Revised Common Lectionary (Complementary)
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
உண்மையான தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலுக்கு உதவுகிறார்
21 யாக்கோபே இவற்றை நினைத்துப் பார்!
இஸ்ரவேலே, நீ எனது தாசன் என்பது நினைவிருக்கட்டும்.
நான் உன்னைச் செய்தேன்.
நீ எனது தாசன். எனவே இஸ்ரவேலே என்னை மறக்காதே.
22 உனது பாவங்கள் பெரிய மேகத்தைப்போன்றிருந்தது.
ஆனால், நான் அந்தப் பாவங்களை துடைத்துவிட்டேன்.
உங்களது பாவங்கள் காற்றில் கலந்துவிடும் மேகங்களைப்போன்று மறைந்துவிட்டன.
நான் உன்னை மீட்டுக் காப்பாற்றினேன், எனவே என்னிடம் திரும்பி வா.
23 வானங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றன ஏனென்றால், கர்த்தர் பெரிய செயலைக் செய்திருக்கிறார்.
பூமி மகிழ்ச்சியோடு உள்ளது. பூமியின் தாழ்விடங்களும் மகிழ்கிறது.
மலைகள் தேவனுக்கு நன்றிசொல்லிப் பாடுகின்றன.
காட்டிலுள்ள மரங்களெல்லாம் மகிழ்ச்சியோடு உள்ளன.
ஏனென்றால், கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார்.
கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்.
24 நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கர்த்தர் படைத்தார்.
நீங்கள் உங்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே கர்த்தர் இதனைச் செய்தார்.
கர்த்தர் கூறுகிறார், “கர்த்தராகிய நான், எல்லாவற்றையும் செய்தேன்.
நானாகவே வானங்களை வைத்தேன்.
எனக்கு முன்னால் பூமியைப் பரப்பி வைத்தேன்.”
25 பொய்த் தீர்க்கதரிசிகள் பொய் சொல்கிறார்கள். ஆனால் கர்த்தர் அவர்களின் தீர்க்கதரிசனங்கள் போலியானவை என்று காட்டுகிறார். கர்த்தர் மந்திரவேலை செய்பவர்களை முட்டாளாக்குகிறார். கர்த்தர் ஞானிகளைக் குழப்புகிறார். அவர்கள் தமக்கு மிகுதியாகத் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், கர்த்தர் அவர்களை முட்டாளாக்குகின்றார். 26 கர்த்தர் அவரது வேலைக்காரர்களை ஜனங்களிடம் தமது செய்திகளைச் சொல்ல அனுப்புகிறார். கர்த்தர் அந்தச் செய்திகளை உண்மையாக்குகிறார். கர்த்தர் ஜனங்களிடம் அவர்கள் செய்யவேண்டியதைச் சொல்லத் தூதுவர்களை அனுப்புகிறார். கர்த்தர் அவர்களது ஆலோசனைகளை நிறைவேற்றுவார்.
தேவன் கோரேசை யூதாவைத் திரும்பக் கட்டத் தேர்ந்தெடுத்தார்
கர்த்தர் எருசலேமிடம் கூறுகிறார், “ஜனங்கள் மீண்டும் உன்னிடம் வாழ்வார்கள்!” யூதாவின் நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:
“நீங்கள் மீண்டும் கட்டப்படுவீர்கள்!”
அழிந்துபோன நகரங்களிடம் கர்த்தர் கூறுகிறார்:
“நகரங்களே! உங்களை மீண்டும் அமைப்பேன்.”
27 ஆழமான தண்ணீரிடம் கர்த்தர் கூறுகிறார்: “வற்றிப்போங்கள்!
நான் உங்கள் ஊற்றுகளை வற்றச் செய்வேன்!”
28 கர்த்தர் கோரேசிடம் கூறுகிறார்: “நீ எனது மேய்ப்பன்.
நான் விரும்புவதை நீ செய்வாய்.
நீ எருசலேமிடம் சொல்வாய், ‘நீ மீண்டும் கட்டப்படுவாய்’
நீ தேவாலயத்திடம் கூறுவாய், ‘உனது அஸ்திபாரம் மீண்டும் கட்டப்படும்!’”
இயேசுவின் குடும்பத்தினர் யார்?
(மாற்கு 3:31-35; லூக்கா 8:19-21)
46 இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர். 47 ஒருவன் இயேசுவிடம், “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.
48 இயேசு, “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 49 தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும். 50 பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.
2008 by World Bible Translation Center