Revised Common Lectionary (Complementary)
95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
2 கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
3 ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
4 ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
5 சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
6 வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
7 அவரே நமது தேவன்!
நாம் அவரது ஜனங்கள்.
அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
13 இது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான்.
14 ஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான்.
15 பிறகு அவன் ராஜாவிடம் வந்து நின்றான். ராஜாவும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான்.
16 ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான்.
17 அதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான்.
18 ஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான்.
19 ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர். 20 கர்த்தர், ‘உங்களில் யாரேனும் ராஜா ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. 21 இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’ 22 கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான்.
23 மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான்.
மீட்கப்பட்டவர்களின் பாடல்
14 பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது.
2 பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. 3 மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை.
4 அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். 5 இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று தேவதூதர்கள்
6 பிறகு, இன்னொரு தேவதூதன் உயரே காற்றில் பறந்து வருவதை நான் பார்த்தேன். பூமியிலே வாழ்கிற ஒவ்வொரு குல, தேச, மொழி, இனத்தவருக்கும் அறிவிக்கும்படியான நித்திய நற்செய்தியை அத்தூதன் வைத்திருந்தான். 7 அவன் உரத்த குரலில், “தேவனுக்கு பயப்படுங்கள். அவருக்கு புகழ் செலுத்துங்கள். அவர் எல்லா மக்களுக்கும் நீயாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்திருக்கிறது. தேவனை வழிபடுங்கள். அவர் பரலோகத்தைப் படைத்தார். பூமியையும், கடலையும் நீரூற்றுக்களையும் படைத்தார்” என்றான்.
8 பிறகு இரண்டாம் தேவதூதன் முதல் தூதனைப் பின்தொடர்ந்து வந்தான். அவன், “அவள் அழிக்கப்பட்டாள். பாபிலோன் என்னும் மாநகரம் அழிக்கப்பட்டது. அவள் தன் வேசித்தனமானதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லா தேசங்களுக்கும் குடிக்கக் கொடுத்தாள்” என்றான்.
9 மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். 10 அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான். 11 அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான்.
2008 by World Bible Translation Center