Revised Common Lectionary (Complementary)
முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
9 என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
2 நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.
உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
3 என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.
ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
4 நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.
கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர்.
எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
5 பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.
உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
6 பகைவன் ஒழிக்கப்பட்டான்!
கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன.
அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.
7 ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.
கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார்.
உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
8 உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.
எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
9 பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.
அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர்.
கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.
10 உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.
11 சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.
கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள்.
12 உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார்.
அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர்.
கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
“கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”
யோபு எலிப்பாசுக்குப் பதிலளிக்கிறான்
16 அப்போது யோபு பதிலாக,
2 “நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன்.
நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
3 உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை!
ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
4 எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால்
நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும்.
நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி,
என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.
5 நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி
உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.
6 “ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது!
ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.
7 தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர்.
என் குடும்பம் முழுவதையும் அழித்தீர்.
8 நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர்.
அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.
9 “தேவன், என்னைத் தாக்குகிறார்,
அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார்.
தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார்.
என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.
10 ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து,
என் முகத்தில் அறைகிறார்கள்.
11 தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார்.
அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
12 எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்!
ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்!
தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.
13 தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள்.
அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார்.
அவர் இரக்கம் காட்டவில்லை.
என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.
14 மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார்.
யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.
15 “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.
16 அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
17 நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன.
என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.
18 “பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே.
நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.
19 இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள்,
மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.
20 என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில்
என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
21 நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று
எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!
நல்ல வேலைக்காரரும் தீய வேலைக்காரரும்
(லூக்கா 12:41-48)
45 “புத்தியுள்ள நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்? தன் மற்ற வேலைக்காரர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும் வேலைக்காரனை எஜமானன் நம்புகிறான். எஜமானனின் நம்பிக்கைக்குரிய அவ்வேலைக்காரன் யார்? 46 அவ்வேலைக்காரன் எஜமானன் வரும் நேரத்தில் தன் வேலையை சரியாகச் செய்கிறதைக் கண்டால் அவ்வேலைக்காரன் மகிழ்ச்சியடைகிறான். 47 நான் உண்மையைச் சொல்கிறேன். தனக்குரிய எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் அந்த வேலைக்காரன் வசம் ஒப்படைப்பான்.
48 “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்? 49 உடன் வேலைக்காரர்களையெல்லாம் அடித்து உதைத்து எல்லா உணவையும் உண்டுவிட்டு தன்னைப் போன்றவர்களுடன் உண்டு குடிக்க முனைவான். 50 அவன் எதிர்ப்பாராத நேரத்தில் எஜமானன் வருவான். 51 பின்னர் அவ்வேலைக்காரனைத் தண்டிப்பான். மாயமானவர்களின் இடத்திற்கு அவனை அனுப்பி வைப்பான். அங்கே உள்ளவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையினால் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பார்கள்.
2008 by World Bible Translation Center