Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 95:1-7

95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
    நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
    அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
    பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
    தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.

வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
    நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
அவரே நமது தேவன்!
    நாம் அவரது ஜனங்கள்.
    அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.

1 நாளாகமம் 17:1-15

கர்த்தர் தாவீதிற்கு வாக்குறுதியளித்தல்

17 தாவீது, தன் வீட்டிற்குச் சென்ற பிறகு, அவன் தீர்க்கதரிசி நாத்தானிடம், “பார், நான் கேதுரு மரங்களால் ஆன வீட்டில் இருக்கிறேன். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியோ கூடாரத்தில் இருக்கிறது. எனவே தேவனுக்காக நான் ஒரு ஆலயம் கட்ட விரும்புகிறேன்” என்றான்.

நாத்தான் தாவீதிற்கு, “நீர் என்ன விரும்புகிறீரோ அதனைச் செய்யும், உம்மோடு தேவன் இருக்கிறார்” என்று பதிலுரைத்தான்.

ஆனால், அன்று இரவு தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது. தேவன்,

“போய் எனது தொண்டனான தாவீதிடம் கூறு: ‘தாவீது, எனக்காக ஆலயம் கட்ட வேண்டியவன் நீயல்ல. 5-6 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு வீட்டிலும் வசித்ததில்லை. நான் கூடாரத்துடனேயே திரிந்து கொண்டிருந்தேன். இஸ்ரவேலர்களுக்காகச் சிறப்பான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள், எனது ஜனங்களின் மேய்ப்பர்களைப் போன்றவர்கள். இஸ்ரவேலுக்குள் நான் பல்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தபோது, நான் அந்தத் தலைவர்களிடம் எனக்குக் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டுமாறு சொன்னதில்லை. எனவே நீங்கள் ஏன் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டவில்லை?’ என்று அவர்களை நான் ஒரு பொழுதும் கேட்டதில்லை.

“இப்போது, இவற்றை என் தொண்டனான தாவீதிடம் கூறு: அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘நீ, வயல்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். என் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உன்னை ராஜாவாக்கினேன். நீ எங்கே போனாலும் அங்கெல்லாம் நான் உன்னோடு இருந்தேன். நான் உனக்கு முன்னால் போய் உன் பகைவர்களை அழித்தேன். இப்போது, உன்னைப் பூமியிலேயே மிக புகழ்ப்பெற்றவர்களில் ஒருவனாக ஆக்குவேன். இந்த இடத்தை நான் என் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் இதில் மரங்களை நடுவார்கள். அம்மரங்களுக்கு அடியில் சமாதானத்தோடு இருப்பார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். தீயவர்கள் முன்புபோல அவர்களுக்குத் தீங்கு செய்யமாட்டார்கள். 10 பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன்.

“‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன். 11 நீ மரித்த பிறகு, உன் முற்பிதாக்களோடு சேருவாய். பிறகு, உன் சொந்த குமாரனைப் புதிய ராஜா ஆக்குவேன். அவன் உனது குமாரர்களில் ஒருவன். அவனது அரசைப் பலமாக்குவேன். 12 உனது குமாரன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். நான் உனது குமாரனின் சந்ததியை என்றென்றும் ஆட்சி செலுத்தும்படி செய்வேன். 13 நான் அவனது தந்தையாக இருப்பேன். அவன் எனது குமாரனாக இருப்பான். உனக்கு முன்பு சவுல் ராஜாவாக இருந்தான். நான் அவனுக்கு அளித்த ஆதரவை நீக்கினேன். ஆனால் நான் உன் குமாரன் மீது கொண்ட அன்பை நிறுத்தமாட்டேன். 14 நான் அவனை எனது ஆலயத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்றென்றும் பொறுப்பாளியாக்குவேன். அவனது ஆட்சி என்றென்றும் தொடர்ந்திருக்கும்!’” என்றார்.

15 நாத்தான் தான் கண்டத் தரிசனத்தை தாவீதிடம் கூறினான். தேவன் சொன்னதையும் கூறினான்.

வெளி 22:1-9

22 பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை.

தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் ராஜாக்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர்.

அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார். இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.

நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center