Revised Common Lectionary (Complementary)
முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
9 என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
2 நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.
உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
3 என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.
ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
4 நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.
கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர்.
எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
5 பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.
உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
6 பகைவன் ஒழிக்கப்பட்டான்!
கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன.
அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.
7 ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.
கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார்.
உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
8 உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.
எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
9 பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.
அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர்.
கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.
10 உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.
11 சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.
கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள்.
12 உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார்.
அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர்.
கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
“கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”
நான்கு குதிரைகள்
7 தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் குமாரன் பெரகியா. இவனது குமாரன் சகரியா.) இதுதான் செய்தி.
8 இரவில், நான் ஒரு மனிதன் சிவப்புக் குதிரையில் ஏறி வருவதைப் பார்த்தேன். அவன் பள்ளத்தாக்கில் இருந்த நறுமணப் புதருக்குள் செடிகளுக்கிடையே நின்றான். அவனுக்குப் பின் சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன. 9 நான், “ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?” என்று கேட்டேன்.
பிறகு என்னிடம் பேசின தேவதூதன், “இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்” என்றான்.
10 பிறகு புதருக்குள் நின்ற அந்த மனிதன் “கர்த்தர் இந்தக் குதிரைகளைப் பூமியில் அங்கும் இங்கும் போவதற்காக அனுப்பினார்” என்றான். 11 அதன் பிறகு நறுமணப் புதருக்குள் நின்ற கர்த்தருடைய தூதனிடத்தில் குதிரைகள், “நாங்கள் பூமி முழுதும் சுற்றித்திரிந்தோம், எல்லாம் அமைதியாக இருக்கிறது” என்றன.
12 பின்னர் கர்த்தருடைய தூதன், “கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்” என்றான்.
13 பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.
14 பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன்.
15 நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன்.
நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது
என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன்.
ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின.”
16 எனவே கர்த்தர் கூறுகிறார்:
“நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன்.
அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.”
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்.”
17 தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும்.
நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன்.
நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’
என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
யூதர்களும் பாவிகளே
2 மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். 2 இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். 3 அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? 4 தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.
5 நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். 6 ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். 7 சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். 8 மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். 9 முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10 முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11 தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.
2008 by World Bible Translation Center