும் ராஜாவிடம் பேசினாள். அவள் ராஜாவின் காலில் விழுந்து, அழத்தொடங்கினாள். ஆகாகியான ஆமானின் தீயத்திட்டத்தை நீக்கும்படி அவள் மன்றாடினாள். ஆமான் யூதர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தான்.
4 பிறகு ராஜா தனது பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். எஸ்தர் எழுந்து ராஜா முன்னாள் நின்றாள். 5 பிறகு எஸ்தர், “ராஜாவே, நீர் என்னை விரும்புவதானால், உமக்கும் மகிழ்ச்சியானால் எனக்காக இதனைச் செய்யும். இது நல்ல யோசனை என்று நீர் நினைத்தால் இதனைச் செய்யும். ராஜா என்னோடு சந்தோஷமாக இருக்கிறதானால், ஆமான் அனுப்பிய கட்டளையை விலக்கும்படி ஒரு கட்டளை எழுதி அனுப்பும். ராஜாவின் அனைத்து நாடுகளிலும் உள்ள யூதர்களை அழித்துவிட வேண்டுமென்று ஆகாகியானான ஆமான் ஒரு திட்டம் வைத்து அதை நடத்திட கட்டளை அனுப்பினான். 6 நான் அரசரை மன்றாடிக் கேட்கிறேன். ஏனெனில் என் ஜனங்களுக்கு இத்தகைய பயங்கரம் ஏற்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. எனது குடும்பம் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியாது” என்றாள்.
7 அகாஸ்வேரு ராஜா எஸ்தர் இராணிக்கும், யூதனான மொர்தெகாய்க்கும் பதில் சொன்னான். ராஜா, “ஆமான் யூதர்களுக்கு எதிரியாக இருந்ததால், நான் அவனது சொத்துக்களை எஸ்தருக்கு கொடுத்திருக்கிறேன். என் வீரர்கள் ஆமானைத் தூக்கு மரத்தில் தொங்கப்போட்டனர். 8 இப்பொழுது ராஜாவின் அதிகாரப்படி இன்னொரு கட்டளையை எழுதுங்கள். யூதர்களுக்கு உதவ எது சிறப்பான வழியாகத் தோன்றுகிறதோ அப்படி எழுதி, அந்த கட்டளையை ராஜாவின் சிறப்பு மோதிரத்தில் முத்திரையிடு. ராஜாவின் அதிகாரத்துடன் எழுதப்பட்டு அவனது சிறப்பு மோதிரம் முத்திரை பொறிக்கப்பட்ட எந்தக் கடிதமும் ரத்து செய்யப்படக் கூடாது” என்றான்.
9 மிக விரைவாக ராஜாவின் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். இது சீவான் என்னும் மூன்றாவது மாதத்தின் 23வது நாளில் நடந்தது அச்செயலாளர்கள் மொர்தெகாயின் அனைத்து கட்டளைகளையும் யூதர்கள், தலைவர்கள், ஆளுநர்கள், 127 மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் என அனைவருக்கும் எழுதினார்கள். அம்மாகாணங்கள் இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்தது. இந்த கட்டளை ஒவ்வொரு மாகாணத்தின் மொழியிலும் எழுதப்பட்டது. ஒவ்வொரு குழு ஜனங்களின் மொழியிலும் இந்த கட்டளை மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கட்டளை யூதர்களின் சொந்த மொழியிலும் சொந்த எழுத்திலும் எழுதப்பட்டது. 10 மொர்தெகாய் ராஜா அகாஸ்வேருவின் அதிகாரத்தால் கட்டளைகளை எழுதினான். பிறகு அவன் ராஜாவின் முத்திரை மோதிரத்தால் கடிதங்களை முத்திரையிட்டான். பிறகு தூதர்களை குதிரைகளின் மேல் அனுப்பினான். அவர்கள் ராஜாவுக்காக வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாக போனார்கள்.
11 ராஜாவின் கட்டளைகளாகக் கடிதங்களில் சொல்லப்பட்டவை இதுதான்: ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள யூதர்கள் அனைவரும் கூடி சேர்ந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்ற உரிமையுடையவர்கள். அவர்களுக்கு தங்களையோ, தங்கள் பெண்களையோ, பிள்ளைகளையோ தாக்கும் எதிரிகளைத் தாக்கவோ, கொல்லவோ, அழிக்கவோ உரிமை உண்டு. யூதர்களுக்கு தங்கள் பகைவர்களின் சொத்தை அபகரிக்கவோ, அழிக்கவோ உரிமை உண்டு.
12 இதைச் செய்வதற்காக யூதர்களுக்கு பன்னிரண்டாவது மாதமான ஆதார் மாதத்தின் 13வது நாள் நியமிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் இதனை அகாஸ்வேரு ராஜாவின் இராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 13 ராஜாவின் கட்டளைப் பிரதி ஒன்று அனுப்பப்பட்டு அது சட்டமாயிற்று. எல்லா மாகாணங்களிலும் அது சட்டமானது. இராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளின் ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டதால் யூதர்கள் அந்த சிறப்பு நாளுக்காகத் தயாராக இருந்தனர். யூதர்கள் தம் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். 14 தூதுவர்கள் ராஜாவின் குதிரையில் மிக வேகமாகச் சென்றனர். ராஜா அவர்களிடம் வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான். இந்த கட்டளை, தலைநகரமான சூசானிலும் அறிவிக்கப்பட்டது.
15 மொர்தெகாய் ராஜாவைவிட்டு போனான். அவன் ராஜாவிடமிருந்து பெற்ற சிறப்பான ஆடையை அணிந்திருந்தான். அவனது ஆடை வெண்மையும், நீலமுமாய் இருந்தது. பெரிய பொற் கிரீடமும், சிறந்த பட்டும், இரத்தாம்பரமும் அணிந்திருந்தான். சூசானின் சிறப்பு விழா நடைபெற்றது. ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். 16 யூதர்களுக்குத் தனி மகிழ்ச்சியுடைய நாளாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் உரியநாளாக இருந்தது.
17 ராஜாவின் கட்டளை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றனவோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் யூதர்களிடையே ஏற்பட்டன. யூதர் விருந்துடன் அதனைக் கொண்டாடினர். யூதர்களுக்குப் பயந்ததினால் மற்ற குழுவிலுள்ள ஜனங்களும் யூதர்களாகினர்.
பரலோகத்தில் தேவனைப் புகழ்தல்
19 இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள்,
“அல்லேலூயா!
தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது.
2 அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை.
நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார்.
இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே.
அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்”
என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
3 பரலோகத்திலுள்ள மக்கள்,
“அல்லேலூயா!
அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.
4 பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர்.
“ஆமென் அல்லேலூயா”
என அவர்கள் சொன்னார்கள்.
5 பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது,
“நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள்.
நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!”
என்று கூறியது.
6 அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்:
“அல்லேலூயா!
நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார்.
அவரே சர்வ வல்லமையுள்ளவர்.
7 நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம்.
தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது.
ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.
8 மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன.
அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”
(மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.)
9 பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான்.
2008 by World Bible Translation Center