Revised Common Lectionary (Complementary)
கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் குமாரனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்.
7 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை மீட்டுக்கொள்ளும்!
2 நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!
3 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
4 என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
5 ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
6 கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
7 கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
8 கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
9 தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
தேவனே, நீர் நல்லவர்.
நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.
10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.[a]
14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.
17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.
எஸ்தர், இராணி ஆகிறாள்
2 அகாஸ்வேரு ராஜா தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான். 2 பிறகு ராஜாவின் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள், “ராஜாவுக்கு அழகான இளம் கன்னிகளைத் தேட வேண்டும். 3 ராஜா தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் ராஜாவின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் ராஜாவின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். 4 பிறகு ராஜாவின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். ராஜாவும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான்.
5 இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் குமாரன். யாவீர், கீசின் குமாரன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். 6 மொர்தெகாய் பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத ராஜாவாகிய எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். 7 மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் குமாரத்தியாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை குமாரத்தியாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.
8 ராஜாவின் கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, ராஜாவின் பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். 9 யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். ராஜாவின் பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். 10 எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். 11 ஒவ்வொரு நாளும் ராஜாவின் பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.
12 ராஜா அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். 13 ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, ராஜாவிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் ராஜாவின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். 14 மாலையில், அப்பெண் ராஜாவின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் ராஜாவினுடைய பிரதானி. அவன் ராஜாவின் ஆசைப் பெண்களின் அதிகாரி. ராஜா விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் ராஜாவிடம் செல்லக் கூடாது. பிறகு ராஜா அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம்.
15 எஸ்தருக்கு ராஜாவிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் ராஜாவின் பிரதானி. ராஜாவின் பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு குமாரத்தி. அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் குமாரத்தி) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். 16 எனவே, எஸ்தர் அரண்மனைக்கு ராஜா அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.
17 ராஜா, மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு ராஜா எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய இராணியாகச் செய்தான். 18 ராஜா எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய ராஜா.
8 இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. 9 நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. 10 ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர்.
11 இந்தப் போதனை உண்மையானது:
நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
12 நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார்.
13 நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார்.
ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.
2008 by World Bible Translation Center